வெள்ளி, செப்டம்பர் 22, 2023

அநீதி

 

பல உணர்வுகளை அநீதி கடத்தியிருந்தாலும் என்னளவில் மூன்று விஷயங்களை கவனிக்க முடிந்தது. 

முதலாவது, பெற்றோரைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து இங்கு வாடும் பெற்றோர் என இருவரது வாழ்க்கையின் காட்சியமைப்பு. வயதான அந்த பாட்டி இறக்கும் பொழுதில் குழந்தைகள் அருகில் இல்லாதது, அவரது இறந்த உடலைப் பாதுகாக்க தனியார் பிணக்கிடங்கு என யதார்த்தமானப் பதிவு. என்னதான் பாட்டி மிடுக்காகவும் படோபட வாழ்க்கையை வாழ்ந்தாலும் பேரன் பேத்திகளை பார்க்க முடியாத அந்த பரிதவிப்பு உண்மைக்கு மிக அருகில் என்றால் மிகையில்லை. எழுத்தாளர் இமையம் எழுதிய 'பிணத்துக்குச் சொந்தக்காரி' சிறுகதை நினைவில் வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

 


இரண்டாவது, கதையின் கதை பொருளாக எடுக்கப்பட்டிருக்கும் food டெலிவரி வேலை. food டெலிவரி ஆட்களை வைத்து வளர்ந்த ரெஸ்டாரன்ட்கள் ஒரு கட்டத்தில் கொத்தடிமைகள் போல் நடத்துகின்றன மற்றும் அவர்களை கொத்து கொத்தாக வேலை நீக்கம் செய்கின்றன. இதுவரை யாரும் பேசாத விஷயம் தான் என்றாலும் food டெலிவரி வேலையாட்களுக்கு குரல் எழுப்பும் அளவுக்கு காத்திரமான காட்சி அமைப்புகள் இல்லை. படத்தின் மையக்கரு இது இல்லை. பால்ய காலத்தில் தந்தை பட்ட அவமானங்களை தன் வாழ்நாள் முழுவதும் தூக்கி சுமந்து கொண்டிருக்கும் மனப் பிறழ்வு கொண்ட இளைஞனின் ஆத்திரமே அநீதியின் கரு. அர்ஜுன் தாஸ் அந்த வகையில் பொருத்தமான தேர்வு. இவரது அந்தகாரம் பற்றி தனிப் பதிவு எழுதியே ஆக வேண்டும்.

மூன்றாவது, காளி வெங்கட். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்திற்கு என்று அளந்து வைத்தாற்போன்று சில பேர் இருப்பார்கள். தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் இன்னும் சிலர். அந்த வரிசையில் காளி வெங்கட். 'The silence of the lambs' என்கிற படத்தில் வெறும் இருபது நிமிடங்கள் மட்டுமே வந்து ஆஸ்கர் அவார்டை தட்டிச் சென்றிருப்பார் அந்தோனி ஹாப்கின்ஸ். அதற்கு சற்றும் குறையில்லாத தாக்கத்தை அநீதி படத்தில் காளி வெங்கட்டிடம் உணர முடிந்தது. அர்ஜுன் தாஸின் தந்தையாக பதினைந்து நிமிடங்கள் மட்டுமே வந்திருப்பார். 'தங்கப்பிள்ளை தங்கப்பிள்ளை' என்று அவர் தன் குழந்தையை கொஞ்சுவது அர்ஜுனுக்கு மட்டும் அல்ல நம் எல்லோருக்குமே அலாதி இன்பம். மளிகை காட்சி மட்டும் கொஞ்சம் சென்டிமென்ட் தூக்கல். இருந்தாலும் காளி வெங்கட்டின் அபிரிதமான கதாப்பாத்திர உருமாற்றம் என்பது அரிதினும் அரிது. பொக்கிஷம். ஏற்கனவே மெர்சலில் வரும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை காட்சிகளிலேயே பிழிந்து எடுத்திருப்பார். இங்கு அதை விட பல படிகள் மேலே. நிறைந்து நிற்கிறார். படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும் தாக்கம் குறையவில்லை. காளி வெங்கட்டின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு உங்களிடம் பல கலவையான உணர்வுகளை வெளிக்கொணர்ந்து கண்ணீர் வரவழைத்து விடும். சமீப காலத்தில் வந்த The best performance, காளி வெங்கட்.

உணர்வுகளை பாங்காக கடத்திய விதத்தில் நம் மனதினுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார் இயக்குனர் வசந்தபாலன்

 Arjun Das Kaali Venkat Vasanthabalan #Aneethi #KaaliVenkat #arjundas Vasanta Balan

கருத்துகள் இல்லை: