பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த டீவீட்டில் ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தார். "தியேட்டருக்கு மக்களை அழைத்து வர இனி ஒரு நடிகர் மட்டும் போதாது. ஒரு கூட்டமே தேவைப்படுகிறது" என்று.
ஆமாம். அந்த கூட்டம் மட்டுமே விரவியோடியிருக்கும் ரசிகர்களை இழுத்து வந்திருக்கிறது. ஆனால் படம்?
300 கோடி வசூல், 450 கோடி வசூல் என்ற சாதனையெல்லாம் ஒருபுறம் இருக்க, படம் பார்த்து முடித்தவர்கள் மனநிலை என்ன என்றால் குழப்பமே மிஞ்சுகிறது. கடந்த பதிவு, நாவல் படித்தவர்களை மனதில் கொண்டு எழுதியிருந்தேன். நாவலை படித்தவர்களே மய்யமாகத்தான் அங்கீகரித்திருக்கிறார்கள். படிக்காதவர்கள், இந்த நாவல் படித்த elite கும்பலின் குரூரத்திடம் சிக்கி சின்னாபின்னாமாகி விடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கை காரணமாக படம் நன்றாக இருக்கிறது என்று ஒப்புக்கு சொல்லி நழுவியிருக்கிறார்கள்.
கடந்த பதிவில் சொன்னதுபோல திரைப்படத்தை, நாவலின் வரிசையில் அத்தியாயம் அத்தியாயமாக படமாக்கியிருக்கிறார்கள். நாவல் படிக்கும்பொழுதே நாம் ஒரு அத்தியாயத்தில் பழையாறையில் மற்றொரு அத்தியாயத்தில் கடம்பூர் மாளிகயில் இருப்போம். மறு அத்தியாயத்தில் தஞ்சாவூர். இலங்கை என்ற சுழற்றி அடிக்கும். ஆனால் கல்கியின் வரியில் அவருடைய விவரணையின் காரணமாக நமக்கு குழப்பம் இருக்காது. அவ்வாறே ஒரு வேளை தெளிவில்லாமல் போயிருந்தாலும் முழு நாவலை படித்து முடிக்கும்பொழுது அந்த எண்ணமே இராது. நாவலை திரைப்படமாக உருமாற்றுதலில் உள்ள பெரிய இடையூறு அதன் நீளம். குறைந்த பட்சம் மூன்று பாகங்களாக வந்திருக்கவேண்டியது பட்ஜட் மற்றும் பல காரணங்களுக்காக சுருங்கிவிட்டது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்திருக்க வேண்டிய திரைக்கதை மிகவும் பலவீனமாக இருப்பதே அதன் குழப்பத்திற்கு முதல் காரணம். நாவலில் யார் யார் கதாபாத்திரங்கள், அவர்கள் எங்கு வசிக்கிறார்கள், இந்த கதாபாத்திரங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை வாய்ஸ் ஓவர் முறையில் படம் ஆரம்பிக்கும் பொழுதே பத்து நிமிட முன்னோட்டமாக கொடுத்திருந்தால் இந்த தெளிவின்மையை நீக்கியிருக்கலாம்.
திரைக்கதை விவாத குழுவின் ஒருவரான இளங்கோ குமாரவேல் பொன்னியின் செல்வன் நாடகத்தை நூறு முறைக்கு மேல் அரங்கேற்றியவர். நான்கு மணிநேர நாடகம். நாவல் படித்தவர்களே சற்று யோசித்து கணிக்கும் அளவுக்குதான் காட்சி அமைப்புகள் இருக்கும். திரைப்படத்திலாவது இதை சரி செய்திருக்கலாம். மீண்டும் அதே தவறை தான் செய்திருக்கிறார்கள். கதை சொல்லும் முறையில் மாற்றம் செய்தால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்களோ இல்லையோ என்ற பயம் காரணமாயிருக்கலாம். அதுவே இந்த நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம் முதல் பாகம் முடியும் பொழுது படம் எதை நோக்கி செல்கிறது என்பதில் ஒன்றிணைதல் கிடைக்கவில்லை. இரண்டாம் பாகமும் சேர்ந்து பார்த்தல் தான் முழுமை கிடைக்கும் என்றால், அதை பாகம் ஒன்றின் தொடக்கத்தில் disclaimer ஆக தெரிவித்திருக்கலாம்.
இரண்டாவது மிகப்பெரிய ஏமாற்றம் காட்சி அமைப்புகள். போர் காட்சிகள் அனைத்துமே உயிரோட்டம் இல்லாத திரை நீட்சிகள். நாவலில் விவரணையாக படிக்கப்படும் போர் காட்சிகள் அந்த அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். இதில் அது missing. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 'உன் மேல ஆசதான்' பாடலில் காண்பிக்கப்பட்டிருக்கும் சோழர் கால தெருக்கள் கூட இதில் இல்லாதது ஏமாற்றம்.
அரண்மனை, போர், தெருக்கள், வீராணம் ஏறி பயணம் etc. என பிரம்மாண்டம் காட்ட வேண்டிய இடத்தில் எல்லாம் எதிர்ப்பார்த்த காட்சிகள் இல்லை. casting மட்டுமே பிரமாண்டம் காட்டுகிறது. பாடல்கள் மிகப்பெரிய சறுக்கல். அதற்கான நடனமும் முன்னரே சொன்னது போல் படத்தில் ஜெல் ஆகவில்லை.
இவற்றை பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கு நேரம் மற்றும் பட்ஜெட் என்ற பல காரணீக்கள் வலுக்கட்டாயமாக பிடித்து நிறுத்தியிருக்கலாம். நாம் மிகவும் உருவகப்படுத்தியிருந்த சோழ மன்னர்கள் மற்றும் சோழ தேசம் இதில் முழுமையாக கைகூடி வரவில்லை. மணிரத்னம் ஸ்டைல் of பிலிம் மேக்கிங் மற்றும் கிளாசிக் நாவல் என்ற இரண்டு பதத்திற்கும் நடுவில் சிக்கிவிட்டான் பொன்னியின் செல்வன். முயற்சி என்றுமே பாராட்டுதலுக்குரியது. ஆனால் முழுமை அடைந்துள்ளதா என்பதே இங்கு விவாதப்பொருள்.
பத்து நாட்கள் பள்ளி விடுமுறை என்பதினாலும், நம் வரலாறு என்பதினாலும் வசூல் புரிந்திருக்கலாம். இது உண்மையாகவே மக்களை கவர்ந்திருக்கிறதா என்பது இதனுடைய இரண்டாம் பாகத்தின் வெளியீட்டின் பொழுது தெரிந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக