வியாழன், நவம்பர் 03, 2022

இயக்குனர்

 ஒரு வருட விடுப்பு என்று சொல்லி இன்றோடு ஏழு மாதங்கள் முடிந்துவிட்டது.

 

இன்போசிசில் டீம் லீட் என்ற பொறுப்பில் ஏட்னா ஹெல்த்கேரின் இரண்டு பெரிய பிராஜக்டை சுமந்து கொண்டிருப்பவன் டேனியல். ஆன்சைட் வாய்ப்புகள் அத்தனை வந்தும் தட்டி கழித்துக்கொண்டிருந்தான். கனவு தொழிற்சாலையில் இயக்குனர் பட்டியலில் தனது பேர் பதிந்து விடாதா என்பது தான் அவனது ஒரே உள்ளக்கிடக்கை. அலுவலக நேரம் தவிர கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஒன் லைனர் பிடித்து அதற்கு முழு வடிவம் கொடுத்து இரண்டு மூன்று ஸ்க்ரிப்டுகளை celtx ஃப்ரீ வெர்ஷனில் முடித்து வைத்திருந்தான். மாலை மற்றும் வார இறுதி நாட்களில் மட்டும் வாய்ப்பு தேடி அலைவது வேலைக்காகது என்று முடிவு செய்து அலுவலகத்தில் மேலாளர் அனுமதியுடனும் மற்றும் வீட்டில் மனைவியிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு வருட சம்பளம் இல்லா விடுப்பு எடுத்து வைத்திருந்தான்.

 

தெரிந்த மனிதர்கள், அவர்களின் மூலம் தெரிந்த கம்பெனிகள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பிற உதவி இயக்குனர்கள் என்று எல்லோரிடமும் கதை சொல்லி வாய்ப்பு கேட்டு இந்த ஏழு மாதங்களில் அவனது வாய் தேய்ந்ததுதான் மிச்சம். சொல்லிவைத்தார் போல் 'பார்க்கலாம், சொல்லி அனுப்புறேன், கண்டிப்பா பண்ணலாம்' போன்ற பதில்கள் தான் எல்லா இடங்களிலிருந்தும் வந்தது. ஒருவரும் கூப்பிட்டபாடில்லை. இவனை விட பத்து வயது குறைந்த ஒரு இயக்குனரிடம் இவன் உதவி இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது. நெட்வொர்க்கில் மேலும் பல மனிதர்களை சந்திக்கலாம் என்று அதற்கு சம்மதித்தான். வேலை இருந்தால் கூப்பிடுவார்கள். போனால் 500 ரூபாய் பேட்டா. பெட்ரோலுக்கும், டீக்குமே சரியாகிப்போனது. விடுப்பு எடுத்த  முதல் மாதத்திலிருந்து தற்போதைய ஏழாவது மாதம் வரை இவனது மரியாதை படிப்படியாக வீட்டில் குறைந்திருந்தது. மனைவி ஓரளவு புரிந்து கொண்டாலும் மாமியார் 'என் பொண்ணு வேலைக்கு போய் ரொம்ப கஷ்டப்படுது' என்று அவ்வப்போது இவன் காது பட பேசுவது அதிகமாகியது. உதவி இயக்குனர் என்பவனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரோஷம்  அறவே இருக்கக்கூடாது என்பதை வீட்டிலும் கடைபிடித்தான். அதையும் மீறி பொறுமையிழந்து ஒரு முறை இயக்குனரை முறைத்து படத்திலிருந்தே வெளியேற்றப்பட்டான்.

 

இரண்டு ஷார்ட் பிலிம் எடுத்து யூடியூபில் சேனல் தொடங்கி வெளியிட்டான். மில்லியன் வீடியோக்களில் இது யாராலும் சீண்டப்படாமல் இருக்க அதன் லிங்கை காபி செய்து வாட்சப் ஸ்டேட்டஸ், தெரிந்த நபர்கள் தெரியாத கான்டெக்ட்டுகளுக்கெல்லாம் ஷேர் செய்து காத்திருந்தான். எப்பிடியாவது வைரல் ஆகி விடாதா என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த தருணத்தில் தான் 42 வருடங்களாக இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சித்து கொண்டிருக்கும் முத்துவீரன் பற்றிய தகவல் கிடைத்தது. அடுத்த முயற்சியாக factumentary என்ற ஒரு புது ஜானரில் ஒரு ஷார்ட் பிலிமை எடுத்துவிடலாம் என்றெண்ணி  கிடைத்த தகவல்களை ஒழுங்குபடுத்தி அவரை சந்திக்க  அண்ணா நகர் நோக்கி கிளம்பினான்.

 

1BHK என்று சொல்லக்கூடிய சிறு வீடு அது. இரண்டாவது மாடியில் இருந்தது. முத்துவீரன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என்று அவர்கள் எல்லோருக்கும் அந்த வீடு போதுமா என்பது டேனியலுக்கு சந்தேகமாக இருந்தது. ஷார்ட் பிலிம் எடுக்கிறேன் என்று சொன்னதும் முத்துவீரனுக்கு குஷியாகிவிட்டது. பைக்கில் வரும்போதே கேள்விகளையும், கேமரா ஆங்கிள் மற்றும் சீன்களையும் யோசித்து வைத்திருந்தான். முத்துவீரனின் குழந்தைகள் இவனது வருகையை விரும்பவில்லை என்பது அவர்களது பார்வையில் தெரிந்தது. வீட்டிற்குள் வரும்போதே செருப்புடன் இன்ன பிறவனவற்றையும் வெளியே கழட்டி வந்திருந்ததனால் டேனியல் அதை உதாசினபடுத்தவில்லை.

 

சினிமாவிற்காக ஒரு வருட விடுப்பு எடுத்து அலைந்து கொண்டிருந்தவன் என்று அறிமுகப்படுத்திய மறு நொடியே முத்துவீரனுக்கு அவன் மேல் ஒரு பாசம் வந்துவிட்டது.

 

'இங்கேயே பேசலாமா அல்லது என் வாடிக்கையான இடத்துக்குபோகலாமா?' என்று முத்துவீரன் கேட்டார்

 

'அது என்ன சார் வாடிக்கையான இடம்?'

 

வீட்லேந்து கிளம்பி போய் நான் உக்கார்ற இடம் அந்த பனகல் பார்க் தான். எதுத்தாப்புல அம்மா உணவகம். பெஞ்சுல உக்காந்துட்டு கதை டிஸ்கஷன், டீ, ரெண்டு பீடி மதியம் மூணு ரூபாய்க்கு தயிர் சாதம், அப்புறம் கொஞ்சம் தூக்கம், வயசாயிடுச்சுல அதான்' என்றார்.

 

'கதை டிஸ்கஷன் யாரோட சார்?'

 

'ஜாக்கி வருவான் சில நேரம்.  அப்டி இல்லனா தனியா நான் மட்டும் பண்ணிப்பேன்'

 

டேனியலுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.

 

'இங்கேயே வச்சுக்கலாம் சார். கொஞ்சம் ஷாட்ஸ் இங்க. அப்புறம் அங்க கொஞ்சம் ஷாட்ஸ்னு யோசிச்சிருக்கேன். உங்களுக்கு ஓகே வா?'

 

'பிரமாதம் தம்பி. இப்டி தான் முன்னேற்பாடு வரணும். நான் இதே மாதிரிதான் என்னோட 'கவிதை பேசும் நேரமிது' படத்துக்கு பல சர்ப்ரைஸ் ஷாட்ஸ் யோசிச்சி வச்சிருக்கேன். ஆடியன்ஸ் அடிபோயிடுவாங்க. அந்த மாதிரி ரெடி பன்னிருக்கேன் ஸ்க்ரிப்ட். அடுத்த மாசம் ஷூட்டிங் போகலாம்னு இருக்கு'

 

'இதையேத்தான் சார் இருபது வருஷமா சொல்லிட்டருக்கார். இன்னும் ஷூட்டிங் போனபாடில்லை' என்று அவர் மகள் இடையில் பொரிந்தார்.

 

டேனியலுக்கு தர்மசங்கடமாகியிருந்தது. இருந்தாலும் அதையும் அந்த கேமிராவில் பதிவு செய்து கொண்டான்.

 

'சொல்லுங்க சார். உங்கள பத்தி. நீங்க எதுவேனாலும் சொல்லுங்க. எடிட்ல அத பாத்துக்கலாம்'.

 

'ஓகே தம்பி. பேசலாமா?'

 

'ரெடி சார். ஸ்டார்ட்'

 

'வணக்கம்.   என்னோட பேர் முத்துவீரன். என்னோட நிஜமான பேரு செங்கமலம். சினிமாவுக்காக என் பேர மாத்திக்கிட்டேன். பஞ்சு அருணாச்சலம், S.P. முத்துராமன் போன்ற திரைக்கதை ஜாம்பவான்களால ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தவன். எப்படினாலும்  நாள் பெரிய இயக்குனர் ஆயிடுவோம்னு தெரியும். இயக்குனர் செங்கமலம் அப்டினு சொன்ன நல்லாருக்குமான்னு தெரில. அதனால அவரு மாதிரியே பேரு இருக்கட்டுமேனு முத்துவீரன் அப்டின்னு வச்சிக்கிட்டேன். தேனிக்கு பக்கத்துல என் ஊரு. சின்ன வயசில இருந்து நான் பெரிய சினிமா பைத்தியம். முள்ளும் மலரும், உதிரி பூக்கள் போன்ற படங்கள்லாம் ஏகப்பட்ட தடவ பாத்துருக்கேன். இதெல்லாம் மகேந்திரன் படம். கிளாசிக் லிஸ்ட்ல வச்சுக்கலாம். ஆனா எனக்கு கமர்சியல் மூவிஸ் தம்பி ரொம்ப ஈடுபாடு. முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் போன்ற படங்களை சொல்லலாம். இன்னும் நிறைய இருக்கு. 'சீவிடுவேன்' அப்டினு ரஜினி சொல்லுவாரு பாருங்க. எவ்ளோ கை தட்டல் அப்புறம் விசில் பறக்கும். அந்த படத்துக்கப்புறம் தான் தம்பி இண்ட்ரொடக்ஷன் சாங் வந்துச்சு. ஒவ்வொரு படமும் ஒரு ட்ரெண்ட் செட்டர்னு சொல்லலாம். 'ஹாப்பி நியூ இயர்' இன்னை வரைக்கும் எல்லா பப்லேயும் கமல் பாட்டுதானே ஓட்டறீங்க. அத அடிச்சிக்க இன்னும் ஒன்னும் வர்லேயே'

 

'சார். இதெல்லாம் வாஸ்தவம் தான். உங்கள பத்தி சொல்லுங்க/ உங்களுக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவு பத்தி'.

 

'அத தான் தம்பி சொல்லிட்ருக்கேன். ஒரு திரைக்கதைன்னா மெதுவாத்தான் ஆடியன்ஸ உள்ள இழுத்துட்டு வர முடியும். உடனே குதினா அவன் எப்படி பண்ணுவான். கொஞ்சம் கொஞ்சமாத்தான் இழுத்துட்டு வரணும். அது ஒரு கலை தம்பி'

 

'சரிங்க சார். மேல சொல்லுங்க'

 

'அப்போ இந்த மாதிரி படங்கள்லாம் வந்து சக்க போடு போடுது. ஹிந்தி பாட்டு கேட்டுட்டு இருந்தவங்கள்லாம் தமிழ் பாட்டு கேக்க ஆரம்பிச்சதே நம்ம ராஜா வந்தப்புறம் தானே. எனக்கு இதெல்லாம் பாக்க பாக்க ஒரு தினுசா ஆயிட்டே வந்துச்சு. நைட்டு ஒரு லோடு லாரில ஏறி மதராசுக்கு வந்துட்டேன்'

 

'வீட்ல சொல்லலையா சார்?'

 

'இல்லையே. நான் ஒம்பதாவது புள்ள. ஒன்னும் தேடலைனு நினைக்கிறேன்'

 

'அதுக்கப்புறம் பேசவே இல்லையா?'

 

'இல்ல தம்பி. வெறி. சினிமா வெறி. A film by முத்துவீரன் அப்டினு போஸ்டர் ஓட்டும்போது தான் எங்க ஊர்ல காலடி எடுத்துவைக்கணும்னு இருக்கேன்'

 

டேனியலுக் விக்கியது. கொண்டு வந்த பாட்டிலில் இருந்த தண்ணியை குடித்தான்.

 

'புரியுது சார். இங்க வந்ததுக்கப்புறம் சொல்லுங்க'.

 

'ஆங். இங்க வந்த உடனே எனக்கு என்ன பண்றதுனு தெரியல. அப்போ என்ன எனக்கு காசு கொடுத்து பஸ்ஸா ஏத்தி விட்டாங்க. அதெல்லாம் கைல ஒன்னும் இல்ல. எனக்கு தோணுச்சு. கிளம்பிட்டேன். ஆனா வந்து பாத்தப்புறம் தான் உண்மை உரைச்சுது. காலைல வயிறு சுத்தம் ஆனவுடனே பசி கிள்ளுச்சு. ஒரு டீக்கடைல போய் டீ கேட்டேன். குடிச்சப்புறம் காசு இல்லனு சொன்னேன். வெண்ணிய மூஞ்சில ஊத்தாத குறையா என்ன துரத்திட்டார். ஒவ்வொரு இடமா சுத்துனேன். மூட்டை தூக்கினேன். டேபிள் துடைச்சேன். எங்க ஷூட்டிங் நடந்தாலும் போய் நிப்பேன். அந்த நேரத்துலதான் இயக்குனர் ராம நாராயணன் படத்தோட ஷூட்டிங் நடக்குது. டீ க்ளாஸ எடுத்துட்டு போய் அவர்ட்ட கொடுத்து நான் உங்ககிட்ட அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகணும்னு சொன்னேன். எந்த ஊரு? அப்டினு கேட்டுட்டு என்னய்ய மேலும் கீழும் பார்த்தார். சொன்னவுடனே ஒரு ஆள கூப்டு எதோ சொன்னார். அப்புறம் தெரிஞ்சுது ப்ரொடக்ஷன் பாயா சேரச்சொல்லிருக்காருனு. அந்த வேலைய பார்த்துட்டு ஷூட்டிங்கோட நுணுக்கங்களை கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். இப்போ கூட நான் ரெடி பண்ணி வச்சிருக்கிற 'இன்று போய்' ஸ்க்ரிப்ட பெரிய செலவே இல்லாம எடுத்துடுவேன். பக்கா பிளான் போட்டு வச்சிருக்கேன். வெறும் நாப்பத்திரெண்டு லட்சம் போதும். உங்களுக்கு யாராவுது தெரிஞ்சா சொல்லுங்க தம்பி'

 

டேனியலுக்கும் தன்னுடைய ஸ்க்ரிப்ட் ஞாபகம் வந்தது. அதே வார்த்தையை அவரிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது. அடுத்த கேள்விக்கு தவ்வினான்.

 

'அய்யா, உங்க குடும்பம் பத்தி சொல்லுங்களேன்'

 

'ரெண்டு குழந்தைங்க. ஒரு பொண்ணு. ஒரு பையன். பையன் செகண்ட் இயர் படிக்குறான். பொண்ணு படிச்சி முடிச்சிருக்கு'

 

'ஏம்ப்பா நானும் தம்பியும் வேலைக்கு போறதை...'

 

ஒரு நிமிடம் என்று கெஞ்சும் பாவனையில் கையை காட்டி இடை மறித்தான் டேனியல். கேமராவை கீழே வைத்து லோ ஆங்கிள் செட் பண்ணி கொண்டான்.

 

'ஒரு நிமிஷம் சிஸ்டர். நான் ரெடி சொன்னதும் நீங்க உங்க கிட்சன்லேந்து வெளில வாங்க. அப்டியே இப்போ நீங்க சொன்னதை சொல்லிட்டே அடுத்த ரூமுக்கு போய்டுங்க'

 

அந்த பெண் ஒருமுறை முறைத்தாள். அடுத்த நொடி டக்கென்று திரும்பி கண்ணாடியை பார்த்து அலையோடிக்கொண்டிருந்த முடியை நேர் செய்து பொட்டை திருத்தி சுடிதாரின் ஷாலை சரி செய்து கொண்டாள்.

 

டேனியல் முத்துவீரனை பார்த்து 'சார், நீங்க கடைசியா சொன்ன லைனை ஒரு முறை சொல்லிடுங்க. கன்டினியூட்டி நல்லாருக்கும்'.

 

ஓகே என்பது போல் கட்டை விரலை டேனியல் உயர்த்தி காமித்ததும் முத்துவீரன் ஆரம்பித்தார்.

 

'ரெண்டு பசங்க இருக்காங்க. மூத்தவ பொண்ணு. படிச்சி முடிச்சிட்டான். சின்னவன் இப்போ தான் காலேஜ் போய்ட்ருக்கான்'

 

ஏற்கனவே டேனியல் சொன்னது போல கிச்சனிலிருந்து வெளியே வந்த அந்த பெண் 'இதுவும் சொல்லுங்கப்பா. தம்பி காலைல காலேஜ் போயிடு மதியம் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ல வேலை பாக்குறான். நானும் துணிக்கடைல வேலை பாத்துட்ருக்கேன். இவங்க அம்மா வீடு வீடா போய் பாத்திரம் தேய்க்குது. இப்போ கேன்சர் வந்து உடம்புக்கு முடியாம ஆஸ்ப்பிட்டல்ல படுத்த படுக்கையா இருக்கு. அதையும் பாக்காம நான் அந்த ஸ்க்ரிப்ட் பொட்டிய தூக்கிட்டு எங்ககிட்டயோ அண்ணன்கிட்டயோ கொஞ்சம் காசு வாங்கிட்டு வெளில போய்டுவேன். இப்படியேதான் இருப்பது வருஷமா பண்ணிட்ருக்கேன். வீட்டுக்குனு எதுவும் செய்யலன்னு சேத்து சொல்லுங்களேன்' என்று சடசடவென பொரிந்துவிட்டாள்.

 

டேனியலுக்கு அவன் எதிர்ப்பார்த்ததை விட அந்த காட்சி நன்றாக வந்தது போல் இருந்தது. அதை விடீயோவின் ஆரம்பத்தில் மியூஸிக்குடன் சேர்த்து தம்ப்நெய்லாக போட்டால் நன்றாக எடுபடும் என்று தோன்றியது. முத்துவீரன் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து உட்காந்திருந்தார்.

 

'அடுத்த மாசம் ரெடியாயிடும் தம்பி. ப்ரொடியூசர் பாக்கலாம்னு சொல்லிருக்கார்'

 

'கேட்டு கேட்டு காதே புளிச்சிருச்சுப்பா. அந்த துணிக்கடை ஓனர் என்ன ஒரு மாதிரியா பாக்குறான். உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்'

 

'தம்பி நம்ம கிளம்பலாம். வெளில என்னோட இடத்துக்கு போய் பேசலாம்'.   

 

டேனியல் தான் கொண்டு வந்திருந்த ட்ரைபாட் கேமரா மற்றும் மைக்கை எல்லாம் சுருட்டினான். அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து கீழே வந்தனர். மிகவும் பாழடைந்து இப்போவோ அப்பாவோ என்று நின்று கொண்டிருந்தது கட்டிடம். அவர் தன்னுடன் ஒரு பெட்டியை தூக்கிக்கொண்டு கீழே வந்தார். அந்த பெட்டியில் 'இரவுக்கு இரண்டு கண்கள்' என்று ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தது. சிறு எழுத்தில் 'தினசரி மூன்று காட்சிகள்' என்று போட்டிருந்ததை கவனித்த டேனியல்,

 

'இது என்ன போஸ்டர் சார்?' என்று கேட்டான்.

 

'இது தான் தம்பி நான் மலை போல நம்பிருக்கிற ஸ்க்ரிப்ட். த்ரில்லர் பாணில ஒரு கமர்சியல் கதை. ஹீரோ ஹீரோயின் கூட முடிவு பண்ணிட்டேன். கேமரா கோணம்லாம் யோசிச்சி வச்சிருக்கேன். க்ராபிக்ஸ் வேண்டாம். அதிகம் செலவாயிடும். ப்ரொடியூசர் கிடைச்சிடுவார். அது எப்படி இருக்கணும்னு ஒரு போஸ்டர் நானே ரெடி பண்ணிட்டு இதுல ஒட்டி வச்சிருக்கேன். இப்போ பர்ஸ்ட் லுக்குனு சொல்றத நான் பதினஞ்சு வருஷம் முன்னாடியே பண்ணிட்டேன் தம்பி'

 

அம்மா உணவகத்துக்கு எதிரே இருக்கின்ற பார்க்கில் உட்கார்ந்தனர்.  டேனியல் ட்ரைபாடை செட் செய்தான். கேமராவை பிக்ஸ் பண்ணிக்கொண்டு 'இங்க பார்க்ல என்ன பண்ணுவீங்கன்னு சொல்லுங்க. நான் ஜும் இன் அவுட் பாத்துக்றேன்'

 

'ஒரு நாளைக்கு வீட்லேந்து பத்து ரூபா வாங்கிட்டு வருவேன். அந்த பத்து ரூபா எதுக்குனா மதிய சாப்பாடு ஒரு தயிர் சாதம். அதுக்கு அஞ்சு ரூபா. மீதி அஞ்சு ரூபாக்கு பீடி. டீ குடிக்க காசு இருக்காது. கம்பெனி ஏறி இறங்க போக்குவரத்து செலவுக்கு காசு கிடையாது. அதுனால இங்க கிடைச்ச வேலைய செய்வேன். கார் கழுவுவேன். கடைல கூட்டி பொறுக்குவேன். டீ வங்கி கொண்டு வந்து கொடுப்பேன். முடிஞ்ச அளவு ஏதாவது வேலை செஞ்சு அம்பது நூறுனு தேத்துவேன். புள்ளைங்ககிட்ட ரொம்பவும் காசு வாங்க முடியாதுல. அப்புறம் இந்த ஜாக்கி வருவான். ரெண்டு பேரு சேந்து கதை டிஸ்கஷன் பண்ணுவோம். சீன் எப்டி வைக்கலாம்னு யோசிப்போம். புதுசா இருந்தாந்தான் ஜனங்க பாப்பாங்க'.

 

டேனியல், 'உங்களோட ஆர்வம் புரியுது. நீங்க உதவி இயக்குனரா இருந்தேன்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் நீங்க என்ன பண்ணீங்க. உங்களுக்கு வருமானம் இல்லையா?'

 

'தம்பி, இப்போதான் நீங்க சரியாக  கேட்டுருக்கீங்க. உதவி இயக்குனர் அப்டிங்கிறவன் யாரு? படத்தோட முழு பலமே அவங்க தான். அவங்க இல்லாம ஒரு துரும்பு கூட அங்க அசையாது தம்பி. ஷாட் ரெடி பண்ணனும். ஹீரோ ஹீரோயினுக்கு டைலாக் சொல்லிக்கொடுக்கணும். காஸ்ட்யூம் ரெடி பண்ண அரேஞ்ஜ்  பண்ணனும்.  கன்டினியூட்டி பாக்கணும். ஒண்ணா ரெண்டா. அவங்கதாம்பா முத ஆளா உள்ள வருவாங்க. கடைசி ஆளா வெளில போவாங்க. ஆனா சம்பளம் என்ன கொடுப்பாங்க. இப்பெல்லாம் ஒரு நாளைக்கு ஐநூறு ரொம்ப பெரிய கம்பெனின்னா ஆயிரம். இத வச்சிட்டு என்ன பண்றது. பெட்ரோல் செலவு, தங்குறது இதெல்லாம் அதுலதான். கல்யாணம் ஆயிடுச்சுனா அவ்ளோதான். ஒன்னும் பண்ண முடியாது. என்ன மாதிரி. நான் நாலஞ்சு படம் உதவி இயக்குனரா இருந்தேன். தனியா பண்ணனும்னு ஆசை பட்டேன். வெளில வந்துட்டேன். ஒன்னும் க்ளிக் ஆகல. ஆயிடும் அடுத்த மாசம்னு சொல்லிருக்கார். நிறைய பேரு இது மாதிரி இண்டஸ்ட்ரில சுத்துறாங்க தம்பி. உதவி இயக்குனருக்கு சரியான மரியாதை இல்ல'

 

'நீங்க இந்த மாதிரி இருக்கும்போது குடும்பத்துக்கு உதவியா இல்லனு வருத்தப்பட்டிருக்கீங்களா?'

 

'ஆமா தம்பி. வருத்தம் இல்லாமையா. ஒவ்வொரு நாளும் குத்ததான் செய்யுது. ஓடிட்ருக்கேன். 59 வயசாயிடுச்சு. வெற்றி கிடைச்சுடும்.'

 

'உங்க மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு உங்க பொண்ணு சொன்னாங்க'

 

'அவளுக்கு கேன்சர். நாலாவது ஸ்டேஜ். இவ்ளோ நாள் நடமாடிட்ருந்தா. ஆனா இப்போ முடியல. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி தான். டாக்டர் எதுவும் பண்ண முடியாதுனு கைய விரிச்சிட்டார். எப்போ வேணாலும்..'

 

'சாரி சார்'.

 

'நீ எதுகுப்பா சாரி சொல்ற. அது தலைவிதி படிதான் நடக்கும். ஆனா ஒன்னு. நேத்தது போய் அவகிட்ட ப்ரொட்யூசர் கொடுத்த அட்வான்ஸ் அக்ரீமெண்ட் காமிச்சேன்'.

 

பெட்டியில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து காண்பித்தார்.

 

'அவ முகத்துல அவ்ளோ ஒரு பூரிப்பு தம்பி. ஒரு வழியா ஜெயிச்சிட்டேன்னு சிரிச்சா. கண்ல கண்ணீர் வந்துடுச்சு அவளுக்கு. பேச முடியாதுல. சைகையில ரொம்ப சந்தோசம்னு சொன்னா'.

 

'அப்புறம் என்ன சார். அட்வான்ஸ் வாங்கிட்டீங்கள்ல. இனிமே என்ன பிரச்சினை.'

 

'அது போய் தம்பி. அவ கட்சி நேரத்துலையாவது சந்தோசமா போட்டுமேனு நான் ஒரு பேப்பர் ரெடி பண்ணி அவளுக்கு காமிச்சேன். உண்மைய சொல்லனும்னா நேத்து போய் பார்த்த கம்பெனில என்ன கழுத்து பிடிச்சி வெளில தள்ளாத குறைய அனுப்பிவிட்டாங்க. பொட்டி கூட கீழ விழுந்து உடைஞ்சிருக்கு பாரு'

 

பெட்டியின் முனையை காண்பித்தார்.

 

'அடுத்த மாசம் எல்லாம் டேக் ஆஃப் ஆயிடும் தம்பி. பாரின்லேந்து ஒரு ப்ரொட்யூசர் வரார். பேசிடுவேன்'.

 

'உங்களோட முயற்சிக்கு வாழ்த்துக்கள்' என்றவன் அவர் கையில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை திணித்தான்.

 

'தேங்க்யூ' என்றவர் 'இந்த கேமிரா Canon 5D தானே தம்பி. இது மட்டும் இருந்துச்சுன்னா நாளைக்கே ஷூட்டிங் போய்டுவேன்' என்றார்.

 

டேனியலுக்கு தலை சுற்றியது. நன்றி சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

பைக்கில் ஏறியவன் தனது டீம் மேனேஜருக்கு கால் செய்தான்.

 

'என்ன டேனியல். கூட நியூஸா. எப்போ படம் வரப்போகுது?'

 

'இல்ல சார். அந்த லாங் லீவ கேன்சல் பண்ணிடுங்க. நான் நாளைக்கே வந்து டீம்ல ஜாயின் பண்ணிக்கிறேன்' என்றவாறே  பைக்கை உதைத்து செய்து கிளம்பினான்.

கருத்துகள் இல்லை: