முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை விறுவிறுப்பை கூட்டி கொண்டே சென்றால், அதுதான் மண்டேலா. 90களில் ஒரு படம் எடுத்துமுடித்து பின்பு ரஷ் பார்க்கும்பொழுது, இந்த படம் ஒடுமா ஓடாத, கையை கடிக்குமா அல்லது ஸ்ட்ரைட்டா திருவோடா என்றெல்லாம் ஆருடம் சொல்லிவிடுவார்கள். அவ்வாறு தேறாத படம் எனில், சில்க்கை வைத்து “பொன்மெணி உருகுதே” போன்று ஒரு பாடலை ஷூட் செய்து படத்தை ரிலீஸ் செய்து தப்பித்த தயாரிப்பாளர்கள் நிறைய உண்டு. அவ்வாறு கால்ஷீட் நெருக்கடியில் சிக்கித்தவித்த பெருமை சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்து இப்போது யோகி பாபுவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில வருடங்களாக யோகி பாபு நடிக்காத படம் இவைதான் என விரல்
விட்டு என்னும் அளவுக்கு எல்லா படத்திலும் நடித்திருப்பார். சில படங்களில் வந்துபோயிருப்பார்.
அது அவரது குற்றமில்லை!!! சமீபத்தில் காமாசோமாவேன்று
எடுத்து வெளியிடப்பட்ட ‘ட்ரிப்’ திரைப்படம் கூட
இவரது ஒன் லைனர்களால் காப்பாற்றபட்டிருக்கும்.
அப்படிபட்ட யோகி பாபுக்காகவே ஒரு கதை எழுதி கொண்டிருப்பதாக ஜெயம்
ரவி கூறியிருக்கிறார். ராஜ்கிரணை மையமாக வைத்து எவ்வாறு தனுஷ் “ப.பாண்டி” என்றொரு சுவாரஸ்யமான
படம் எடுத்து வெளியிட்டாரோ அதே போல, ஜெயம் ரவியின் யோகி பாபு படத்திற்காக காத்துக்கொண்டிருக்கும்பொழுது தொக்காக
“மண்டேலா” வந்திருக்கிறது.
இதுவரை தலித் சினிமா என்ற பெயரில், சாதிக்கு எதிராகப் பேச முயன்ற படங்களை மிக அழுத்தமாகவே
திரையில் காட்சிபடுத்தியிருந்தார்கள். இந்திரா, காலா, பரியேறும் பெருமாள், அசுரன் என காட்சிப்
பிம்பங்களின் வழியான குறியீடுகள் ஒவ்வொன்றும் முன்வைத்த கருத்தியல் வெவ்வேறானவை. அதே
வரிசையில் வெளியாகிருக்கும் மற்றொரு படம் மண்டேலா என்று அவ்வளவு எளிதாக வரிசைபடுத்திவிட
முடியாது. காரண கர்தாக்கள் இயக்குனர் மற்றும் இயக்குனரின் நாயகன். காரணீக்கள் பகடி
செய்து விளையாடும் வசனம் மற்றும் நடிப்பு. நகைச்சுவையையும் தாண்டி தன்னால் மிளிரமுடியும்
என்று சாதித்து காட்டியிருக்கிறார் யோகிபாபு.
பொது கழிப்பிடம் ஒன்றை கட்டி திறப்புவிழாவுக்கு பஞ்சாயத்து என்றால்
கூட பரவாயில்லை, முதலில் யார் போவது, வடக்கூரா? தெக்கூரா? என்பதில்
ஆரம்பிக்கிறது அளப்பறை. ஸ்மைல் என்ற முடிதிருத்தும் பாத்திரத்தில் இயல்பாகவே பொருந்திப்போகிறார்
யோகிபாபு. மற்ற படங்களில் பார்த்த அதே முகபாவம் தான் என்றாலும் யோகிபாபுவுக்கு இது
காட்சியுடன் பொருந்திப்போகிறது. தபால் நிலையத்தில் பின்பக்க வழி இல்லையா என்று யோகி
பாபு திணறும் அந்த ஒரு காட்சி, ஒட்டுமொத்த சமூகத்தின் மீது விழும்
அடி. பெயரில்லாமல் ஊராரால், இளிச்சவாய் என்றழைக்கபடும் யோகிபாபு, பின்பு “மண்டேலா” என்ற பெயரைத்தெரிவு செய்த பின் கிருதாவிடம்
கேட்பார். “இது உயர்சாதி பெயராய் இருந்தால் என்ன செய்வது?” என்று.
போலவே முணுக்கென்றாலே செருப்பைத்தூக்கும் கேரேக்டர் என படம் நெடிகிலும் பல காட்சிகளை
துள்ளாலான எல்லளுடன் கோர்திருக்கிறார் இயக்குனர். பாடல் மற்றும்
பின்னணி இசை, காட்சி கோர்ப்பு போன்றவை படத்தின் சுவாரஸ்யத்தை
கூட்ட உதவுகின்றன.
இடைவேளை வரை ஒடுக்கப்பட்டவர்களின் உடல் - நிலம் - வாழ்க்கை
எவ்வாறு சித்திரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை மிகக் கறாரான விமர்சனப் பார்வையுடன், மற்றும் சுய எள்ளலுடன் பகடி செய்யும் இத்திரைப்படம்
சறுக்கிய இடம், அந்த ஒற்றை ஓட்டை வைத்துக்கொண்டு ஊருக்கு சாலை
போடுவது, தெருவிளக்கு அமைப்பது போன்ற மிகைபடுத்தப்பட்ட கற்பனை
காட்சிகளில் தான். அந்த ஒற்றை ஒட்டுக்காக அரசியல்வியாதிகள் (எழுத்துப்பிழையில்லை) எந்த அளவுக்கு கீழ்தரமாய் போவார்கள் என்பது, கிருதாவை காப்பாற்றத்துடிக்கும் நேரத்தில் சத்தியம் வாங்கும் காட்சியில் உக்கிரம்
காமிக்கிறது. இறுதிவரை நம்மை படபடப்ப்பாகவே திரைக்கதை இழுத்து செல்கிறது. மாற்றம் ஏமாற்றம்
என்று காத்திராமல், அந்த மாற்றத்துக்கான விதை நம்மிடமிருந்தே
ஆரம்பிக்கிறது என்ற மென்புரிதலோடு படம் நம்மை கட்டிப்போடுகிறது. சிறு குறைகள் இருந்தாலும், படத்தின் பேசுபொருள் காரணமாக அவை நாம் கண்ணை விட்டு மறைந்து நம்முனே புதுப்பரிமானத்தில்
மிளிர்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக