திங்கள், ஏப்ரல் 12, 2021

சின்னக்கவுண்டர் - DJ - 40



.
x













“அந்த வானத்தை போல மனம் படைத்த” என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் 2005ல் கொண்டாடிய ஹாஸ்டல் டேவைமூளையில் இருக்கும் நியூரான்கள் நினைவுபடுத்தாமல் இருப்பதில்லை. காரணம்மெக்கானிக்கல் பிரிவில் படித்துக்கொண்டிருந்த நண்பன் குமார்சின்னக்கவுண்டர் போன்று  வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து தோளில் ஒரு துண்டு  போட்டுக்கொண்டு விஜயகாந்த் போலவே நடந்து வருவான். இதில்  கவனிக்கவேண்டியது யாதெனில், “மன்மத ராசா மன்மத ராசா” என்று பாடலுக்கு சரசாரியாக 180 கலோரியை ஆடியே கரைக்கும் விதத்தில் குத்தாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் பொழுது இடைவெளியில் இவனது என்ட்ரி இருக்கும். ஒலிம்பிக் ஜோதியை கைமாற்றி விடும் ரிலே ரேஸ் போல நுழைவு வாயிலில் இருந்து சிக்னல் கொடுத்தவுடன், AKS சவுண்ட் சர்வீசின் DJ, டேப்ரிக்கார்டரில் கேசட்டை உடனே மாற்றி விடுவார். “மன்மத ராசா” நின்று “அந்த வானத்தை போல” ஒலிக்க ஆரம்பித்துசின்ன கவுண்டர் கூட்டத்தின் நடுவே கைகளை கூப்பி நடந்து வருவார். இந்த காட்சி முடிந்ததும் மீண்டும் “மன்மத ராசா” தொடரும். ஷண நேரத்தில் டேப்ரிக்கார்டரில் தேவையான பாட்டை மாற்றி விடும் அந்த யுக்தியை இப்பொழுது காணமுடியவில்லைஎல்லாமே கணினி மயமாகிவிட்டன. To the top of it, கையடக்க ஆண்ட்ராய்ட் செல்பேசிகள்கணினிகளை துவம்சம் செய்யும் அளவுக்கு தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

நிற்க.

மனிதனின் சராசரி வாழ்நாள் எவ்வளவு என்று ஆண்டவரிடம் கேட்டால் 60 வருடம் என்று கூறுகிறார். கூகிளின் இந்த தேடுதலுக்கான விடையை sanctum ஆக எடுத்துக்கொள்ளவும் தற்காலத்தில் நம்மை பழக்கப்படுத்திவிட்டார்கள். இந்த கூகிள் தேடல் குறித்து விளையாட்டாக சொல்லப்படும் ஒரு பகடி உண்டு. கொலை செய்தவனை கூகிள் தேடலின் இரண்டாம் பக்கத்தில் ஒளித்து வைத்தால், ஸ்விஸெர்லாந்து காவல் துறையே வந்தாலும் அவனை கண்டுபிடிப்பது கடினம் என்று. ஏனென்றால் மக்கள், கூகிள் தேடலின் முதல் பக்கத்தில் அதுவும் முதல் வரியில் தேடலுக்கான கிடைக்கும் பதிலை தமது தேடலுக்கான விடை என்று ஏற்றுக்கொண்டு சமாதானமாகி விடுகிறார்கள்.  எனவே தான், கூகிள் Ad சக்கை போடு போடுகிறது.

தொடர்க.

ஆக, ஷண நேரத்தில் டேப்ரிக்கார்டரில் பாடலை மாற்றி விடும் தொழில் திறமையை, கணினிமயமாக்கல் மூலம் நாம் வசதியாக கடந்து மறந்துவிட்டாலும், 2கிட்ஸ் ஆகிய நமக்கு, இந்த அபிரிதமான வளர்ச்சி உணர்த்துவது மற்றும் உரத்து கூறுவது யாதெனில், “ Buddy, You are nearing 40 எனவே, வன்மத்தை ஒழித்து கோவத்தை மறந்து, அன்பு செலுத்த மறந்த பெற்றோரிடமோ, துணையிடமோ,  குழந்தைகளிடமோ அல்லது எந்த உறவாயினும் திகட்ட திகட்ட அன்பு செலுத்த நியாபகப்படுத்துகிறது. கல்லெறிந்தால் ஓடும் நாய்போல தெறித்தோடிக்கொண்டிருக்கும் வாழ்கையில், ஆறமர நின்று சுவாசிக்க நிணவூட்டுகிறது. பார்க்க மறந்த சிட்டுக்குருவிகளை, சிறகடிக்காமல் வானத்தில் வட்டமிடும் பறவைகளை, அன்று மலர்ந்த ரோஜா பூக்களை, கைபிசைந்து சுவைக்கும் மதிய உணவை, பரிமாறும் கைகளில் உள்ள அன்பினை, நிசப்தமான நட்சத்திர இரவுகளை என வாழ்வில் நாம் அன்றாடம் தொலைக்கும் பல தருணங்களை நின்று ரசிக்க வாய்ப்பளிக்கிறது.

போலவே ஆறறிவு அறிவு ஜீவிகளைத்தவிர இந்த பூவுலகை கழிவு குப்பையாக்கும்  எண்ணம் வேறு எந்த மிருகத்திற்கும் இல்லை. நின்று நகர்ந்தாலும், இருந்து கிடந்தாலும், மண்ணை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணற வைக்கும் நெகிழி கழிவுகளையும் காங்க்ரீட் குப்பைகளையும் மனிதன் மட்டுமே, இந்த பூமிக்கு பரிசாகத்தருகிறான். நுகர்வு கலாச்சாரத்தில் அதீத மோகத்தில், நம்மால் இயன்ற மட்டும் இயற்கை வளங்களை சூறையாடி அடுத்த தலைமுறையை நிர்கதியாக்கிவிட்டு செல்கிறோம். 

உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே பெரிய உபகாரம் என்பது போல, வாழ்வின் அடையாளமாய் ஏதேனும் சாதனையையோ அரிய கண்டுபிடிப்பையோ செய்ய முடியாவிட்டாலும்,  மண்ணுக்கும் மனதிற்கும் காயங்களை பரிசளிக்காமல் அன்பை மட்டும் விட்டுச்செல்வோமாக. 

கருத்துகள் இல்லை: