ஆறு மெழுகுவர்த்திகள் பேசுபொருளும் டாக்டர் படத்தின் கருவும் ஒன்றே. ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில், தொலைந்துபோன மகனைத்தேடி ஷ்யாம் செல்லும் அந்த பயணம் எவரையும் புரட்டிபோட்டுவிடும் வலி நிறைந்தது. இறுதிவரையோ அல்லது மறுமுறையோ பார்க்கும் தைரியம் இல்லாதது. அதேபோலத்தான் டாக்டரில் தொலைந்துபோன சிறுமியைத்தேடி சிவகார்த்திகேயன் மற்றும் டீம் தேடலைத்தொடங்குகிறது. தொலைந்துபோன நிமிடம் முதல் மீளப்படும் தருணம் வரை உடைந்துபோகும் மனக்கிளர்ச்சியைத்தரும் பல காட்சிகளில் குபீர் சிரிப்பு வரவைத்து ஆச்சர்யப்படுத்தினால் அதுதான் டாக்டர்.
இயக்குனர் நெல்சனின் முதல் படமான 'கோலமாவு கோகிலா' படத்தில் வந்த பல கதாப்பாத்திரங்கள் இதிலும். அதிலும் ஆரம்ப காட்சிகளிலேயே கிங்ஸ்லியை களத்தில் இறக்கிவிட்டு அவரை வாள் வாள் என்று கத்த வைத்தது எரிச்சலைத்தந்தாலும் சில நிமிடங்களிலேயே அவருடைய நடிப்பு பாணிக்கு நாம் accustom ஆகிவிடுகிறோம். "வாரண்ட் இருக்கா?" என்ற முதல் டயலாக்கிலிருந்து இறுதியில் சிலுவையில் தொங்கும் வரை யோகி பாபு வயிற்றை புண்படுத்துகிறார். நியாய தர்மமே இல்லாமல், தொலைந்து போன குழந்தை எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கும் இடத்தில் கூட நம்மை சிரிக்கவைத்துவிடுகிறார்கள். இந்த படத்தில் "கடைசி வரை மருந்துக்குக்கூட நீங்கள் சிரிக்க கூடாது" என்று சொல்லித்தான் சிவகார்த்திகேயனை கூட்டி வந்திருப்பார்கள் போல. மனுஷன் 'சிரிச்சா போச்சு' ரவுண்டில் பங்கேற்கும் போட்டியாளர் போல இறுதி வரை ஒரு சிறு புன்முறுவல் கூட இல்லை. "செண்டிமெண்ட் சீன்லேயே சிரிக்க வைச்சாச்சு, நடுவுல இந்த ஒரு டூயட் வுட்டா ஒன்னும் தப்ப நினைக்க மாட்டாங்க" என்றெல்லாம் எண்ணாமல், அந்த 'செல்லம்மா' பாடலை இறுதியில் வைத்ததற்கு இயக்குனரின் இளகிய மனதை மனதார பாராட்டலாம். "என்னது, இளமை புதுமை அர்ச்சனா ஹீரோயினோட அம்மாவா?", என்று சற்று ஷாக்கான நேரத்தில் அண்ணி தான் என்று ஆற்றுப்படுத்தியிருக்கிறார்.
இதயமே அதிரும் வகையில் BGM. பல இடங்களில் இரைச்சல். ராணுவ டாக்டராக கதாநாயகனை எதற்கு வடிவமைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு சில ரவுடிகளை ஊசி போட்டு பிடித்தது போல அந்த இரட்டையர்களை பிடித்திருக்கலாம். மெட்ரோ tunnel பைட்டுக்காக ஊசி குத்தும் ஐடியாவை பரணில் தூக்கிப்போட்டுவிட்டார்கள். இரண்டாம் பாதியில் வில்லன் வினைய்யை எப்பொழுதோ மடக்கியிருக்கலாம். குழந்தைகளையும் எப்பொழுதோ காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இதுபோன்ற பல 'லாம்'களை தவிர்த்துவிட்டு பார்த்தால், ஆரம்பம் முதல் இறுதிவரை வெடிச்சிரிப்பிற்கு நூறு சதவீதம் கியாரண்டீ. பிளாக் காமெடி வகையறாவில் கோலமாவு கோகிலா பவுண்டரி என்றால் டாக்டர் படம் சிக்ஸர். இதுபோன்ற ஒரு சீரியசான கதை களத்திற்கு சற்றும் எதிர்பாராத வகையில் பிளாக் ஹ்யுமரை நிறைவாக அள்ளித்தெளித்திருக்கும் நெல்சனின் திரைக்கதையில் அவரது உழைப்பு மிளிர்கிறது.
டாக்டர் ஒரு தரமான பேமிலி என்டர்டைனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக