செவ்வாய், மே 04, 2021

Welcome Home (2020)

 ஒரு அக்மார்க் த்ரில்லர்.

கிராமத்தில் இருக்கும் எந்த ஒரு ஆளையும் கணக்கெடுப்பில் தவற விட்டுவிடக்கூடாது என்று சென்சஸின் அருமை உணர்ந்த இரு ஆசிரியர்கள், அத்துவானக்காட்டில் இருக்கும் அந்த தனி வீட்டில் வலிய வந்து சைக்கோ கொலைக்காரர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இருவரும் இறுதியில் தப்பித்தார்களா? என்பதே இந்த த்ரில்லர் கதை.

ஆரம்பம் முதலே unconventional ஷாட்ஸ் மற்றும் லேப்பிங்க் வாய்ஸ் ஓவர் மூலம் நம்மை திரையில் இழுத்து ஒட்டவைக்கிறார் இயக்குனர். இந்த சைக்கோ ஜானருகென்ற படம் பிடித்த கேமிராமேனையும் டார்க் த்ரில்லர் வகையில் மூட் செட் செய்யும் பின்னணி இசையமைப்பாளரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இரு தூண்கள்.



காஷ்மீரா இராணி மற்றும் ஷ்வர்தா திக்லே என்று இரு நாயகிகள் தான் அந்த சென்சஸ் அதிகாரிகள். ஒரு மத்தியதர பள்ளியின் ஆசிரியர், அதற்கேற்ற வாடகை வீடு, ஸிகூட்டி, மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களைப்போன்ற ஒப்பனை என்று இதன் மூலமே படத்தின் பாதி வெற்றியை உறுதிசெய்துவிட்டார்கள். இன்ஸ்டாவில் இவர்கள் முகவரியை தேடினால், இந்த கதாப்பாத்திரத்துக்காக எவ்வளவு மேனேகேட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

அந்த சைக்கோ வீடு மற்றும் சைகோ கதாபாத்திர தேர்வில் படத்தின் மீதி வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அந்த வீட்டின் பின்புலம் தெரியாமலேயே (நமக்கும்) சென்சஸ் எடுப்பதற்காக இருவரும் உள்ளே சென்றவுடனேயே நமது மனம் பதபதைக்கிறது. வீட்டை கிளாஸ்ட்ரோபோபிக்காக காட்டிய கேமராவின் கோணம் நமக்கு அந்த திகில் உணர்வை செவ்வேனே கடத்திவிடுகிறது. ஒரு பெண்ணை காப்பாற்றும் பொருட்டு மீண்டும் அந்த வீட்டிற்குள் நுழைய முயலும் போது “போகாதே” என்று நாம் மனதிற்குள் எச்சரிக்கும்படி திரைக்கதைக்குள் இழுத்து சென்றுவிடுகிறார்.

கட்டிக்கொள்ளப்போகும் கணவனால் மிகவும் மரியாதைக்குறைவாக நடத்தப்படும் கதாபாத்திரம் ஒரு பக்கம், அண்ணனின் ஆண்வர்க்க அதிகாரப்பிடியில் சிக்கித்தவிக்கும் தங்கை கதாபாத்திரம் இன்னொருபுறம் என்று இந்த இரண்டு கதாபாத்திரங்களும் தங்களுடைய ஒடுக்கப்பட்ட உணர்வுகளையும் மறுக்கப்பட சுதந்திரத்தையும் பீறிட்டு வெளிக்கொணரும் காட்சியாகவே கிளைமேக்ஸை பார்க்கமுடிக்கிறது.  

மினிமம் பட்ஜெட்டில் நடிப்பு, திரைக்கதை, பின்னணி இசை, சோஷியல் மெசேஜ் என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்திருப்பது ஆச்சர்யம் மற்றும் பலம். இறுதிவரை சஸ்பென்ஸை ஒளித்து வைத்து படபடவென்று இருதயம் அடித்துக்கொள்ளும்வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு திரைப்படம். கிரெடிட்டில் இது உண்மைக்கதையின் தழுவல் என்று வேறு பதறவைக்கிறார்கள்.

Must Watch for Thriller Lovers !!!

 

கருத்துகள் இல்லை: