வருடம்
2000
பங்குனி வெயில் படுத்தி எடுத்துக்கொண்டிருந்த ஒரு நற்பகல். நண்பன் அவனுடைய அப்பாவின் TVS Champ வண்டியை எடுத்துக்கொண்டு நெல்லை ஈரடுக்கு மேம்பலாத்தில் இறங்கி உருட்டிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே டூட்டி பார்த்து கொண்டிருந்த கான்ஸ்டபிள் இவனை நெருங்கி, லைசன்ஸ் இருக்கா? வண்டி RC புக் இருக்கா? என்று கறாராக பேசியிருக்கிறார். நண்பனோ, “சார், வண்டி ஒட்டிட்டு வரும்போது சாவி குதிச்சு கீழே விழுந்துடுச்சு. அப்புறம் பெட்ரோல் வேற இல்ல. அதான் நானே உருட்டிட்டு போய்ட்ருக்கேன்” என்றிருக்கிறான். நான் என்னமோ கேட்டா நீ என்னமோ சொல்றியே, “நூறு ரூபா காசு எடு இல்லனா வண்டிய நாளைக்கு கோர்ட்ல ஃபைன் கட்டி வாங்கிக்கோ” என்று அவனை உருட்டி மிரட்டியிருக்கிறார். நண்பனோ சிங்கக்குட்டி. “எண்ட நூறு ரூபா காசு இருந்தா பெட்ரோல் போட்டுட்டு வண்டி ஒட்டிருக்க மாட்டேனா சார், என் பாக்கெட்ல ஏழு ரூபா அம்பது காசு தான் இருக்கு” என்றிருக்கிறான். இன்னும் இவனிடம் பேருமா என்று இரண்டு நிமிடம் முயற்சி செய்து விட்டு, அந்த ஏழு ரூபாய் ஐம்பது காசை வாங்கிக்கொண்டு நடையை கட்டியிருக்கிறார் அந்த போலீஸ்காரர்.
வருடம் 2009
வீட்டிற்கு போலீஸ் வந்து மிரட்டல் தொனியில் என் பெயரைச்சொல்லி விசாரித்ததும், பெருமாள்புரம் பீட்டில் லைசென்சுக்காக வண்டி மறித்து காசு வாங்கிக்கொண்டிருந்த காவலரை மனசுக்குள் ஏசியது நியாபகம் வந்து போனது. மனதின் குரல் 2014 க்கு பிறகுதான் பொது வெளியில் ஒழிக்க (ழ, கரெக்டுதான்) ஆரம்பித்த காரணத்தினால், எனது மனதின் குரல் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று முடிவு செய்து, சற்று தைரியமாக நான் தான் என்று சொல்லி அவரை எதிர்கொண்டேன். பிறகுதான் தெரிந்தது அவர் பாஸ்போர்ட் வெரிபிகேஷன் பொருட்டு விஜயம் செய்திருக்கிறார் என்பது. கேட்க வேண்டிய கேள்விகளெல்லாம் கேட்டுவிட்டு, அப்புறம் தம்பி வரட்டுமா? என்று தலையை சொறிந்துகொண்டே நின்றுகொண்டிருதார். வீட்ல பெரியவங்க இல்லையா என்று கேட்டு, 500 ரூபாய் டிமாண்ட் செய்தார். ஏட்டு, எஸ்.ஐ. என்று எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார்.
வருடம் 2021
அலுவலக வேலை காரணமாக ஒரு வண்டி அமர்த்தி பயணம் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு போலீஸ்காரர் மறித்தார். உஷாராக மாஸ்க் அணிந்திருந்தோம். “சார் ஃபைன் கட்டனும்” என்றார். என்ன ஃபைன், எதுக்கு என்று விசாரித்தால், “இறங்கி அய்யாவை பாருங்கள்” என்று அடுத்த வண்டியை மறிக்க போய்விட்டார். இங்கு எங்கேடா அய்யா சரத்குமார் வந்திருப்பார் என்று திரும்பி பார்த்தால் எஸ்.ஐ. குடை நிழலில் பில் எழுதி வசூல் செய்துகொண்டிருந்தார். அருகில் சென்று நின்றோம். குனிந்தவாறே ஃபைன் கட்டுங்க என்றார். பின்பு சற்று நிமிர்ந்து அலுவலக சீருடையை பார்த்ததும், மரியாதையாகப்பேச ஆரம்பித்தார். நான், “மாஸ்க் போட்ருகோமே? பின்ன எதுக்கு ஃபைன்?” என்றதும், “சார், இணைக்கு இவ்ளோ டார்கட். வேற எதுவும் கேக்காதீங்க. சமூக இடைவெளி 500 ஃபைன் 500 ரூபா. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்றார். அருகில் இருசக்கர வாகனத்தில் வந்திருந்தவர் அவரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஃபைன் கட்டிவிட்டு விலகிவிட்டோம்.
நகரத்திற்குள்ளோ அல்லது நகரத்திற்கு வெளியேவோ, ஹெல்மெட் அல்லது சீட்பெல்ட் மாட்டிக்கொண்டு பயணம் செய்யும் பொழுது, தூரத்தில் போலீஸ்காரரை கண்டால் மனதில் ஒரு முறை திக் என்று அடித்துக்கொள்ளாமலில்லை. திருடனை பார்த்தால் அல்லது ஒரு அரசியல்வாதியை பார்த்தால் வரவேண்டிய இந்த திடுக் உணர்வு, எங்ஙனம் காவல்துறையை கண்டால் வருகிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு சமூகமாக நாம் தோற்றுபோன இடம் இங்கேதான்.சரி, காவல் துறையில் இருப்போர் எல்லோருமே இப்படித்தானா என்றால் இல்லை. அவர்களுக்கும் குடும்பம் குட்டி இருக்கிறது. நம்மைப்போல சக மனிதர்கள் தான். காலை வேலைக்குச்சென்று பிறகு மாலை வீடு திரும்பி குழந்தைகளை கொஞ்சி, இல்லாளோடு நடை பயின்று ஒரு சரசாரியான வாழ்வு வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தான். கல்லுக்குள்ளேயே ஈரம் இருக்கும் பொழுது அவர்கள் மனதில் ஈரம் இல்லாமலில்லை. ஆனால் இவர்கள் கல்மாணதுக்காரராக உருமாறியது எதனால்?
காவல்துறை நண்பர்களுக்கு வார விடுமுறை என்பதே கிடையாது. மற்றவர்களெல்லாம் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினரோடு வெளியே செல்கிறோம் என்றால் இங்கே இருப்பவர்களுக்கு எல்லா நாட்களுமே திங்கட்கிழமை தான். குழந்தைகளின் பள்ளி ஆண்டு விழா, மனைவியின் பிரசவ வேதனை, தங்கை கல்யாணம் என் எந்த நல்லது கெட்டதுக்கும் விடுப்பு எடுக்க முடியாது. மேலதிகாரியிடம் தொங்க வேண்டும்.
வாரத்திற்கு ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. சரி ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் தான் வேலை என்ற வரைமுறையும் கிடையாது. கூப்பிட்ட நேரம் கூப்பிட்ட இடத்திற்கு சென்றாக வேண்டும். அது நடு இரவு என்றாலும் விதிவிலக்கில்லை. பண்டிகை கால நாட்களில் அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடும் போது காவல்துறைக்கு விடுப்பு கிடையாது. சொல்லப்போனால் அவர்கள் உன்னிப்பாக கடமை செய்வதினாலேயே நாம் இங்கு நிம்மதியாக பண்டிகை கொண்டாட முடிகிறது. ஒருபக்கம் பாதுகாப்பு வேலையில் இருப்பதனால் செய்யும் வேலையில் திருப்தி ஏற்பட்டாலும், மறுபக்கம் முக்கியமான தருணங்களில் குடும்பத்தை விட்டு விலகி நிற்பது அவர்களுக்கு மனச்சிக்கலையும், உறவுசிக்கலையும், ஏற்பத்தி உளவியல் ரீதியாக அவர்கள் குடும்ப வாழ்வை சிதைத்து விடுகிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் காவலரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், இருப்பில் இருக்கும் காவலர்கள் விடுப்பு கூட எடுக்கமுடியாமல் அதிக பணிச்சுமைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக இட ஒதுக்கீடு அடிப்படையில் பெண்கள் அதிகமாக தேர்வு செய்யப்படுவதால் தற்போது அனைத்து இடங்களிலும் பாதிக்குப் பாதி பெண் காவலர்களை பரவலாக காண முடிகிறது. ஆனாலும் பல்வேறு விதமான காவல் பணிகளில் பெண் காவலர்களை அமர்த்த முடியாத நிலை உள்ளது. உதாரணமாக இரவுப்பணிகள். இதனால் ஆண் காவலர்கள் நேரம் கடந்தும் அந்த பணியைத்தொடர வேண்டியதாகிறது.
சம்பளம் அன்றி இந்த கிம்பளம் வாங்கும் பழக்கத்தை பற்றி ஒரு முறை காவலரிடம் விசாரித்துகொண்டிருந்தபோது அவர் கூறியவை. அந்தந்த எல்கைக்குட்பட்ட விசாரணைகளை விசாரிப்பதற்கு அவர்கள் பல முறை அலைய வேண்டியுள்ளது. மேலும் கைதாகியோ விசாரணையில் இருக்கும் நபருக்கோ உணவு கொடுப்பது போன்ற பல விஷயங்களுக்கு உண்டான உரிய படி அவர்களுக்கு கிடைக்காது. பெட்ரோல் போடுவதற்காக நீட்டிய கை இப்போது பல காரணங்களுக்காக மேலும் நீண்டிருக்கிறது. காவலர் என்றாலே இவ்வாறுதான் என்ற அழுக்கு பிம்பம் சமூகத்தின் பொதுபுத்தியில் நன்றாக உறைந்துவிட்டது. செய்யும் தவறு தரும் குற்ற உணர்வை, இந்த சமூகம் தங்கள் மீது வைத்திருக்கும் கொடிய அபிப்ராயத்தினால் அவர்கள் மனது மேலும் இறுகி அந்த தவறை நியாயமாக்குகிறது. இவர்களின் இந்த இரந்து பட்டு வாழும் நிலைக்கு அரசு முக்கிய காரணியாகிவிட்டது.
நாங்கள் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறோம் என்று வரிந்துகட்டிக்கொண்டு வரும் சினிமாவும், காவல்துறையை மிகக்கேவலமாக சித்தரிக்கிறது. காவல்துறையின் மீதான இந்த பிம்பத்தை கட்டமைத்ததில் சினிமாவின் பங்கு அதிகம். மற்ற துறைகளை தவறாக சித்தரித்தால் கொடி பிடித்து அறப்போராட்டம் மேற்கொள்கின்றனர். ஆனால் காவலர்களுக்கு இதுபோல சங்கமும் இல்லை. குரல் கொடுப்பதற்கு ஆளும் இல்லை.
இதுபோன்ற எண்ணற்ற பிரச்சினைகள் காவலர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கின்றன. மேலும் படித்து காவல் வேலைக்கு வரும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை இந்த அரசியல் வியாதிகள் நடத்தும் விதம் வேதனைக்குரியது. தண்ணீரின் போக்குக்கு ஏற்ப நெளிந்தோடும் மீன் போல சிலர் இதை சகித்துக்கொண்டாலும், பலரால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதிகாரிகளிடம் வெளிபடுத்தமுடியாத கோபத்தை, எதிர்ப்பு செய்யாத தங்கள் குடும்பத்தாரிடம் காட்டிவிடுகின்றனர். தனக்கு மேல் வேலை பார்ப்பவர்களை அய்யா என்று அழைப்பது எழுதாத சட்டம் ஆகிவிட்டது. இவை அனைத்தும் பிரிட்டிஷார் நமது நாட்டை ஆண்ட போது இந்திய காவலர்களுக்கு ஏற்படுத்தியிருந்த சட்டங்கள். 1947இல் சுதந்திரம் கிடைத்திருப்பது இந்தியாவுக்கு மட்டுமே அன்றி இன்னும் கண்ணுக்கு தெரியாத சிறையில் அடைபட்டிருப்பது நமது காவல்துறை மட்டுமே.
இன்று வெயிலில் நின்று போக்குவரத்து நெரிசலை சரி செய்துகொண்டிருந்த ஒரு காவலருக்கு, ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி கொடுத்தபோது, அவர் ஒரு புன்முறுவல் செய்து அதை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்து மிகவும் உற்சாகமாக இன்முகத்தோடு பணியைத்தொடர்ந்தார். அன்பை பரிமாறிக்கொள்வோம்.
ஒரு அவசர சட்டம் மூலம் காவல்துறைக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை விட்டாலே, காவல்துறையில் வேலைபார்ப்பவர்கள் மட்டுமில்லை, அவர்கள் குடும்பமும் என்றென்றும் நன்றியுடன் இருக்கும். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று கூறுவதை சமூகம் உணர்வுப்பூர்வமாக உணர வேண்டுமென்றால், அது அரசின் கையில் மட்டுமே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக