‘சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்’...சங்கரா டிவியில் சுப்ரபாதம் சத்தமாக ஒலித்து கொண்டிருந்தது.
வாசல் தெளித்த பின், கௌசல்யா புள்ளி வைத்து கோலம் போடத்துவங்கியிருந்தாள்.
நாற்பதின் முற்பகுதியில்
இருப்பதை நரைமுடிகள்
வெளிச்சம் போட்டு
தெரியப்படுத்திக்கொண்டிருந்தன.
காலை ஐந்து முப்பதாகியும் கீழ்வானம் வெளுக்காமல் இருந்தது. கோலத்தின் புள்ளியை வைப்பதில்
மும்முரமாயிருந்தவள் அத்தனை அருகில் அரவம் கேட்டு ஒரு நிழல் வந்ததும் திடுக்கிட்டு ஏறிட்டு பார்த்தாள்.
வாட்சப் பார்வேர்டில்
கடந்த ஒரு
வருடமாக
செயின் பறிக்கும் கும்பலை பற்றி படித்து கலவரமாயிருந்தவள், திருடனாக இருக்குமோ என்று ஒரு கணம் துணுக்குற்றாள்.
4.5 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ள பச்சை கலர் ஆவின் பாலை போட்டு செல்லும் பால்காரர் தான் என்பதை பார்த்ததும் பெருமூச்சு
எறிந்தாள். அவளையும் அறியாமல் அனிச்சையாக புடவையின்
தலைப்பை கழுத்தில் சுற்றி 'நாராயணா' என்று
அவள் வாய் ஒரு முறை முணுமுணுத்திருந்தது.
'கௌசி' என்று
உள்ளிருந்து குரல் கேட்டது.
கௌசி என்று அவளை உரிமையாக கூப்பிடுவது இருவர்
மட்டும் தான். ஒன்று அவளது அப்பா. இன்னொன்று அவளது கணவர். அப்பாவின் கூப்பிடுதல் அவளுக்கு
மிகவும் பிடித்தமானது. இன்று பூவுலகில்
இல்லை. கணவர் இதேபோல்
கூப்பிடுவது அவளுக்கு பிடித்திருந்தாலும் காலப்போக்கில் அவளுக்கு அது அசௌகர்யத்தையும் எரிச்சலையும் அதிகமாக கொடுத்தது. இப்போது வந்திருக்கும்
இந்த கௌசி என்ற அழைப்பு பெட் காபிக்காக. வடித்து கொட்டியே அவளது இருபத்தைந்து வருடங்களை தனக்கென்று வாழாமல் இழந்திருந்தாள்.
'கௌசி'
மீண்டும். அதை அழைப்பா அல்லது அதட்டலா என்று
வகைப்படுத்துவது வெகு சிரமம். கௌசல்யா அதை இரண்டாவதாகத்தான் பெரும்பாலும் நினைப்பாள்.
"இதோ வரேங்க"
இருபத்தைந்தாவது வயதில் இந்த வீட்டிற்கு
மாட்டுப்பெண்ணாய் வந்தவள். அப்பாவிற்கு ஸ்திரமான அரசு உத்தியோகம்
என்பதனால் சொந்த வீட்டில் வளர்ந்தவள் கௌசல்யா. ஆனால் புகுந்த இடத்தில் அன்றிலிருந்து இன்று வரை வாடகை வீடுதான்.
மூன்று நான்கு முறை ஜாகை மாற்றியாயிற்று. கொலுவைக்கும் வைபோகம் உண்டு என்பதால் வீடு மாற்றும்போது
ஒரு முறை தசாவதாரத்தில் ராமர் வில்லும் இன்னொருமுறை பன்னிராழ்வார்களில் ஆண்டாளின் கொண்டையும்
உடைந்து போயிற்று. வீடு மாற்றும்பொழுது அரைக்கால் டவுசர் அணிந்த பையன் சரியாக
கைமாற்றி விடாமல் பெட்டி கீழே விழ, ஆனால் இரண்டிற்குமே இவளின் ராசிதான் என்று மாமியார் இடித்துரைக்க
இவளுக்கு பற்றிக்கொண்டு வரும். மனக்குமுறலோடு நிறுத்திக்கொள்வாள். அதற்கு பிறகு
உடைந்த பொம்மைகளையும் இவளே கோபத்தில் தூக்கி எரிந்து உடைத்த கல்யாண செட்
மேளக்காரர் பொம்மையையும் அருகில் இருந்த கடையில் ஐந்து ரூபாய் பெவி குவிக் வாங்கி
ஒட்டிவிட்டாள். இல்லையென்றால் மாமியாரின் அனத்தல் அதிகமாகியிருக்கும்.
பெண் பார்க்கும் பொழுது மாப்பிள்ளை தற்காலிக
பணி தான் என்றாலும் ஆறே மாதத்தில் நிரந்தரப்பணி அமர்த்தப்படுவார் என்றுதான் வாக்கு
கொடுத்திருந்தார்கள். அவளது
திருமணத்தின் போது நாடு உலகமயமாக்கல் கொள்கையை விரிவுபடுத்த தொடங்கியது. முப்பது ஆண்டுகள்
உருண்டோடி அறிவியலில் அசுர வளர்ச்சி பெற்று ஒரு கொடிய பெரும் நோய் தொற்றை மக்கள் கனகனவென்ற ஓலியை எழுப்பி விரட்டி கொண்டிருந்த
ஆண்டு
வரையிலும் ராமநாதனுக்கு
வேலை நிரந்தரமாக்கப்படவில்லை. அதே ஈ.பி. ஆபிசில் குமாஸ்தா போல் இன்னவென்ற தெரியாத ஒரு
வேலைக்கு சைக்கிளில் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்.
அதேநேரம் கணவர் ஆஹா ஓஹோவென ஹீரோ போல அமையவேண்டும் என்று
கௌசல்யா என்றுமே விரும்பியதில்லை. அதனால் வத்தல் தொத்தலாக பெண் பார்க்க வந்திருந்த ராமநாதனை பார்த்தும் அவள் மறுக்கவுமில்லை. அவள் விரும்பியது ஓரளவு நடுவாந்திரமான
வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையே. ஆனால் சில நாட்களில் தினப்படிக்கே மாறடிக்க
வேண்டிய அளவுக்கு ராமநாதனின் தற்காலிக வருமானம் இருந்தது. சில முறை அடுப்பையும் மாவையும்
தூக்கிக்கொண்டு வாராந்திர சந்தையில் பருப்பு போலி
போன்ற வஸ்துக்களை வேர்க்க விறுவிறுக்க விற்றிருக்கிறாள். அவளை கன்னிகாதானம் செய்த கையோடு
அவளது அப்பா இறந்துவிட்டார். உள்ளங்கையில் வைத்து கௌசல்யாவை தாங்கினவர். தற்போதைய நிலையை தெரிந்திருந்தால்
துடித்திருப்பார்.
ஒரு வகையில் அவர்
இது போன்ற அசௌகர்யங்களை காணாது
இறந்தது இவளுக்கு சந்தோசமே. இவளது தம்பி கௌதம் கூட அவருக்கு ரெண்டாம் பக்ஷம் தான். இவளிடமே பாசம் அதிகமாக வைத்திருந்தார்.
இளம் வயதிலேயே தாயை பறிகொடுத்து
நின்ற இருவருக்கும் எல்லாமுமாக இருந்தவர் அப்பாதான். கல்யாணம் முடிந்தவுடன் தன் கடமை முடிந்தது
என்றெண்ணி கண்ணயர்ந்துவிட்டார் போலும்.
வத்தல் தொத்தல் என்றவுடன் ராமநாதனை இளக்காரமாக
எண்ணிவிட முடியாது. பேச்சு கூட கணக்காகத்தான் இருக்கும். ஒரு அடி எடுத்து வைத்தாரென்றால்
அதில் அவருக்கு லாபம் இருக்கிறது என்று அர்த்தம். அவரிடம் உள்ள ஒரே குறை அவரது மூளை அளவுக்கு அவரது உடல் வேலை செய்யாது. முக்கால் சோம்பேறி என்று
கூறினால் முழுமையாகத்தகும். குழந்தை பாக்கியம் கிடையாது என்பதால்
குடித்தனத்தில் அவர் மனம்
ஒட்டவில்லை. குடி கிடையாது
என்றாலும் சூதாட்ட பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. கௌசல்யா பயந்த சுபாவமாதலால் அவளை
உருட்டி மிரட்டியே நகை நட்டெல்லாம் பறித்து பணயம் வைத்து முழுதையும் அழித்திருந்தார். தற்போதைய ஒரே குறி கௌசல்யாவின்
பூட்டி கிடைக்கும் பூர்வீக வீட்டை விற்பது. இவரது குரலுக்கு அடிபணியும் பேதையான கௌசல்யாவோ
அதற்கும் சம்மதித்திருந்தாள். என்னதான் வளர்ந்து ஓடியாடிய வீடென்றாலும், அப்பாவின் ஞாபகம் போன்ற சென்டிமெண்ட் உணர்ச்சிகள் புதைந்திருந்தாலும் ராமநாதனின்
பேச்சுக்கு மறுபேச்சு பேசா மடந்தையாகத்தான் அவள் இருந்தாள். தனக்கு ஒரு குழந்தை பிறந்தால்
இதே போல் பயந்த சுபாவம் இல்லாத எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் கொண்ட ஒரு குழந்தையாகத்தான்
வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். ஆனால் அதற்கான கொடுப்பினை அவளுக்கு
இல்லாதிருந்தது.
"கௌசி. இன்னும் என்ன பண்ற?"
காபியுடன் வந்து அவர் அருகில் நின்றாள்.
"இன்னைக்கு உன்னோட தம்பி வெளிநாட்டுலேந்து வரான்ல"
ஒரு காரியம் சம்பந்தமாக
அவளுடைய தம்பியின் வரவை ராமநாதன் அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருந்தார்.
"அப்டி சொன்னதாத்தான் எனக்கு ஞாபகம் இருக்குங்க"
"ஏன் இத கூட ஞாபகம் வச்சுக்க மாட்டியா?"
'இல்ல. அவன் போன் பண்ணி எவ்ளோ நாள் ஆயிடுச்சு.
மூணு மாசம் இருக்குமா?
அதான் தெரியலை'
'உன் தம்பி. உன்கூட பேசினான். அதன் நீ என்னாண்ட
கேட்ட எப்படி? சரி. அவன்தான் நம்மோட கல்யாணத்தப்ப கூட வரலேயே'
'ஆமாங்க. அவன் பதினஞ்சு வயசு இருக்கும்போதே
வெளிநாடு படிக்க போய்ட்டான். அதுக்கப்புறம் அவன் இங்க வரவே இல்லை. போன்ல மட்டும் தான்
பேசிருக்கான்.'
'உங்க அப்பா இறந்ததுக்கே அவன்
வர்லெயே. அப்டி
என்ன படிப்பு படிக்க உன் தம்பி போனானோ?'
'அவன் ஸ்கூல்ல ரொம்ப சுட்டிங்க. கணக்குல புலி.
சும்மாவே இருக்கமாட்டான். எதையாவது நோண்டிட்டே இருப்பான். நீ இங்க
படிக்கிறத விட வெளிநாட்டுல படிச்சா இன்னும் ப்ரைட்டா வருவேன்னு அப்பா சொல்லிட்டே இருப்பாரு.
அதே மாதிரி அவன் ஸ்கூல் படிச்சு முடிஞ்ச உடனே வெளிநாட்டுக்கு அனுப்பிட்டார். தூரத்து
சொந்தம் ஒருத்தங்க வீட்டுல இருந்து படிச்சான். இப்போ ஏதோ மனுஷங்க சம்பந்தப்பட்ட ஆராய்ச்சில இருக்கறதா அவன் சொன்னான்.
எனக்கு முழு விவரம் தெரியல.’
‘எது எப்டியோ
போகட்டும். நம்ம கஷ்டத்துல இருக்கோம்னு நீ எத்தன தடவ அவன்கிட்ட பேசிருப்ப?’
‘நான் அவன் கிட்ட இத
பத்தி பேசினது இல்லைங்க. எனக்கு அது தோணலை.’
‘ஏதாவது ஒரு தடவையாவது
பண உதவி பண்ணிருக்கானா? சரி வீடு. அவன் என்ன காரணத்துக்காக
இங்க வரான்னு தெரில. வந்தான்னா நம்ம வேலை கரெக்டா ஆகிடனும். புரியுதா?’
‘எதங்க சொல்றீங்க?’
‘மேடத்துக்கு ஒன்னோன்ன
ஞாபகப்படுத்தனுமோ? உங்க அப்பவோட வீட்ட பத்திதான்.’
‘புரியுதுங்க. ஆனா
அந்த வீட்ட எப்டி நான் கேக்குறது?’
‘அவன் வெளிநாட்டுல
செட்டிலாகிட்டான். அவனுக்கு இந்த வீடு தேவையில்லை. உங்க அப்பா தெரிஞ்சோ தெரியாமலோ
மெயினான ஒரு இடத்துல வீட கட்டிட்டார். இப்போ அதோட விலை நாமளே நம்ப முடியாத
அளவுக்கு படு உச்சத்துல இருக்கு’.
‘ஆமாங்க. சரிதான்?’
‘யோசிச்சிபாரேன். அதுல
போயி குடித்தனம் பண்றதோட அத வித்தோம்னா ஏழு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம்.
உனக்கு ட்ரீட்மண்ட் எடுக்கலாம். நமக்கு ஒரு வாரிசு கிடைக்கும்.’
ராமநாதன் எங்கு தட்ட
வேண்டுமோ அங்கு தட்டினார். இதே போல்
மூன்று நான்கு தடவை பேசி அவளது மனதை கலைத்திருந்தார். இன்று அவள் தம்பி வரும்
நாள். எழுதி வாங்கி விட்டோமேன்றால் ஆயுசுக்கும் தொந்தரவு கிடையாது. கால் மேல் கால்
போட்டு உட்கார்ந்து கொள்ளலாம். மூன்று நான்கு இடங்களை வாங்கி ஒரு இடத்தில் வீடை கட்டி
மீதி இடங்களை வாடகைக்கு விட்டால் அதில் மாதத்திற்கு ஒரு வரும்படி வியர்வை
சிந்தாமல் வந்துகொண்டே இருக்கும். மனக்குதிரை வேகமாக ஓடியது. எப்படியாவது இன்று
இந்த காரியத்தை சாதித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டார். அதற்காகவே வாரிசு என்ற அஸ்திரத்தை வீசிக்கொண்டே
இருந்தார்.
‘அவன் வந்தா இன்னைக்கு
பேசி பாக்குறேன். என்ன சொல்லுவான்னு தெரியல’.
‘அவன் இன்னைக்கு
கையெழுத்து போட்டே ஆகணும்’
‘எனக்கு என்னமோ
நம்பிக்கை இல்லைங்க’
‘பாக்கலாம்’.
மதியம் பன்னிரெண்டானபோது ஒரு
மகிழுந்து இவர்களது வீட்டின் முன் நின்றது. கௌசல்யா தான் முதலில் சென்று
பார்த்தாள். நாற்பது வயதை ஒட்டிய ஒரு ஆண் கீழே இறங்கினான். அவனோடு ஒரு இளைஞி இறங்கினாள்.
தோராயமாக இருபதைந்து வயது இருக்கலாம். கௌசல்யாவுக்கு தன் தம்பியின் சாயல் எங்கேனும்
தென்படுகிறதா என்று தேடிபார்த்தாள். ஓரளவுக்கு பிடிபட்டது. அந்த சந்தேகத்துக்கு அதிக
நேரம் இடம் கொடுக்காமல் வந்து இறங்கியவன் இவளை 'அக்கா'
என்று விளித்தான்.
'கௌதமா,
நீதானா இது. எவ்ளோ
நாள் ஆச்சு டா. இந்த அக்காவ ஒருதடவ கூட வந்து பாக்கலையே நீ. எப்டி இருக்க?
ஒழுங்கா சாப்பிடுறியா?
ஏன் எனக்கு போனே
பண்ணலை?. இது யாரு?'. வாசலில் நின்று கொண்டே அடுக்கடுக்காக
கேள்வியால் தூளைத்தாள்.
அருகில் இருந்தவளை வேனசா
என்றும் ஒரு அறிவியல் மாநாடு சம்பந்தமாக தனது செக்ரட்டரியாக அழைத்து
வந்திருக்கிறான் என்று அறிமுகம் செய்துவிட்டு, ‘அக்கா,
உள்ள போயி பேசலாமா?' என்றான்.
'சாரிடா. வா வா உள்ள போலாம். என்னங்க.
கொஞ்சம் வெளில வாங்களேன்'. அவனை உள்ளே கை பிடித்து அழைத்து கொண்டே
ராமனாதனை அறைகூவலிட்டு வெளியே அழைத்தாள். எதிர்த்த மற்றும் அருகிலிருக்கும் வீடுகளிலிருந்து
தலைகள் எட்டி பார்த்தன.
ராமநாதன் வெளியே வந்து கௌதமனை
கட்டி அணைத்து கொண்டார். பின்னே பல கோடி சொத்துக்களுக்கு இன்று அவனிடம் கையெழுத்து
வாங்க வேண்டாமா? குழந்தையின் குதூகலத்தை முகத்தில் காட்டிக்கொண்டு
அவனை உபசரித்தார்.
அறையில் அமர்ந்து தண்ணீர் கொடுத்து
ஆசுவாசபடுத்திய பிறகு,
'மச்சான். நீங்க எங்களோட கல்யாணத்துக்கும்
வரலை. ஒரு போனும் இதுவரைக்கு பண்ணலை. நல்லருக்கீங்களா?
என்ன பண்றீங்க?
உங்க வேலை முடிஞ்சிடுச்சா?'
'மாமா. நான் ஜெர்மனில இருக்கேன்.
மனோதத்துவ சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சில ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு முயற்சில இருந்தேன்.
இப்போ அதுல வெற்றி பெற்றுட்டென்னு நினைக்கிறேன். இத அடுத்த மாதம் இங்க நடக்கப்போற உலக
அறிவியல் மாநாட்டுல அறிமுகம் செய்றதுதான் என்னோட பிளான். என்னோட வேலை திருப்திகரமா
முடிஞ்சதுனால அக்காவையும் நான் வளர்ந்த் வீட்டையும் ஒரு முறை பாத்துட்டு போலாம்னு வந்தேன்.
இவ்ளோ நாள் ஆராய்ச்சில மூழ்கி உங்க யார்க்கிட்டையும் பேசமா இருந்ததுக்கு நீங்க எல்லாரும்
என்ன மன்னிச்சிக்கோங்க'. என்று மெலிதான புன்சிரிப்புடன் கைகூப்பினான்.
ராமநாதன் பதறிப்போய் அவை கைய்யை
பிடித்துக்கொண்டார்.
'இதுல என்னப்பா இருக்கு. பிடிச்சத
பண்ணிருக்க. அதுவும் கண்ணும் கருத்துமா இருந்துருக்க. இதுக்கு எதுக்கு மன்னிப்பு அது
இதுனு பெரிய வார்த்தை சொல்லிட்டு'
'வேலை அது மாதிரி மாமா. எந்த வித
கவனச்சிதரலும் இல்லாம இருந்தாதான் இந்த மாதிரியான ஆராய்ச்சிய வெற்றிகரமா பூர்த்தி பண்ண
முடியும்'
‘இது என்னது கௌதம்.
தலைல மாட்டிருக்குற?’
கௌசல்யாவும் அப்போதுதான்
கவனித்தாள். ஹெட்போன் போல இருந்தது. புது மாடலாக இருக்கும் என்று நினைத்து
கொண்டாள்.
‘அது ஒரு டிவைஸ் மாமா.
பயோ நியூரோ டிரான்ஸ்மிட்டர் சென்சரி ரெககனிஷன் டிவைஸ். என்னோட ஆராய்ச்சில ஒரு
பகுதி. நான் உங்களுக்கு அப்புறம் விளக்கமா
சொல்றேன்’.
'அட. விடுப்பா. அதெல்லாம் நல்லபடியா
முடிஞ்சதுல. அதுவே போதும். நீ எங்கள பாக்க வந்ததே ரொம்ப சந்தோஷம்'
'மாமா. உங்க கல்யாணத்துக்கு வர
முடியல. அப்போ கொடுக்க வேண்டிய கிஃப்ட். இப்போ கொடுக்குறேன். வாங்கிக்கோங்க'
ராமாநாதனுக்கு வாயெல்லாம் பல்லாக
மாறியது. உடனே வாங்கிக்கொண்டார். ஆனால் தான் நினைத்ததை முடித்தாக வேண்டும்
என்பதில் குறியாக இருந்தார்.
'மச்சான். இத நான் இப்ப சொல்லிய
ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். தப்பா எடுத்துக்காத'
என்று பீடிகையை
ஆரம்பித்தார்.
'அட. சொல்லுங்க மாமா. நீங்க தான்
இப்போ பெரிய வார்தையெல்லாம் பேசுறீங்க'
'அது ஒண்ணும் இல்ல கௌதம். உங்க
அக்கவா கல்யாணம் பண்ண டைம்ல நான் ஒரு வேலைக்கு போய்ட்டு இருந்தேன். நம்ம ஈ.பி ஆஃபிஸ்ல
தான். அது டெம்பரரி வேலை. அது பெர்மனண்ட் ஆக்குறதுக்கு ஒரு அமெளண்ட் கேட்டாங்க. உங்க
அக்கா நகைய எல்லாம் ரெடி பண்ணி கொடுத்தேன். ஆனா ஏமாதிட்டாங்க. திரும்ப பணம் கேட்டேன்.
கிடைக்கல. அதுபோக அம்மாவுக்கு மருத்துவச்செலவு அது இதுனு ரொம்ப கஷ்டத்துல இருக்கோம்.
உங்க அக்காகிட்ட கேக்க சொன்னேன். தம்பிட்ட எப்டினு அவளும் கேக்கல போல'
'அய்யோ. நீங்க எதுவும் கேக்கவேணாம்.
நானே பணம் கொடுக்றேன். இந்த கண்டுபிடிப்பு அடுத்த வருஷம் டிக்ளர் பண்ணிடோம்னா எனக்கு
ஓரளவு பண தேறிடும். உங்களுக்கும் மாசாமாசம் நான் பணம் அனுப்பறேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்க.
ராமநாதனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக
இருந்தது. என்ன இவன் உடனே பணம் தருகிறேன் என்று சொல்லுகிறான் என்று யோசித்தார். மீண்டும்
வம்படியாக,
'கௌதம். நான் உன்கிட்ட பணம் கொடுக்கலாமே
தவிர, நீ
எனக்கு பணம் கொடுக்கிறது அவ்ளோ நல்லாருக்காது. அதனால நான் என்ன சொல்ல வரேன்னா,
உங்க அக்காவுக்கு
உனக்கும் பாத்தியப்பட்ட ஒரு வீடு இருக்கு. அது நல்ல விலைக்கு வித்திட்டா ஒரு அமௌன்ட்
கிடைக்கும். நீயும் ஆராய்ச்சிக்கு யூஸ் பண்ணிக்கலாம்ல.'
'மாமா. உங்களுக்கே தெரியும் அது
நாங்க வளர்ந்த வீடு. இவ்ளோ நாள் நான் வெளிநாட்டுல இருந்துட்டு இப்போதான் இங்க வந்துருக்கேன்.
எதுக்காகன்னா,
எங்க அப்பா இருந்த
வீட்டுல எனக்கு இருக்கணும்னு ரொம்ப ஆசை. அதுவும் வெளிநாட்டுல நான் தனியா இருந்தப்போ
இத ரொம்ப மிஸ் பண்ணேன். அதப்போய் விக்கணும்னு சொன்னா எப்படி மாமா. நீங்க என்கிட்டே
வேற எதுவேனா கேளுங்க. அத மட்டும் வேண்டாம்'.
'இல்ல. கௌதம். நீ ஒருதடவை நான்
என்ன சொல்றேன்னு...'
இடைமறித்த கௌதம் 'இது பத்தி பேச வேண்டாம் மாமா.
இந்த முடிவுல வேற எந்த மாற்றமும் இல்லை. மன்னிச்சிக்கோங்க'
வேனசாவை அருகில் அழைத்து ஒரு
செக்கை கிழித்து ராமநாதனிடம் கொடுத்தான். ராமநாதன் அதை வாங்கிக்கொள்ள தயங்கினார். அவர்
கையில் அதை திணித்தான்.
'மாமா,
என்னால முடிஞ்சது.
இந்த அறிவியல் மாநாட்டுக்கு அப்புறம் எனக்கு நிறைய ஆஃபர்ஸ் வரும். ஒரு கம்பெனி கூட
தொடங்குரா ஐடியால இருக்கேன். நீங்க என்னோட கம்பெனில ஒரு நல்ல போஸ்ட்ல கூட வேலை பாக்கலாம்'
ராமநாதன் செக்கை பார்த்தார்.
மதிப்பை பார்த்ததும் சுருக்கென்றிருந்தது. முகம் மாறுவதற்கு முன்,
'சரி. கௌதம். உன்ன நான் கம்பெல்
பண்ணல. நாம் யோசிப்போம். ரெப்பிரேஷ் பண்ணிட்டு வா. சாப்டுடலாம்.
அவன் அரைக்குள்ளே செல்லவும் ராமநாதன்
சமயலறைக்குள் சென்றார்.
ராமநாதனுக்கு கோவம் உச்சிக்கேறியது.
‘அவன்கிட்ட நான் என்ன கைகட்டி
நிக்கனுமா? ஜென்மத்திலேயும் நடக்காது. இதுக்கு ஒரே
வழி தான்'
ராமநாதன் சொல்லசொல்ல
அதிர்ச்சியாக இருந்தது கௌசல்யாவுக்கு.
‘தப்புங்க'
என்றாள்.
'கௌசல்யா. நீ இப்டி சொல்லுவன்னு
எனக்கு தெரியும். ஆனா யோசிச்சுப்பாரு. இந்த செண்டிமெண்ட்லாம் வேலைக்கு ஆகுமா சொல்லு.
எப்போவோ செத்த அப்பா ஞாபகமா அந்த வீட்டை வச்சிக்கணும்னா இது என்ன நியாயம். உங்க அப்பாவே
இப்போ இருந்திருந்தா நீ கஷ்டப்படறத பாத்திட்டு இருப்பாரா சொல்லு. அவன் வெளிநாட்டுக்கு
போய் எவ்ளோ நாள் ஆச்சு. உங்க அப்பா இருந்தப்ப கூட அவன் வரல. அப்போ வராதவனுக்கு இப்போ
மட்டும் என்ன பாசம். அவன் எதோ கண்டுபிடிச்சிட்டான். செட்டில் ஆயிட்டான். அவனுக்கு அந்த
வீடு தேவையே இல்ல. எல்லாத்துக்கும் மேல இந்த ஊரே உன்ன மலடி மலடினு எத்தனை வருஷமா சொல்லிற்றுக்கு.
அவங்களுக்கு இல்லனவாது நமக்காக ஒரு குழந்தை வேண்டாமா. அந்த வைத்திய செலவுக்கு நம்மால
இப்போ பணம் கொடுக்க முடியும். அப்படியே ரெடி பண்ணாலும் நம்மளோட வயசு ஒத்துழைக்குமா
சொல்லு?'
ராமநாதனுக்கு அவ்வளவு கோர்வையாக
எப்படி வந்தது என்றே தெரியவில்லை. பேசினால் தான் முடியும். இந்த உலகமே பேச்சை முன்னிறுத்திதான்
இயங்குகிறது. இவளையும் மசிய வைத்துவிடலாம் என்று ஒரு குருட்டு தைரியத்தில் கௌசல்யாவிடம்
மூளைச்சலவை செய்துகொண்டிருந்தார். கௌசல்யா கூட எதை சொல்லிருந்தாலும் ஒத்துக்கொண்டிருக்கமாட்டாள்.
ஆனால் தாய்மை என்று ஆண்டாண்டு காலம் இந்த உலகம் பெண்ணை புனிதப்படுத்திவைத்திருந்த ஆயுதம்
அவளை பிசைந்தது.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு
ராமநாதன் அறைக்குள் வந்தார். அறையிலிருந்து குளித்துவிட்டு வெளியே வந்த கௌதமன் அவர்
அருகில் வந்து உட்கார்ந்தான்.
'மாமா,
வீடு ரொம்ப சின்னதா
இருக்கு. இதுல எப்பிடி நீங்க தாக்குபிடிக்கிறீங்க?' என்றான்.
அதிருப்தியில் பதிலேதும் பேசாத
ராமநாதன், 'வா
கவுதம். சாப்பிடலாம்' என்று அழைத்தார்.
வெகு நாட்களுக்கு பிறகு வீட்டு
சாப்பாடு என்பது கௌதமனுக்கு உவகையளித்தது. கௌசல்யா பரிமாற இருவரு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
விருந்து அன்று தடபுடலாக இருந்தது. கத்திரிக்காய் மாங்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வேப்பம்பூ ரசம் இன்னும் இத்யாதிகள். கௌதம் ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.
வேனசா தன்னுடன் கொண்டுவைத்திருந்த சாண்டவிச்சை சாப்பிட ஆரம்பித்தாள்.
'இந்த பொண்ணு யாரு கௌதம்?'
ராமநாதன் விசாரித்தார்.
'இவளோட பேரு வேனசா. இந்த அறிவியல்
மாநாட்டுல என்னுடைய கண்டுபிடிப்ப சமர்பிக்கறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் தேவை. அதனால அங்கேந்து
கூட்டு வந்துருக்கேன். என்னோட பிராஜக்ட்ல வேலை பார்த்தா. எனக்கு ஒரு நல்ல நண்பியும்
கூட. வேற எதுவும் நீங்க சந்தகேபட்ற மாதிரி இல்லை'.
ராமநாதன் தயிரை வழித்து முழங்கை
வரைக்கும் நக்கிக்கொண்டிருந்தாலும் மனது ஆறவில்லை. இன்றைய வேலை முடியுமா இல்லையா என்பது
அவருக்கு குழப்பமாக இருந்தது. ஒரு முறை கௌதமை
பார்த்தார். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் கௌசல்யாவிடம் கேசரி எடுத்துவருமாறு
ராமநாதன் கூற கௌசல்யா உள்ளே சென்று எடுத்து வந்தாள்.
ஏதோ யோசித்தவனாய் கௌதம், ‘இல்லை இப்போ நேரமாய்டுச்சு. அக்கா நான் கிளம்பறேன். அந்த கான்பரன்ஸ்க்கு எல்லாத்தையும்
ரெடி பண்ணணும், என் லைஃப் முழுக்க அதுக்காகத்தான் ஸ்பென்ட்
பண்ணிருக்கேன். மாமா. கிளம்பறேன்' என்று பரபரத்தான்.
கௌதம் நேரமில்லாதலால் பேக்
பண்ணி தருகிறேன் என்று கௌசல்யா சொல்ல, கௌதம் சரி என்று மைய்யமாக தலையாட்டினான்.
கௌதம்,
'அக்கா. உங்கள இந்த
நிலைமைல நான் பாப்பேன்னு நினைக்கல. ஆனா.உங்களுக்கு சீக்கிரமாவே வழி பிறக்கும். உனக்கு
ஒரு குழந்தை புறக்கட்டும்ன்னு அப்பாவை வேண்டிக்கிறேன்'
கௌசல்யாவுக்கு சற்று அழுகை வந்தது.
முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் கௌதமன். கூடவே
வேனசாவும். காரில் கிளம்பி இருவரும் கையசைக்க கார் சீறிப்பாய்ந்து.
முப்பது நிமிடங்களுக்கு மேலாக
அமைதியாக வந்த கௌதம் ஏதோ யோசித்தவனாய் சாலையோரத்தில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில்
காரை நிப்பாட்டினான். கீழே இறங்கி வெகு நேரம் யோசித்தவன்,
'வேனஸா நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்
'
என்றான்
'என்ன கௌதம்?'
என்று புரியாமல்
விழித்தாள்.
.இந்த ஆராய்ச்சியை கையில எடுத்திருக்க
கூடாது.'
'நீ என்ன சொல்றேன்னு புரியல கௌதம்.
முதல்ல நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்கன்னு எனக்கு தெரியாது. அது ரொம்ப சீக்ரட்ன்னு
சொல்லிருக்கீங்க. இன்னைக்கு ஈவினிங் தான் அதை பத்தி எனக்கு விளக்கப்போறதா சொன்னீங்க'
'ஆமா வேனஸா. பட் இந்த ஆராய்ச்சிய
நான் யாருக்கும் சமர்ப்பிக்க போறதில்லை. என்னோடயே இது முடிஞ்சு போகட்டும் '
'பட். ஏன் கௌதம்?'
'நான் ரொம்ப சின்ன வயசிலேயே வீட்டை
விட்டு கிளம்பிட்டேன் தான். என்னோட குறிக்கோள் என்ன இங்க வர விடாம தடுத்திடுச்சி. என்னோட
வேலையை நான் எப்ப முடிச்சேனோ அப்போ எனக்கு ஒரு திருப்தி வந்துச்சு. எனக்குன்னு இருக்கிறது
என்னோட அக்கா மட்டும் தான். நான் அவகிட்ட சொல்லலாம்னுதான் வந்தேன். ஆனா அவங்களோட
பார்வை மாறிடுச்சு.'
'என்ன கௌதம் சொல்ற. அவங்க உன்ன
அப்பிடி கவனிச்சிட்டாங்க'
'அதுதான் தப்பு வேனஸா. நீ என்
கூட தான் உக்காந்திருந்தேனாலும் உன் மனசு முழுக்க ஊர்ல இருக்க ராபர்ட் பத்திதான் இருந்துச்சு.
ரிட்டர்ன் போன உடனே கல்யாணம் பண்ணிக்கிறது எப்படினு யோசிச்சிட்ருந்த'.
'எக்ஸ்சாட்லி கௌதம். நான் இத உங்க
கிட்ட எப்பவுமே சொன்னது இல்லையே. உங்களுக்கு எப்படி தெரியும்? இன்பாக்ட் ராபர்ட்ட கிட்ட
கூட நான் அத சொன்னது இல்லையே. இனிமேல்தான் அவன்ட்ட இதை பத்தி
பேசணும்.'
'அது தான் என்னோட ஆராய்ச்சி. அடுத்தவங்க
மனசுல நினைக்கிறதே கண்டுபிடிக்கிறது. இந்த காதுல மாட்டிருக்கனே. ப்ளூடூத் மாதிரி. நியூரோ
சிக்னல் டிரான்ஸ்மிட்டர் டிவைஸ். அதோட வேலை இதுதான். சுத்தி இருக்றவங்களோட பிரைன் சிக்னல்ஸ
உள்ளே இழுத்து மனுஷங்க வாரியா அவங்களோட எண்ணங்களை குளறுபடியில்லாம எனக்கு தெரியப்படுத்தும்.
இருபது வருஷ உழைப்பு. சக்ஸஸ் ஆயிடுச்சு. பட் இத ஏன் கண்டுபிடிச்சோம்னு இப்போ ரொம்பவே
வருத்தப்படறேன்'
'வாவ். பிராமாதமா வேலை செய்யுது
போல. பட் ஏன் கௌதம். ரொம்ப நல்ல கண்டுபிடிப்பு. நீங்க ஏன் அப்டி சொல்றீங்க?'
'எங்க அக்காவும் மாமாவும் என்ன
நல்லா உபசரிக்கிறதா நினைச்ச. ஆனா. அப்படி இல்ல. அவங்க கவனம் முழுசா என்கிட்டே இருந்த
பூர்விக வீட்டை எப்பிடி எழுதி வாங்கணும்னு தான் இருந்துச்சு. அதுமட்டும் இல்ல. நான்
எதுவும் சம்மதிக்கலைனா என்னயவே காலி பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.'
'ஒ. மை காட்'
வேனஸா அதிர்ந்தாள்
'அதனாலதான் சொல்றேன். நான் பெரிய
தப்பு பண்ணிட்டேன். நமக்கு சம்பந்தம் இல்லாதவங்க நம்மள தப்பா நினைக்கிறது நமக்கு
தெரிஞ்சா கூட பரவாயில்லை. ஆனா நம்ம ரத்த சொந்தமே நம்மள எப்படி உண்மையா பாக்குறாங்கனு
தெரிஞ்சிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நரக வேதனை. ‘I can’t see you naked’ அப்டிங்க்றதோட உண்மையான
அர்த்தம் இதுதான். அகத்தோட அழகு வெளில தெரிஞ்சா யாருமே நிம்மதியா இருக்க முடியாது.
இங்கு உறவுங்கறதே இருக்காது. அதுமட்டுமில்ல இத பல ஆபத்துகளுக்கு வழி வகுக்கும்.
உலகத்தோடு சம நிலையே கலைஞ்சி போய்டலாம். போதும் அதனால இந்த ப்ராஜக்ட் என்னோட மண்ணுக்குள்ளே
போகட்டும்'
என்றவாறே தன் கம்ப்யூட்டரை திறந்து
வேனஸாவின் கண் முன்னே தன்னுடைய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்ஸ் எல்லாவற்றையும்
அழித்தான். என்ன செய்வதென்று தெரியாமல் வேனஸா முழித்துக்கொண்டிருந்தாள். காரின் பின்
கதவை திறந்த கௌதம் ராமநாதன் கொடுத்த டிபன் பாக்சிலிருந்த கேசரியை மெதுவாக ருசித்து
சாப்பிட்டு முடித்தான்.
அவளிடம் காரை ஒப்படைத்து பின்
சீட்டில் படுத்துக்கொண்ட கௌதமுக்கு மட்டுமே தெரியும் அந்த கேசரியில் அவளது அக்கா விஷம்
கலந்திருக்கிறாளென்று.
'Happy
Journey' என்று
கௌசல்யாவிடம் இருந்து மெசேஜ் வந்திருந்ததை பார்த்தவாறே கண்களை மூடிக்கொண்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக