புதன், ஆகஸ்ட் 30, 2023

மத்தகம் - web series


மத்தகம் என்ற சொல்லுக்கு பொருள் - யானையின் நெற்றி. எந்த காரணத்திற்க்காக இந்த பெயர் வெப் சீரிஸிற்கு சூட்டப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஊரில் உள்ள அனைத்து ரவுடிகளும் பர்த்டே பார்ட்டிக்காக ஒன்று கூடும் இடத்தில் சுற்றி வளைத்து போலீஸ் நின்றால் மத்தகம் வெப் சீரிஸ். சுற்றி வளைத்த பிறகு என்ன செய்யப்போகிறார்கள் என்பது பார்ட் 2 போல.

மிடுக்கான துடுக்கான DC யாக அதர்வா. கேங்ஸ்டராக மணிகண்டன். இவர்கள் இருவருக்குள் நடக்கும் எலியும் பூனையும் விளையாட்டே மத்தகம்.

அது என்னவோ தெரியவில்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருக்கிற காவல் அதிகாரி என்றாலே மனைவியின் அன்பை புரிந்து கொள்ள முடியாத அல்லது எமெர்ஜென்சி காலை கூட அட்டென்ட் பண்ண முடியாத புரிதலுடன் தான் பாத்திரத்தைப் படைக்கிறார்கள். அது போன்ற 999வது காவல் அதிகாரியாக அதர்வா.



மணிகண்டன். ரவுடி படாளம் சேகர் கதாப்பாத்திரம். ட்ரிம் செய்யப்படாத தாடி. குட் நைட் படத்தில் கூட இதுபோன்று தான் இருந்தார். ஆக இதில் மிரட்டும் வில்லனாக நம்மை நம்பவைப்பதற்கு இரண்டு மூன்று எபிசோட் வரை ஆகிறது. முதல் எபிசோடில் இருந்து ஊரில் உள்ள அனைத்து ரவுடிகளையும் பர்த்டே பார்ட்டிக்கு வருமாறு அழைக்கி இல்லை இல்லை மிரட்டுகிறார். எல்லோரும் நவகிரக சுற்றுலா செல்வது போல டெம்போ ட்ராவலரில் ஏறி உட்கார்ந்து கொண்டு மற்ற ரவுடிகளுக்காக வெய்ட் செய்கிறார்கள். பள்ளி சுற்றுலாவில் எல்லா பிள்ளைகளும் பஸ்ஸில் ஏறி விட்டதா என்று கணக்கெடுப்பது போல் ஒரு லிஸ்ட் எழுதி டிக் வேறு.

சிட்டி கமிஷனராக ஒரு பெண் கதாபாத்திரம். மிடுக்கான தோரணை மற்றும் கட்டளைகளுக்கு இயல்பாக பொருந்திப் போகிறார் இராணி. அமைச்சருக்கு நிகராக சரி சமமாக எதிர்த்து பேசும் சீன்கள், அதர்வா மற்றும் இராணி காம்பினேஷன் சீன்கள் ஆகியவை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

ஊழல் மற்றும் ரவுடியிசம் செய்யும் அமைச்சர் கதாப்பாத்திரத்தில் அளவெடுத்தது போல் நச் என பொருந்திப் போகிறார் இளவரசு.

ஐந்து எபிசோட்கள். ஒவ்வொன்றும் நாற்பது நிமிடங்கள். ஒவ்வொரு எபிசோடிலும் இரண்டு மூன்று ரவுடிகள் அறிமுகம் மற்றும் அறிமுகப்படுத்தும் விதம் எல்லாமே விறுவிறுப்பாக இருக்கிறது. அந்த இருநூறு நிமிடங்களும் அதர்வா மற்றும் மணிகண்டன் நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்தாலும் காட்சிகள் வேகமாக நகரும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பது சலிப்படையாமல் இருக்க உதவுகிறது.

திவ்யதர்ஷினி, வடிவுக்கரசி என துணை கதாப்பாத்திரங்கள். முக்கியமாக கவுதம் வாசுதேவ் மேனன் DC இரானியின் கணவனாக வருகிறார். 200 நிமிடங்களில் இரண்டு மூன்று வசனங்கள் மட்டுமே பேசியிருக்கிறார் என்று அதிர்ச்சியடையும் நேரத்தில் இனி நான் நேரடியாக களத்தில் இறங்கப்போவதாக இறுதி எபிசோடில் சூளுரைப்பதுடன் சுபம் போட்டு விடுகிறார்கள்.

மொத்தத்தில் பொலிட்டிக்கல், த்ரில்லர், கேங்ஸ்டர் வகையறாக்களை மிக்ஸ் செய்துவ வித்தியாசமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பார்க்கலாம். 3.5/5

 

கருத்துகள் இல்லை: