எழுத்து, ஓவியம், தெருக்கூத்து, நாடகம், பாடல், சினிமா என கலை எந்த பரிமாணத்தில் இருந்தாலும் அது இயல்வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருந்து வந்துள்ளது. மகிழ்ச்சி, துக்கம், பெருமை, கோரிக்கை என உணர்வுகளை ஒத்திசைத்து வெளிப்படுத்தும் ஆயுதமாகவே பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒளியும் ஒலியும் இணைந்த நாட்கள் முதல் சினிமா அதில் முன்னோடியாகிவிட்டது. ஏலக்காய் அறுவடை செய்யும் குடும்பத்தின் எளிமையான வாழ்க்கையை, மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை அருகில் இருந்து பார்க்கும் உணர்வை சினிமாவைத்தவிர அவ்வளவு அழுத்தமாக நமக்கு வேறு எதுவும் கடத்தியிருக்க முடியாது.
அதுபோலவே வரலாறும். இன்னும் சொல்லுவதென்றால் வரலாற்றின் சாட்சியாகவே பல சிறந்த படைப்புகள் சினிமாவில் இருக்கிறது. அதுபோன்ற மறந்துவிடக்கூடாத ஒரு வரலாற்றின் சாட்சி தான் 'ஜெய் பீம்'. நல்ல படைப்பாளியை, மனிதர்களை அடையாளப்படுத்தி காட்டுவதிலும் வெகு ஜனத்திடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் விகடன் என்றுமே நம்பர் ஒன். நீதியரசர் சந்துரு ஒய்வு பெற்ற போது அவரை பற்றி, அவரது சாதனைகளை எடுத்துரைத்து ஒரு கவர் ஸ்டோரியுடன் பிரியாவிடை அளித்திருந்தது. அந்த கட்டுரை வராவிட்டால் என்னளவில் அவர் மற்றுமொரு நீதிபதியாகவே இருந்திருப்பார். எளிய மக்களுக்கு உதவும் நீதியரசியராக எனக்கு அறிமுகமாயிருக்கமாட்டார்.
ரியல் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா. கதையின் முக்கியத்துவம் கருதி தயாரிக்க முன்வந்து காத்திரமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இருளர் ராஜ்கண்ணுவாக மணிகண்டன் கச்சிதமான தேர்வு. திரைக்கதையின் சுவாரசியம் பொருட்டு வழக்கின் முக்கிய முடிச்சுகள் சாட்சிகள் விசாரிக்கப்படும் வரிசையிலேயே அவிழ்க்கப்படுகின்றன. மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு விறுவிறுப்பான ஒரு கோர்ட்ரூம் டிராமா. அதுவும் நிஜ நிகழ்வுகள் என்பது நம்மை கலங்கடிக்கின்றது.
படத்தின் ஆரம்ப வசனங்களே பார்வையாளராகிய நம் மீது அணுகுண்டை எரிகிறது. ஆதிக்க சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி பெயர்களை வெளிப்படையாக பேசிய அளவில் கவனம் ஈர்க்கிறது. போய் கேசுக்காக போலீஸ் நடத்தும் பேரம், அரசாங்க கட்டமைப்பின் அவலம். "குடிசையை கொளுத்த எவ்வளவு நேரம் ஆகும்" போன்ற வசனங்கள் ஆதிக்க சாதியின் மனோபாவத்தை தைரியமாக துகிலுரிக்கின்றன. வீட்டில் ஒளிந்திருக்கும் பாம்பை பிடிக்க தேவைப்படும் இருளர்கள் தோளைக்கூட தொடக்கூடாது, திருட்டு வழக்குகளில் முகாந்திரம் இல்லாமல் இருளர்களை பிடித்துப்போடுவது காவல்துறைக்கு ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது என்பதும், சாதியை மேற்கோள்காட்டி திருட்டுப்பட்டம் கட்டுவது, மேலும் கேட்க நாதி இல்லாத காரணத்தால் இருளர்கள் மீது பொய் வழக்கு போடுவது போன்றவையும் சகிக்க முடியாத சமூக அவலங்கள். அதை எதிர்த்து எதிர்வினையாற்றாமல் மெளனமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அந்த குற்றங்களுக்கு துணை போனவர்கள்தாம். வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த இவர்களின் வரலாற்றை மறந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்துகொள்ளப்படவேண்டிய செய்தி. இதுபோன்ற சமூக அவலங்களை ஆராய்ந்து தெளிவுபடுத்துவதில் முனைவர்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் மிகவும் பயன்டுகின்றன.
சட்டம் மட்டும் இயற்றப்படவில்லையென்றால் சமூதாயத்தில் இன்றளவும் பலமக்கள் சாதனை புரிய வழியில்லாமல் ஒடுக்கப்பட்ட மனிதர்களாகவே இருந்திருப்பார்கள். நீதிபதி சந்துரு போன்ற பல தனிப்பட்ட மனிதர்களின் அர்பணிப்பான உழைப்பே மக்களுக்கு தைரியம் அளிக்கும் ஆயுதமாக இருக்கிறது. 1995இல் இருளர் வாழ்வுரிமை காக்கும் சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. எங்கெங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டார்களோ அங்கெங்கெல்லாம் தங்களை போராடி மீட்டெடுக்க சங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதற்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் உழைப்பை நன்றியுடன் நினைவுகூறும் பொருட்டே 'ஜெய் பீம்' என்கிற தலைப்பு. தமிழ் மொழியில் கதைக்கேற்ற தலைப்புடன் வெளிவந்த சினிமாவில் ஆகச்சிறந்த தலைப்பாக இதை கொள்ளலாம்.
சட்டத்தின் மூலம் நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையை தூவியிருப்பது இந்த வழக்கின் மிகப்பெரிய வெற்றியாகும். அதை காட்சிப்படுத்தி அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்த விதத்தில் ஜெய் பீம் சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிபெற்றிருக்கிறது
மதமும் சாதியும் ஒழிந்து மனிதம் மலரட்டும்.
ஜெய் பீம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக