ஞாயிறு, நவம்பர் 27, 2022

ஆசிரியர் போற்றுதும்

மாணவர்களின் எதிர்காலத்தில் உபாத்யார்களின்  பங்கு அளப்பரியது.

 

பெற்றோர் சொல்லுக்கு வீட்டில்  செவிமடுக்காத பிள்ளைகள் கூட பள்ளியில் வாத்தியாரின் சொல்லை தட்டாமல் கேட்பதுண்டு. பள்ளிக்கு சென்ற இளம்பிராயம் முதல் அலுவலகத்தில் வேலை செய்து ஒய்வு பெரும் வரை நமக்கு ஆசான்கள் ஆங்காங்கே அமைவதுண்டு. எண்ணிலடங்கா ஆசிரியர்களில் மறக்க முடியாதவர் ஐசக் சாலமோன்.

 

மூன்றாமாண்டு பொறியியல் பயிலும்போது எங்கள் கல்லூரிக்கு வந்தவர். மாணவர்களை அவர் ஹேண்டில்  செய்யும் விதமே அனைவரையும் அவரிடம் அன்பு கொள்ள வைக்கும். சேரில் உட்காரமாட்டார். ஒற்றை காலை தொங்கவிட்டு டேபிளில் தான்  உட்காருவார். மாணவர்கள் லேட்டாக வகுப்புக்கு வரும்பொழுது தயங்கி வெளியே நிற்பர். மற்ற ஆசிரியர்களென்றால் அப்படியே திருப்பி அனுப்பிவிடுவதுண்டு.

 

ஆனால் ஐசக் சார் அவ்வாறு செய்வதில்லை. 'தம்பி. இது உன்னோட க்ளாஸ். உனக்கு எப்போ வரணுமோ வா. நான் ரொம்ப அறுக்குறேனா. வெளியே கிளம்பி போய்டலாம். ஒன்னும் சொல்ல மாட்டேன். இன்டெர்னல்ஸ் கைய வைக்க மாட்டேன். ஆனா ஒரே கண்டிஷன். க்ளாஸ்ல கவனிக்கிறவன டிஸ்டர்ப் பண்ண கூடாது.

 

இவரின் இந்த அணுகுமுறைக்கு முதலில் உள்குத்தாக இருக்குமோ என்று பயந்த மாணவர்கள் அதன் பின் சொல்லாமலேயே வகுப்பில் டான் என்று ஆஜர் ஆகினர். எளிதாக அவரிடம் பழகினர்.  அவரும் இயல்பாக இருந்தார். இருவருக்குமிடையே இடைவெளி குறைந்து அணுக்கம் அதிகமாகியது.

 

இதுபோன்று தோளில் கை போட்டு வழிநடத்தும் ஆசிரியர்கள் மிக ,மிக அபூர்வம். அவர்களிடம் கல்வி கற்கும் மாணாக்கர்களும் அதே பண்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்கின்றனர். நல்வழிப்படுத்துகின்றனர்.

அவரின் உயர்வான சித்தாந்தமாக நான் இன்று வரை கருதுவது, 'Accept the Fact and Move On'.

 

ஆசிரியர் போற்றுதும்.

கருத்துகள் இல்லை: