புதன், ஏப்ரல் 17, 2024

அமரன் 2024

 


இந்த புகைப்படம் 2014 இல் எடுக்கப்பட்டது. மேஜர் முகுந்த் வரதராஜனின் இறுதிச் சடங்கின் போது என்னவென்று தெரியாது அவரது குழந்தை அவரது உடலுக்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படம். 

மிகவும் உருக்கமான நாள் அன்று. மனதை என்னவோ செய்தது. அப்பொழுது எழுதியது கீழுள்ள பதிவு. 

அவரது வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வருவது மேஜர் முகுந்துக்கு செய்யப்படும் ஒரு tribute.  

தீவிரவாதிகள் இருக்கும் கட்டிடத்தை சுற்றி வளைத்து ஒரு மணி நேரப் போராட்டம். அவர்களை வீழ்த்த முடியாமல் தவித்த பொழுது, மேஜர் முகுந்த் ஒரு சிறந்த தலைவன் போல் முன்சென்று கட்டிடத்தின் வாசலை தகர்த்து தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினார். அங்கேயே வீர மரணமும் அடைந்தார். விவரமறியா வயதில் பறிகொடுத்த தன் தந்தை எப்படிப்பட்ட ஹீரோவாக இருந்தார், எந்த ஒரு கட்டத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்பதை அவரது குழந்தை ஆஷ்ரேயா தெரிந்து கொள்ளும். ஆறாத வடுவுக்கு மயிலிறகில் ஒரு சிறிய வருடல்.  




அமரன் மற்றும் அதன் டீம் அதை நிறைவேற்றும் என்ற பேராவலில்... 

இனி 2014 மீள். 

....,.................................................... 

தூங்கிவிட்டாள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது ‘அப்பா இன்னொரு கதை?’ என்றாள். 

ஒரு ஊர்ல காக்கா இருந்துச்சாம். 

ம். 

அது காலைல சீக்கிரமா எழுந்துச்சி பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு அப்புறமா சாமி கும்ப்டுட்டு இட்லி சாப்பிடுச்சாம். 

ம். அப்புறம் ஸ்கூல் பேக் எடுத்துட்டு ஆட்டோல கிளம்பிபோச்சாம். ஏ, பி, சி டி படிச்சிட்டுவீட்டுக்கு வந்துச்சாம். 

ம். 

அப்புறமா சாப்டுட்டு பிரிட்ஜ் திறந்து ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து

கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏனோ மேஜர் முகுந்தின் இறுதி அஞ்சலி புகைப்படங்கள் கண்முன் நிழலாடின. அனைத்து போட்டக்களிலும் மேஜர் முகுந்தின் குழந்தை மட்டும் சிரித்து கொண்டிருந்தது. மற்றைய இறப்பு போல வெடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது துக்கத்தை மனதினுள் இறுக்கிக்கொண்டு ஒரு அரசின் மாபெரும் நிகழ்வாக நடைபெறும். படார் படாரென்று துப்பாக்கி குண்டுகள் முழங்க ஏதோ வான வேடிக்கை போன்று அதனை அக்குழந்தை பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த குழந்தை அழுது விடக்கூடாது என்பதற்காக தன் மகனின் இறுதி அஞ்சலியிலும் துக்கத்துடனே சிரிக்க முயன்று கொண்டிருந்தார் வயதான அப்பா. ஒளிவிழந்த மனைவியின் முகம். ஒருவேளை அன்றிரவு கதை கேட்க வேண்டுமென்று தோன்றினால் யாரிடம் கேட்கும் என்று கேள்வி எழுந்த போது, கண்ணில் நீர் கோர்த்ததை தவிர்க்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சவப் பெட்டியின் அருகிலேயே குழந்தை விளையாண்டு கொண்டிருந்தது மனதை உருக்கும் நிகழ்வாக இருந்தது. 

காக்கா ஆரஞ்ச் ஜூஸ் குடிச்சிட்டு.... 

பாப்பா.....பாப்பா 

தூங்கிவிட்டிருந்தாள்

 

 

 

 

கருத்துகள் இல்லை: