வெள்ளி, ஏப்ரல் 23, 2021

துணைவி

மூன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது அந்த குட்டி ஊரக நூலகத்திற்கு பெரிய சைக்கிளில் டக்கடித்துகொண்டே அடியெடுத்து வைத்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. அங்கு தொடங்கி பின்பு மஹாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஒரு சிறிய அறையில் உள்ள நூலகம், பின்பு சேவியர் பள்ளிக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய நூலகம் என பரப்பளவும் முன்னேறி படிப்பளவும் மெருகேரியது. அரசு உதவி பெரும் நூலகங்களில் உள்ள ஒரே குறை, புது புத்தகங்கள் உடனடியாக வாங்கமாட்டார்கள், பெரும்பாலும் பைண்ட் செய்யப்பட பழைய புத்தகங்கள் தான். ஒருமுறை விறுவிறுப்பான நாவல் ஒன்றை 455 பக்கங்களுக்கு படித்து பின் பார்த்தால், கடைசி ஐந்து பக்கங்கள் காணவில்லை. கொலையாளி யார் என்று இன்றளவும் தெரியவில்லை !!!

புதுபுத்தகங்கள் இல்லா குறையை போக்க, தேடிச்சென்றது லெண்டிங்க் லைப்ரரியைத்தான். வருடத்திற்கு பத்துரூபாய் கொடுத்து படித்தது என்பது மாறி, படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதன் விலையில் 10% என்று கண்ணை உருட்டி மிரட்டியது. இருந்தாலும் VFM என்ற காரணத்தினால் நூலகத்தில் இணைந்து படிக்க ஆரம்பித்தேன். அவ்வாறான ஒரு நூலகம் தான் பெருமாள்புரத்தில் உள்ள “SHIKSHA” லெண்டிங்க் லைப்ரரி. ஒரு வயதான அம்மா, அவரது கணவர், பிள்ளைகள் இருவரும் US வசிப்பு, வீட்டின் ஒரு பகுதி நூலகமாக செயல்படுமாறு வைத்திருந்தனர். சுஜாதாவையும் தாண்டி அந்த லைப்ரரி அம்மா பரிந்துரைத்து படித்ததுதான் பாலகுமாரனின், மெர்குரிப்பூக்கள்’, இரும்புக்குதிரைகள்’, பயணிகள் கவனிக்கவும்’. மூன்றுமே அழுத்தமான நாவல்கள். மேலும், தமிழையும் தாண்டி ஆங்கிலத்தில் சில நாவலாசிரியர் பெயர்கள் (Michael Crichton, Wilbur Smith, Sidney Sheldon) இன்னும் நியாபகத்தில் இருக்கிறது என்றால் அது அவர்கள் தயவு தான்.



நெடு நாட்களுக்குப்பின், கடந்த முறை ஊருக்கு போயிருந்தபோது, மூளையின் ஹிப்போகேம்பஸ் வழிகாட்டுதலின் பேரில் யாருடைய தயவும் குறிப்பாக கூகிள் மேப் தயவின்றி அந்த ‘SHIKSHA’ நூலகத்தை அடைந்தேன். தோராயமாக பதின்மூன்று வருடங்களுக்குப்பின். லைப்ரரி பூட்டியிருந்தது. வீட்டின் படிக்கட்டில் முன்னமே கூறிய அந்த வயதான் பெரியவர் அமர்ந்திருந்தார்.,

“சார், லைப்ரரி பூட்டிருக்கே?”

“ஆமா பூட்டிக்கிடக்கு. தம்பி நீங்க?

அறிமுகத்துக்குப்பின்,

“அந்த மேடம் இருக்காங்களா?”

“யார கேக்றீங்க?”

“லைப்ரரில அவங்கதான புக்லாம் கொடுப்பாங்க. அந்த மேடம்”

“அவ இல்ல. போயி சேந்துட்டா” என்று மேலே கையை காண்பித்தார்.

திடுக்கென்றிருந்தது.

மேலும், இப்போ வீட்லையும் யாரும் இல்லை. தனியாத்தான் இருக்கேன் என்று கீழே கோலம் இல்லாத வாசலை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

வேறு ஏதும் பேசாமல் திரும்பிவிட்டேன்.

நான் புத்தகம் எடுக்க வரும்பொழுது, சில நேரங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிகொண்டோ, காய்கறியை நறுக்கிக்கொண்டோ இருந்ததைப்பார்த்திருக்கிறேன். அவர்கள் வயது தோராயமாக எழுபது இருக்கலாம். குறைந்தபட்சம் நாற்பது வருட இல்வாழ்க்கை. சட்டென்று முடிவுக்கு வருவது என்பது செரிக்கக்கூடிய விஷயம் இல்லை. கணவனை இழந்த துணைவி கூட பெயரன் பெயர்த்தி என்று ஒரேனும் மனதை தேற்றிக்கொள்கிறாள்.

ஆனால் பெண் துணை இழந்த ஆணின் மனம் சொல்லிலடங்காது, சொல்லிமுடியாது. அதுவும் முதுமையில் மிகச்சோகம். காலை எழுந்தது முதல் இரவு படுக்கை செல்லும் வரை குழந்தை போல் தாத்தாக்களைப்பார்த்துக்கொள்ளும் பாட்டிகள் பல வீடுகளில் இன்றும் காணலாம். சுடுதண்ணீர் கூட வைக்கத்தெரியாமல் எழுபது வயதை தொட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். துணையை இழந்த அந்த வயதானவரிடம்   காஃபியோ, உணவோ தேவைக்கு உண்டார்களா என்று கனிவாய் கேட்பது என்பது கல்லைவிட்டெறிந்த நாய் போல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் மிகவும் அருகிவிட்டது.

எவ்வளவுதான் சுற்றம் இருந்தும் பெண் துணையை இழந்த வயோதிக ஆண், மறுநிமிடமே அனாதையாய் உணர்கிறான். கணவனை இழந்த பாட்டிமார், மகன் அல்லது மகள் குடும்பத்துடன், பழைய நினைவுகளை அசைபோட்டு வாழ்க்கையை கழித்துவிடுகிறார்கள். ஆனால் பணி ஓய்வு பெறும் வரை பொருள் ஈட்டும் பொருட்டு வாழ்க்கையை வீட்டிற்கு வெளியே கழித்த (தொலைத்த) ஆணுக்கு இந்த ஒட்டுதல் அவ்வளவு எளிதில் கைகூடிவிடாது. ஆணோ பெண்ணோ, தன் மகவோடு தோள்தொட்டு வளராத தந்தைக்கு, மீதம் இருக்கும் சொச்ச நாட்கள் நரகமே. இறந்த பிறகு, “இன்னும் கொஞ்சம் நன்றாக கவனித்திருக்கலாமோ” அல்லது “அந்த பாத்திரத்தை பிறகு துலக்கிக்கொள்ளலாம், இப்போது வா வாக்கிங் போகலாம்” என்று முழுமதி இரவில் நடை பயின்றிருக்கலாமோ, அல்லது உன் உறவுகளை விட்டு என் உறவுகளோடு, சுகிக்கவில்லையென்றாலும் சகித்துக்கொண்டு வாழ்ந்திருந்தாயே, ஒரு தடவையாவது சாப்பிட்டாயா? என்று கேட்டிக்கலாமோ போன்ற எண்ணங்கள் நீரில் தவழும் எண்ணை போன்று இறுதிவரை மிதந்து கொண்டே இருக்கும். கவலை விட்டொழிக்க ஒன்று ஞாபகங்கள் அழிக்கப்படவேண்டும் அல்லது மீளாத்தூக்கம் கொள்ள வேண்டும். இது இரண்டுமே வாய்க்கவில்லையென்றால் அது கர்ம வினை.

அதனால்தான் கவிப்பேரரசின் வரியில், மனைவியின் அருமை மறைவில்” என்று ஒரு பாடல் வரும். இல்லையென்றால் தன் மனைவி இறந்த பின்பும், அவளை புதைக்கக்கூட மனமில்லாமல் இரு நாட்கள் அவளுடன் இருந்து, துர்நாற்றத்தினால் அக்கம்பக்கத்தார் தலையிட்டு, இறுதிசடங்கு செய்யும்பொழுது  மனமுருகி “ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ” என்று அந்த ஓய்வுபெற்ற IIT பேராசிரியரால் பாடியிருக்க முடியாது.

 


1 கருத்து:

Banupriya சொன்னது…

It's difficult to go through life without our soulmate. A husband works day and night to provide his wife with all of life's conveniences, while she devotes her life to him. She has to deal with a variety of issues in order to keep her husband happy. After reading this article, I realized that,wife is the best friend a husband might ever have. Every husband should read this!!!