ஸ்டாண்ட் அப் காமெடியை ரீல்ஸிலும் ஷார்ட்ஸிலும் கண்டதுண்டு. இதுவரை நேரில் பார்த்ததில்லை. அந்த குறை இன்று தீர்ந்தது.
பட்டர்கப் ஈவென்ட்ஸ் முன்னெடுப்பில் கல்யாணி கவரிங் மற்றும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் கோ ஸ்பான்சர் செய்த ராம்குமாரின் காமெடி கலாட்டா கண்டு களித்தோம்.
திருநெல்வேலியில் பிறந்தவர் ராம்குமார். தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் பயின்று, திருநெல்வேலி அரசு பொறியியற் கல்லூரியில் டிகிரி முடித்து Ford, hexaware போன்று கிட்டத்தட்ட ஆறேழு கம்பெனிகளில் பணிபுரிந்த பின் 'this is not my cup of tea' என்று புரிந்து கொண்டு தனது உயிர் நாடியான பேச்சையே தொழிலாக தகவமைத்துக்கொண்டுள்ளார் என்றால் சாலப்பொருந்தும். ஆமாம். பள்ளியில் இருந்தே பட்டிமன்ற பேச்சில் ஆவல் கொண்டு, கலோரியில் அதை கூர்தீட்டியுள்ளார். IT கம்பெனியில் பணிபுரிந்தாலும் ஆங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன் என்பது போன்ற அந்த கனல் இவரைத் தூங்க விடாமல் துரத்திக்கொண்டே இருந்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு இடங்களில் தலை காட்டினாலும் ஒரு கட்டத்தில் பார்த்துக்கொண்டிருந்த பணியைத் துறந்து முழு நேர stand up comedian ஆக வளம் வருகிறார்.
ஷோவைப்பற்றி சிலத் துளிகள்.
நாங்கள் கண்டு களித்தது ஒரு மணி நேர ஷோ. ஷோ ஆரம்பித்தது முதல் இறுதிவரை வாய் பிளந்து வெடிச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தோம் என்றால் மிகையில்லை.
அனைத்து வயதினரும் கலந்து கொண்டிருந்தனர். எட்டு வயது முதல் எழுபது வயது வரை. அனைவரும் ரசித்து சிரித்தனர்.
பொதுவாக stand up comedy ஷோக்களில் ஆடியன்ஸை கேள்வி கேட்டு அவர்களையே கேலி செய்து சில நேரங்களில் சங்கடத்துக்குள்ளாக்கி விடுவார்கள். ராம்குமாரும் ஆடியன்ஸை engage செய்தாலும் எவரையும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கவில்லை. மாறாக அவர்களும் ரசித்து சிரித்தனர்.
முக்கியமாக தற்பொழுதுள்ள stand up comeidanகளில் இவர் ஒருவர் மட்டுமே clean family entertainer என்று சொல்லலாம். டபிள் மீனிங் ஜோக் இல்லவே இல்லை. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் ஒருவர் கூட முகம் சுளிக்கவில்லை.
தாய்மார்கள் கூட்டம் சரிபாதிக்கு மேல். கூட்டத்தை கெட்டியாகப் பிடித்துவிட்டார்.
கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சென்னை, பெங்களூர்ம் ஹைதராபாத், சிங்கப்பூர் என்று பல ஊர்களில் இவர் ஷோக்கள் நடந்துள்ளது. எங்கு நடந்தாலும் அந்த ஊரின் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னை தயார் செய்துகொண்டு மக்களை மனம் விட்டு சிரிக்க வைக்கும் யுக்தியில் தெரிகிறது அவரின் கடும் உழைப்பு. உதாரணமாக IT base இல்லாத ஊர்களில் IT சம்பந்தப்பட்ட ஜோக்குகளை குறைத்துக்கொண்டு ஜனரஞ்சகமான மற்ற ஜோக்குகளை விசிறிவிடுகிறார். மக்களுடன் இவர் கனெக்ட் ஆகிக்கொள்ளும் பாங்கே அலாதியானது.
ஷோ முடிந்த பின் அத்தனை பெரும் காத்திருந்து இவருடன் selfie எடுத்துக்கொண்டது உணர்த்துகிறது இவரின் வெற்றியை.
எத்தனை பேருக்கு தன்னுடைய வேட்கையே தொழிலாக அமையும் வாய்ப்பு கிட்டும்? இருகப்பற்றிக்கொள்ளுங்கள்.
எங்களுடைய உடலையும் மனதையும் லகுவாக்கும் அற்புதப் பணியை மேற்கொண்டிருக்கும் தாங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் ராம்குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக