வெள்ளி, செப்டம்பர் 08, 2023

சாவிமாட்டிகள்

 

விகடனில் வெளிவந்திருந்த சிறுகதை. ஆசிரியர் நா.கோகிலன்.

நான்கு மணி நேரம் தினமும் பயணம் செய்யும் சென்னை லோக்கல் ட்ரெயின் பல போதனைகளைத் தந்துள்ளது. முன்னமே நான் கூறியது போல் சென்னையின் போதி மரம் இந்த லோக்கல் ட்ரெயின் தான். அரை மணி நேரம் தான் பயணிப்பீர்கள் என்றாலும் ஏறியதில் இருந்து இறங்கும் வரை அது உங்களுக்குள் கடத்தும் உணர்வுகள் பல.  மகிழ்ச்சி, நெகிழ்வு, புன்முறுவல், ஆதங்கம், கோவம், பொறாமை, பச்சாதாபம், எள்ளல், சோகம், மிதப்பு, நாணம் என இன்னும் பல உணர்வுகள்...அப்பப்பா ரோலர் கோஸ்டர் போன்று இருக்கும்.

ரயிலில் பயணம் செய்து வியாபாரம் செய்யும் தினசரி வியாபாரியான ஒரு பெண்ணைப் பற்றிய சிறுகதை தான் சாவிமாட்டிகள்.



ரயிலில் ஏறும் அவளுக்கு மாதாந்திர தொந்தரவு வருவது போன்று வயிறு வலிக்க ஆரம்பிக்கிறது. 25 ரூபாய்க்கு ஒரு நாப்கின் கூட வாங்க முடியாத அளவுக்குத் தான் அவளது சம்பாத்தியம். தன வாழ்க்கை மாறும் என்கிற நம்பிக்கையில் மற்றொரு ரயில் வியாபாரியான ஒருவனைத் திருமணம் செய்திருப்பாள். ஆனால் திருமணத்திற்குப் பின் அவன் குடிகாரன் ஆகி விடுகிறான். சாவிக் கொத்துக்களை விற்று இன்று எப்படியாவது பைசாவைத் தேற்றிவிட வேண்டும் என்று ஒவ்வொரு வண்டியாக ஏறுகிறாள். இறுதிவரை போனியாகவில்லை. சற்று நேரத்தில் தொடையிடுக்கில் பிசு பிசுப்பாக உணர ஆரம்பிக்கிறாள். அந்த நிலையில் நிறு கொண்டிருக்கும் ரயிலின் கழிவறையை, ஸ்டேஷன் வெயிட்டிங் ஹால் கழிவறை, ஸ்டேஷனில் இருக்கும் ஐந்தாறு தண்ணீர் குழாய்கள் என அவள் எடுக்கும் பிரயத்தனங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் வீணாகிறது. ஸ்டேஷனில் இருக்கும் குழாய்களில் ஏன் தண்ணீர் வரவில்லை என்பதற்கான காரணமாக அரசாங்க அமைப்பில் உள்ள சுரண்டலை சந்தடி சாக்கில் எழுத்தாளர் சாடியிருப்பது ரசிக்க வைக்கிறது. அம்பது ரூபாய்க்கு கடன் கேட்க முயலுகிறாள். கிடைத்த ஐம்பதையும் சதை தின்னும் போலீஸ் பிடுங்கி கொள்கிறது. கையறு நிலையில் தரையில் தேங்கி நிற்கும் தண்ணீரை உபயோகியிக்க லாவகமாக குனியும் தருவாயில் போலீஸ் வந்து அவளை கஞ்சா விற்பவளாக சந்தேகித்து பிடித்துச் செல்கிறதாக கதை முடிகிறது. படித்து முடித்தவுடன் சற்று அசை போடுகையில், ரயிலில் ஏறியதில் இருந்து போலீஸ் இழுத்து செல்லும் வரை மல்லிகாவின் தோள் பின்னே நின்று நாம் அனைத்தையும் பார்த்தது போன்றதொரு உணர்வைக் கொடுக்கிறது. எழுத்தாளரின் மொழி நடைக்கு இது ஒரு சான்று.

பெண்களின் மாதாந்திர பிரச்சினையை அணுகியது கூட ஆச்சர்யம் தரவில்லை. அது ஒரு ஆணால் புரிந்துகொள்ளப்பட்டு பொதுப்புத்தியில் உரைக்கும் அளவுக்கு இலக்கியமாக மாறி நிற்பது எதிர்பாலினத்தின் மேல் கொண்ட மரியாதைக்கு சமகாலத்தின் சாட்சியாக நிற்கிறது என்றே இதை அவதானிக்கிறேன்.

ரயில் தண்டவாளத்தின் நடுவில் கையறு நிலையில் நிற்கும் நேரத்தில் வட்டிக்கு கடன் கொடுத்தவன், கணவனுக்கும் கடன் கொடுத்தவள் என்று மாறி மாறி இவளது நிலைமை புரியாமல் அலைபேசிக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. ஏதும் செய்ய முடியாமல் செல்போனை அணைத்து வைக்கிறாள். அப்பொழுது 'ஒளியிழந்த கைப்பேசியை பார்த்த போது தான் அவளுக்குள் ஒளி பிறந்தது" என்பதும், பெண் போலீஸ் அவளது உடையை உருவி விசாரிக்கும் நேரத்தில் 'கண்ணீர் மட்டுமே அவளது உடலை மறைத்தது' போன்ற வசனங்கள் மிகவும் ரசிக்க வைக்கின்றன.

விளிம்பு நிலை மனிதர்களின் அவலங்களை சாட்சி படுத்திய வகையில் இது ஒரு நெகிழ்வான மற்றும் தவிற்க முடியாத சிறுகதை

வாழ்த்துக்கள் மற்றும் நன்றியும் நா.கோகிலன்

 

கருத்துகள் இல்லை: