கடந்த வாரத்தில் நான் கடந்த இரு நிகழ்வு. இரண்டுமே உடன் பணிபுரிவர்கள் குடும்பத்தில் நடந்தவை தான்.
முதலாவது நிகழ்வு. மத்திம வயதுக்காரர்.
உடன் பிறந்த ஒரு அக்காள் உண்டு. ‘மற்றொரு நாள்’ என்று விடிந்த பலருக்கு போல அன்று அவருக்கு
விடியவில்லை. ஊரில் இருந்த அவரது தந்தையார் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். இரு வருடங்களுக்கு
முன்பு அவர் தன் தாயை இதே மாரடைப்பின் காரணமாக இழந்திருந்தார். ஆபரேஷன் தியேட்டர் வாசலில்
ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு ‘எது நடந்தாலும் பொறுப்பில்லை’ என்று இவரிடம் கையொப்பம் வாங்கிவிட்டு, அடுத்த அரை மணி
நேரத்தில் ‘எவ்வளவோ ட்ரை பண்ணினோம். காப்பாத்த முடியலை’ என்று அடுத்த ஆபரேஷனுக்கு உள்ளே போன டாக்டரை பார்த்து விரக்தியடைந்திருந்தார்.
“நம்மல்லாம் என்ன படிச்சு என்னத்துக்கு? மனுஷனால முடியாத காரியம் ஒண்ணும்
இல்லனு சொல்ல முடியாது. கண்ணு முன்னாடி துடிசிட்டிருக்க உயிரை காப்பாத்த தெரியலை. நிறைய
கத்துகிட்டோம்னு என்னைக்குமே நாம் சொல்லிக்கக்கூடாது. இனிமேல் தான் கத்துக்க ஆரம்பிக்கணும்’ என்று மனம் வெதும்பி பேசியது இன்றும் ஞாபாகம் இருக்கிறது”.
சரி. நிகழ்காலத்திற்கு வருகிறேன். அப்பாவின்
இறுதி சடங்கையெல்லாம் நிறைவேற்றிவிட்டு ஆபீஸ் திரும்பியவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
‘நல்லாதான்
பேசிட்ருந்தார். இந்தா மாதிரி ஆகும்னு எதிர்பார்க்கலை. எந்த ஒரு அறிகுறியுமே இல்லை.
அம்மா போனதுக்கப்புறம் தோப்பு துரவுன்னு பாத்துட்டு நிம்மதியா தான் இருந்தாரு. அவருக்கு
பிடிச்ச மாதிரி வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருந்தாரு. திடீர்னு இப்டி ஆனது ஏத்துக்கவே
முடியல. பெரிய வீடு. நீளமா இருக்கும். தொட்டில வளக்குற மீன் வாங்குறதுக்கு நானும் அப்பாவும்
எங்கெங்கெல்லாமோ போவோம். பஸ் ஏறி அடுத்த ஊருக்கு. சைக்கிள்ள, டூ வீலர்ல. ஃப்ரெண்ட் மாதிரி தான் பேசுவாரு. எல்லாம் இப்போ ஞாபகத்துக்கு வருது.
ஒண்ணு பாருங்க அதுல. அவரு ஆசை பட்ட மாதிரி கடைசில பொண்ணு மடில தான் உசுர விட்டாரு’.
இன்னும் சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்ப
யத்தனிக்கும் வேளையில் கேட்டேன். ‘வீட எப்பிடி மெயின்டய்ன் பண்ணப் போறீங்க? அடிக்கடி ஊருக்கு
போக வேண்டிருக்குமா?’
‘இல்ல. தேவையிருக்காது
சார். அது அக்கா பேர்லேயே மாத்திடலாம்னு சொல்லிட்டேன். நமக்கு இங்க ஒரு வேலை இருக்குது.
மாமா எதுவும் வேலை செய்யலை. ஏஜன்சி மாதிரி ஒரு பிஸினஸ் பண்றார். இந்த வீடு அவங்களுக்கு
கொஞ்சம் மனசளவுல தெம்ப கொடுக்கும். எங்க அக்காதானே. அப்பா இத தான பண்ணிருப்பார்’
கேட்டுக்கொண்டிருந்த எனக்கு வார்த்தையே
வரவில்லை. அவருடைய அப்பா உயிரோடிருந்திருந்தால் கூட இரு பக்கமும் பாதி பாதி என்று அல்லாடியிருப்பார்.
எத்தனை பேருக்கு இந்த மனசு வரும்? பெற்றோர் இறந்த பிறகு தங்கையை வீட்டிற்குள்ளேயே வராதே என்று முற்றத்திலேயே
நிற்க வைத்திருக்கும் சகோதரர்களை பார்த்திருக்கிறேன். பெற்றோருடன் இருந்தபோது ஒரு தட்டில்
சாப்பிட்டவர்கள் தானே இந்த இருவரும். வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க முடியாத அந்த
பெண் மனது என்ன பாடு பட்டிருக்கும்? இவர் தனது அப்பாவின் ஸ்தானத்திற்கும்
ஒரு படி மேலே சென்றுவிட்டார். ஒரு வேளை ஆத்மா என்பது உண்மையாக இருந்தால், இவர்களது பெற்றோரின் ஆத்மா மிகுந்த மகிழ்ச்சியுடன் இவரை ஆசீர்வதித்துக்கொண்டிருக்கும்.
இரண்டாவது நிகழ்வும் அலுவலக ஊழியர்
தான். மங்களூர் சொந்த ஊர். வேலைக்காக திருச்சியில் குடியிருக்கிறார். கடந்த வாரம் இவரது
தாயார் தவறிவிட்டார். விசாரித்தபொழுது தான் தெரிந்தது இவர் பதினோராவது குழந்தையாம்.
தாயார் ஸ்ட்ரோக்கில் விழுந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக படுத்த படுக்கையாகிவிட்டார்.
தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயாரை மங்களூரில் தன் சொந்த வீட்டில்
வைத்து பராமரித்து வந்தார். மனைவி மக்கள் மங்களூரில். இவர் இங்கு. இரண்டு வராங்களுக்கு
ஒரு முறை மங்களூர் பயணம். லீவை காம்பன்சேட் செய்வதற்கு அனைத்து ஞாயிற்று கிழமையும்
அலுவலகம் வந்துவிடுவார். யோசித்து பாருங்கள். வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் விடுமுறையே
நமக்கு பத்தவில்லை. நாள்தோறும் ஆபீஸ் வருவது என்பதெல்லாம்?
பேசிக்கொண்டிருந்த பொழுது தான் தெரிந்தது.
“நான் கடைசி பையன். எனக்கு
முன்னாடி பத்து பேரு. அம்மா அப்பாவ யாரும் பாத்துக்கமாட்டோம்னு சொல்லிட்டாங்க. இவங்களுக்கு
உடம்பு சரியில்லாம இருக்கும்போது இருமுனா வாமிட் பண்ணிட்டா திட்டிட்டே இருப்பாங்க.
அதனால அப்பா அம்மாவுக்கு அங்க இருக்க பிடிக்கல. இங்க கூட்டிட்டு வந்தேன். அப்பாவுக்கு
கிளைமேட் ஒத்துக்கல. ஊர்லயும் வீடு இல்ல. லோன் போட்டுட்டு ஊர்ல இடம் வாங்கி வீடு கட்டினேன்.
அப்பா இறக்குறதுக்கு முன்னாடி மூணு மாசம் அந்த வீட்டுல இருந்தாரு. அம்மாவ அதே வீட்டில
ரெண்டு வருஷம் வச்சி பாத்துக்கிட்டேன்”. என்றார்
நாம் சிறு குழந்தையாக இருந்தபோது நமது
எச்சங்களை கையில் ஏந்தி கழுவிய கைகள் தானே நம் அப்பா அம்மாவுடையது. வயது மூப்பின் காரணமாக
அவர்கள் குழந்தையாக மாறிய அந்த தருணத்தில் பணிவிடை செய்ய நாம் தயங்குவது ஏன்? ஏறிய ஏணியை எட்டி உதைப்பது
எந்த வகையில் சேர்த்தி?
இறுதியாக ஒன்று சொன்னார். “நான் பிறக்கும்
போது எங்க அம்மாவுக்கு நாப்பது வயசு. அப்பாவுக்கு நப்பாத்தஞ்சு. கடைசி காலத்துல அவங்கள
நான் பாத்துக்கிட்டேன்ற சந்தோஷம் திருப்தி எனக்கு இருக்கு சார். எங்க வீட்டுல சந்தோஷமா
தான் இருந்தாங்க. இறந்தாங்க. அது போதும்”
இரண்டுமே பத்து நிமிட உரையாடல்கள் தான்.
எத்தனை எத்தனை புரிதல்கள். வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் எப்போதும் கொடுத்துவிடுவதில்லை.
இரண்டு பெரு வாழ்வின் சாட்சியங்கள் கண் முன்னே வந்து போகின. நாம் வாழப்போகும் எஞ்சிய
வாழ்க்கைக்கான படிப்பினைகள் என மிக மிக நெகிழ்ச்சியான
இரு தருணங்கள் அவை.
தரையில் காலை ஊன்றி நடப்போம்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக