ஆனந்த விகடனில் வெளிவரும் விமர்சனம் போல எழுத வேண்டும் என்று ஒரு அவா. முயற்சித்திருக்கிறேன்.
ஒரு சாதாரண மனிதன் அதுவும் அடிதடி சண்டை என்றாலே தெறித்து ஓடும் ஒருவன், ஒரு கட்டத்தில் அவனுடைய காதில் மட்டும் கேட்கும் குரலால் தம் மக்களுக்கு நிகழும் அநீதியை எதிர்த்து போராடும் வீரனாய் எழுவதே மாவீரன் கதை.
சமுதாயத்தில் உள்ள குறைகளைச் சீர்திருத்தும் நோக்கோடு 'மண்டேலா' என்ற அரசியல் நையாண்டி படம் மூலம் தேசிய விருது பெற்று தனது முதல் படைப்பிலேயே கவனம் ஈர்த்த மடோன் அஸ்வினின் இரண்டாவது படைப்பே இந்த 'மாவீரன்'. இதிலும் சமுதாயத்திற்காக குரல் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் என்ற ஹீரோவையும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் மூலம் சூப்பர் ஹீரோவையும் இதில் துணைக்கு சேர்த்து கொண்டு ஒரு அரசியல் கற்பனை படத்தை கமெர்சியல் படமாக கொடுக்க முயன்றிருக்கிறார் அஸ்வின்.
குப்பத்தில் வாழும் ஜனங்களை ஒரே நாளில் ஒட்டுமொத்தமாய் தூக்கி அடுக்குமாடி குடியிருப்பில் குடிவைக்கிறது அரசு. அடுக்கடுக்காய் நிகழும் சம்பவங்கள் மூலம் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. ஆனாலும் தகரக்கொட்டைக்கு இந்த அடுக்குமாடியே மேல் என்று சகித்து வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அந்த கட்டிடம் இடிந்து விழும் என்கிற உண்மை சிவாவுக்கு கேட்கும் அசரீரி குரல் மூலம் தெரிய வருகிறது. பயந்த சுபாவம் கொண்ட சிவா, தன்னை தியாகம் செய்து மக்களை காப்பாற்றினாரா இல்லை சுயநலமாக நடந்து தன்னுயிரை காப்பாற்றி கொண்டாரா? என்பதை நகைச்சுவை மற்றும் அடிதடியுடன் சொல்கிறது இந்த மாவீரன்.
அதிதி ஷங்கர் ஹீரோயின் கதாபாத்திரம். அளவாய் வந்து போனாலும் கவனம் ஈர்க்கிறார். சிரிக்க வைக்க யோகி பாபு. இந்தமுறை அவரது ஒன்லைனர் ஒர்கவுட் ஆகியிருக்கிறது என்று சொல்லலாம். சிவாவும் யோகியும் வரும் இடங்களில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பு அலைகள். நெடுங்காலம் கழித்து அம்மா கதாப்பாத்திரத்தில் சரிதா. மகனை கொஞ்சுவது, திட்டுவது, பரிதாபப்படுவது என தனது அனுபவ நடிப்பினால் முத்திரை பதிக்கிறார். வில்லனாக மிஷ்கின் மிரட்டிடனாலும் கோமாளி போன்ற கதாபாத்திரத்தினால் ஒரு மாற்று குறைதான். வழக்கம் போல படத்தை முழுவதுமாக தன் தோளில் சுமந்து இறுதிவரை வந்து கரை சேர்த்திருக்கிறார் எஸ்கே. அனைத்து வயது மக்களையும் வசியப்படுத்தியிருக்கிறார் என்றால் மிகையில்லை.
டெக்கினிக்கல் சைடில் மடோன்னாவின் அதே டீம் தான் இங்கும். குப்பம், அடுக்ககம் மற்றும் சண்டை காட்சிகளில் வித்யு அய்யனாவின் சினிமாட்டோகிராபி தனித்து தெரிகிறது. கதைக்கு தேவையானவற்றை அளவாக கத்தரித்து ஒட்டியிருக்கிறார் பிலோமின ராஜ். ஆரம்பம் முதல் இறுதி வரை மாவீரன் படத்தின் முதுகெலும்பாய் நிற்பது பரத் சங்கரின் இசை. 'வண்ணாரப்பேட்டையில' பாடல் தாளம் போட வைக்கிறது. 'தன் சுயநலத்திற்காக எப்பொழுது மக்களை அடமானம் வைத்தானோ அப்பொழுது அவனுள் இருந்த வீரன் மடிந்து கோழை பிறக்கிறான்' போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன. சீட்டுக்கட்டு போல் சரிந்து விழும் அடுக்குமாடி குடியிருப்பு காட்சியில் தெரியும் க்ராபிக்ஸ் குறைகள் பட்ஜெட் கடிவாளத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
ஸ்டார் காஸ்டிங் மற்றும் நல்ல டெக்கினிக்கல் டீம் இருந்தும் மாவீரன் சறுக்கிய இடம் லாஜிக் மீறிய திரைக்கதையில் தான். மக்களுக்காக குரல் கொடுக்கும் ஹீரோவுக்காக ஒருவர் கூடவா களத்தில் இறங்கமாட்டார்கள்? ஆயிரம் குடும்பங்கள் இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிவா மட்டும் தான் போராடுகிறார். ஏன்? இறுதிக்கட்ட சண்டை காட்சியில் கூட ஹீரோவுக்கு ஸ்பேஸ் கொடுப்பது போல் அத்தனை ஜனமும் ஒதுங்கி நிற்கிறது. என்ன தான் சூப்பர் ஹீரோ படம் என்றாலும் இரண்டு முறை செத்து பிழைப்பது எல்லாம் ஆகப்பெரிய போங்கு.
மாவீரன் என்ற தலைப்பில் தினசரி பேப்பரில் வருகிற காமிக் ஸ்ட்ரிப் மற்றும் வாய்ஸ் ஓவர் மூலம் திரைக்கதையை நகர்த்திய யுக்தி தமிழ் சினிமாவுக்கு புதுசு. என்றாலும் சில லாஜிக் குறைகளை களைந்திருந்தால் மாவீரன் வீரக்கொடி நாட்டியிருப்பான்.
43/100
Ananda Vikatan #maaveeran #MadonneAshwin #sivakarthikeyan #AditiShankar #YogiBabu #Vikatan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக