வெள்ளி, ஆகஸ்ட் 11, 2023

காது கேட்டுட்டாலும்

ஊர்ல பெரியப்பா இருந்தார். பார்ட்டி செம ஷார்ப். எப்பவுமே ஒரு பத்து ஸ்டெப் முன்னாடி தான் இருப்பார். நடையை சொல்லல. எல்லாத்திலேயுமே. நமக்கு தான் நமக்கு முன்னாடி ஒருத்தன் இருந்தா பிடிக்காதே. இந்த காரணத்துக்காகவே சொக்காரு எல்லாருக்கும் அவரு மேல ஒரு காண்டு. 

ஒய்வு பெற்று ஒரு கட்டத்துல அவருக்கு காது கேக்காம போச்சு. மனுஷன் அப்பவும் தளரல. மெஷினை வாங்குனார். மாட்டினார். இன்னும் ஸ்பீடா ஆயிட்டார். ஏன்? சில நேரம் சத்தமா பாட்டு பாடி பக்கத்துல இருக்கிறவன துவம்சம் பண்ணுவார். சொல்லப்போனா இன்னும் ஷார்ப் ஆனாரு. சில நேரம் அப்படி காமிக்கவும் செய்வார். 

ஒரு சமயம் அண்ணன் பையனுக்கு மொட்டை போட கோவிலுக்கு போயிருந்தோம். அது அவரு மெஷின் வாங்குன புதுசு. பஸ்ல நம்ம ஒன்னு கேட்டா கோக்கு மாக்கா 'ஆங்' 'என்னது' அப்டினு சத்தமா கேட்டுட்டு வேற ஏதாவது பதில் சொல்லுவார். பஸ்ல வந்தவங்களுக்கு எல்லாம் ஒரே குஷி. சும்மா இருந்த அவரை வம்பிழுத்து அவரு பாக்காத நேரம் நமுட்டு சிரிப்பு சிரிச்சிட்டே வந்தாங்க. 

அந்த ட்ரிப்ல போக்குவரத்து, டீ, சாப்பாடு, தங்கல் எல்லாமே பெரியப்பா செலவு தான். பேரனாச்சே. சாப்பாடுக்கு ஒரு எடத்துல இறங்குறப்போவும் அங்க வச்சும் அவரை ஓட்டிடருந்தாங்க. அப்போ அவரு தம்பி அதாவது சித்தப்பா இவர்ட்ட கேக்குறாரு. 

'அண்ணே, காது கேக்காம எப்படி சமாளிக்கிறீக?' 

'சத்தமா பேசல. ஒன்னும் கேக்க மாட்டேங்குது

'இல்லண்ணே. காது கேக்காம எப்படி சமாளிக்கிறீங்க. ஒன்னும் சிரமமா இல்லையா?' 

'ஒரு புண்ணாகும் இல்ல. இப்ப தாம்ல நிம்மதியா இருக்கு. எம்பாட்டுக்கு நிம்மதியா வரேன். ஒரு பய வம்பு தும்புக்கு போக வேணாம். வசவு பேச்சு கேக்க வேணாம். பேசாம திங்குனு இருக்கேன்.

'அது சரிதான். ஒரு வகைல பாத்தா உங்களுக்கு நிம்மதி தான் போங்க.'

'ஆனா ஒன்னுல. மெஷின் மாட்டினப்புறம் காது நல்லா கேக்கும். சில பயலுவ எனக்கு காத்து கேக்காதுனுட்டு எசகு பிசகா ஏதாவது பேசுவானுவோ. அமைதியா இருந்துட்டு என்ன பேசுதாணுவோன்னு கேட்டுப்பேன். அப்பறம் வகையா வச்சி செய்யத்தான்'

'ஓஹோ'

'ஆமா. இப்போ நீ பின்னாடி நின்னுட்டு என்ன சொன்ன?'

'என்ன சொன்னேன்?'

'அவ உன்ன பார்த்து அண்ணன்கிட்ட ஒரு தடவ கேளுங்கா. நீ என்னடான்னா இந்த ஆக்கங்கெட்ட கூவைக்கு காது கேட்டுட்டாலும்னு' சொல்ற. அதுவும் எனக்கு கேட்டுச்சு. இப்போ என்ன செய்த; சாப்பாட்டுக்கு நீ காசு கொடுத்துட்டு பஸ்ல ஏறு'னு சொல்லிட்டு முன்னாடி போய்ட்டார்.

ஒரு பய அதுக்கப்புறம் வாய திறக்கலையே.

கருத்துகள் இல்லை: