எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்கள் எழுதும்
நீராதிகாரம் தொடர் நூறாவது வாரத்தை எட்டிய தருணத்தை கொண்டாடும் விதமாக
நீராதிகாரம்-100 என்று ஒரு நிகழ்வு
விகடன் அலுவலகத்தில் அரங்கேறியது. நிகழ்வில் பங்கேற்று வாசகர் பார்வையை
பகிர்ந்துகொள்ள அழைத்தது மிக நெகிழ்வானதொரு தருணம்.
விகடன் அலுவலகம், திரள் அரங்கம், சிறப்பு விருந்தினர்கள், விகடன் ஆசிரியர்கள் சந்திப்பு என பெருகொண்டாட்டமாக அந்த நாள் கழிந்தது. மேடைப் பேச்சு இதுநாள் வரை அறவே கிடையாது. முதல் அழைப்பே நான் பெரிதும் மதிக்கும் விகடன் மேடை என்பது மிகப்பெரும் வாய்ப்பு.
நீராதிகாரத்திற்காக ஒரு AV திரையிடப்பட்டது. எழுத்தாளர் வெண்ணிலா அவர்கள் இந்தத் தொடரை எழுதும் பொருட்டு கிட்டத்தட்ட 25000 தரவுகள் சேகரித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து வியந்து தான் போனேன். அதுமட்டுமின்றி முல்லைப்பெரியாறு பயணம், பூஞ்சாறு சமஸ்தானத்தைத் தேடி ஒரு பயணம், கண்ணகி கோவில் பயணம், பென்னியைத் தேடி இங்கிலாந்துக்கு என அவர் கால் படாத இடமே இல்லை எனுமளவுக்கு பயணம் மேற்கொண்டு இந்த அரும்பெரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 25 வாரம் கடந்தால் போதும் என்று எழுத ஆரம்பித்திருந்தது 100 வது வாரத்தை தன்னைப்போல் எட்டியிருக்கிறது என்று பகிர்ந்து கொண்டார். இப்பொழுதான் அணையின் அடித்தளம் போடப்படுகிறது. குறைந்தபட்சம் இன்னுமொரு 50 அல்லது 100 வாரங்கள், பென்னி மற்றும் மேல்மலை மக்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஒரு அவா இருக்கிறது.
வாசகர் பார்வையில் பேசும்பொழுது, தொடரில் சிரமேற்கொண்டு எழுதப்பட்டிருந்த கட்டுமானப் பொறியியல் நுணுக்கங்களை சிலாகித்தும், தொடருக்கு உயிரோவியம் தீட்டிய ஸ்யாம் மற்றும் டைட்டில் டிசைன் செய்த பாண்டியன் & சரவணன் அவர்களைப்பற்றியும் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த மூன்று நிமிடங்களில் பகிர்ந்துகொண்டேன்.
அடுத்த நாள் போனில் விளித்தது, 'பத்திரமாக வீடு திரும்பிவிட்டீர்களா?" என்று வெண்ணிலா மேடம் அவர்கள் கேட்டது பயண களைப்பை அறவே ஒழித்தது என்றால் முற்றிலும் தகும். Gen X, Y மற்றும் Z தலைமுறைகள் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பு. மிக்க நன்றி மேடம்.
காணொளியில் 12:00 முதல் 15:45 வரை
பேசியிருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக