ஞாயிறு, அக்டோபர் 23, 2022

வல்லூறுகள்

என்டேஞ்சர்ட் லிஸ்டில் இந்த பறவையையும் சேர்த்து விட்டனர். காரணம். ஆறறிவுள்ள நாம் தான். எப்படி?

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வானில் வட்டமடிக்கும் வல்லூறுகளை பார்த்தாலே அந்த பகுதியில் எதோ இறந்து கிடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இறந்து கிடைக்கும் விலங்குகளை ஒரு சில மணி நேரங்களில் இந்த கூட்டம் காலி செய்து விடும். ஏன் ஒரு யானையையே இரண்டு நாட்களில் இந்த கூட்டம் கபளீகரம் செய்துவிடும் ஆற்றல் கொண்டது. அதற்கு உணவு. நமக்கு பாதுகாப்பு. இறந்து போன விலங்குகளில் இருந்து வைரஸ் பரவாமல் பாதுகாப்பு. உணவுச்சங்கிலியின் அபிரிதிமான உன்னதம் இது.



ஆனால் தற்போது இதுபோல வல்லூறுகள் வட்டமடிப்பதை காணமுடிகிறதா? இல்லை. அழிவின் விளிம்பில் இருக்கின்றது.தமிழ்நாடு முழுமைக்கு நூறு இருநூறு என்று கூறுகின்றனர். காரணம் நாம் விலங்குகளுக்கு சில காலங்களாக செலுத்தும் 'டைக்லோபினாக்' என்ற மருந்து இந்த பிணந்தின்னி வல்லூறுகளின் உயிரை பறித்திருக்கிறது. இறந்து போன விலங்குகளின் உடலில் இருக்கும் இந்த 'டைக்லோபினாக்' என்ற மருந்தை வல்லூறுகளால் ஜீரணிக்க முடியவில்லை. நஞ்சாகவும் மாறியிருக்கிறது. விளைவு கடந்த பதினைந்து வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக இவை அழிந்து வருகின்றன. பட்டாம்பூச்சி விளைவு.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஜப்பானில் எல்லோருக்கும் சிறுநீரகம், நரம்பு சம்பந்தமான நோய் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. பண்டமிக் போல பரவ ஆரம்பித்தவுடன் ஆராய்ச்சியாளர்கள் தலையை பிய்த்துக்கொண்டு ஒருவாறு கண்டுபிடித்துவிட்டனர். மனித உடலில் மெர்குரியின் அளவு அதிகமாக இருந்ததே காரணம். ஆனால் எவ்வாறு இது அதிகமாகியது. மீண்டும் தலையை பிய்த்துக்கொண்டனர். ஆனால் சூழழியலாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அவர்களின் பிரதான உணவு மீன். கடலில் மெர்குரி கலந்த நச்சு கழிவுப்பொருளை கலக்கவிட்டதன் எதிரொலியே இது. அந்த மெர்குரி கழிவுகளை மீன்கள் சாப்பிட அந்த மீன்களை மனிதர்கள் சாப்பிட என்று...ஒரு வழியாக நோய் முதல் நாடியிருக்கினறனர்.
புத்தகத்தின் பெயர் 'அச்ச ரேகை தீர்வு ரேகை'
நாகரீகமயம் என்ற பெயரில் சூழலை எவ்வாறு சிதைத்திருக்கிறோம் என்று ஒரு அற்புதமான தொகுப்பு இது.
பல்லுயிர் ஓம்புவோம்.

கருத்துகள் இல்லை: