இது நடந்து எப்படியும் பத்து வருடங்கள் இருக்கலாம்.
ஒரு நண்பகல் வேளையில் மத்திய கைலாஷ் MRTS ஸ்டேஷன் நோக்கி நடந்துகொண்டிருந்தபோது, எனக்கு எதிரே இருபதடி தொலைவில் திபு திபுவென்று ஐந்தாறு குண்டர்கள் அரிவாளுடன்
ஓடி வந்தனர். பக்கென்றிருந்தது. தலை தெறிக்க ஓடி வந்தவர்கள் வேகமாக என்னை கிராஸ் செய்துவிட்டு
MRTS ஸ்டேஷன் உள்ளே ஓடினார்கள். அதிர்ச்சியில் உறைந்து நின்று
கொண்டிருந்த போது கொஞ்ச தூரத்தில் ‘கட் கட்’ என்று சொல்லும் சத்தம் கேட்டது. அப்பொழுதான் புரிந்தது அது ஒரு சினிமா சூட்டிங்
என்று. சூரியா படம். பேர் ஞாபகமில்லை.
கடந்த வாரம் இது போல சென்னை பைபாஸ் ரோட்டில் ஒருவர் டூ வீலரில்
சென்று கொண்டிருக்கிறார். இரவு பன்னிரெண்டு
மணி. திடீரென்று மூன்று பேர் புதருக்குள் இருந்து வெளியே ஓடி வருகின்றனர். இவர் என்னவென்று
சுதாரிப்பதற்குள் தலையில் ஒரு வெட்டு. ஹெல்மட் போட்டிருக்கிறார். அதற்கு மேல் தான்
வெட்டு என்றாலும் தடுமாறி கீழே சாய்கிறார். மூன்று பேரும் அவரை தூக்கி புதருக்குள்
இழுத்து போட்டு சரமாரியாக வெட்டுகின்றனர். மறிப்பதர்க்காக குறுக்கே கை நீட்டினாலும்
அங்கேயும் ஒரு வெட்டு. கை, கால், முகம் தலை என்று எல்லா இடத்திலும் வெட்டு. கீழே
விழுந்த லேப்டாப் மற்றும் பர்சை எடுத்துக்கொண்டு ஓடி விடுகின்றனர். அவ்வளவும் அரை நொடியில்.
இவர் உயிரை கைய்யில் பிடித்துக்கொண்டு தவழ்ந்து ரோட்டின் மேலே வருகிறார். ஒருவர் பார்த்து
போலீசுக்கு தகவல் சொல்லவும் அடுத்த இரண்டு நிமிடங்களில் ரோந்து வாகனம் வந்திருக்கிறது.
மேல சொன்னவை சினிமா சூட்டிங் இல்லை. சினிமாவையே மிஞ்சும்
அளவுக்கு எங்கள் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கடந்த வாரம் நடந்த சம்பவம்.
போலீஸ் வந்தவுடன் ஆசுவாசமாயிருக்கிறார். ஆனால் வந்தவர்கள்
இவருக்குத்தான் குடைச்சல் கொடுத்திருக்கின்றனர். முன் விரோதமா? கள்ளக்காதலா? சாதி மறுப்பு திருமணமா? என பல்வேறு கேள்விகளால் இவரை
துளைத்து எடுக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் இவரால் சமாளிக்கமுடியாமல்
மயங்கி விழுந்திருக்கிறார். ஆம்புலன்ஸ் அழைத்து மருத்துவமனையில் அனுமதித்து ஏழு இடங்களில்
தையல். உயிருக்கு பயம் இல்லை. 3000 ரூபாய் STUDD ஹெல்மட் என்பதால்
பிழைத்திருக்கிறார். லோக்கல் பிராண்டாக இருந்திருந்தால் வீசிய வீச்சிற்கு தலை பிளந்திருக்கும்.
CCTV
பார்த்த பின்பு தான் போலீஸ் அவர்களை அடையாளம் கண்டுள்ளது. ரிபீடட் அஃபண்டர்ஸ்.
வெட்டியவனே போலீஸ் ஒருவரின் மகன். சாரி. மகர். முழு போதையில் இருந்திருக்கின்றனர்.
போதை என்றால் மது இல்லை. கஞ்சா. இது போன்ற வழிப்பறி தான் இந்த கும்பலின் வேலையாம்.
அடித்துவிட்டு கொள்ளையடித்து செல்வார்களே ஒழிய இது போல வெட்டியதில்லையாம். அதனால் தான்
போலீசுக்கு டவுட் வந்து இவரை பிராண்டியிருக்கிறார்கள்.
இரண்டு விஷயங்கள்.
முதலாவது. ரிபீடட் அஃபண்டர்ஸ் என்றால் எப்பொழுது இவர்கள்
திருந்துவது. ஜெயிலில் போடுவது ஜாமீனில் வெளிவருவது மட்டுமே இவர்களின் தொழில் என்றால்
பொதுமக்கள் நிலையென்ன? வெட்டு பட்டு விழுந்தவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அவ்வளவு குறுக்கு
விசாரணை அந்த நேரத்தில் எதற்கு?
இரண்டாவது. கஞ்சா வெகு எளிதாக எல்லோரிடமும் புழங்குகிறது.
அதுவும் பள்ளி மாணவர்களிடம். வெட்டிய மூன்று பேருமே இருபது இருபத்தைந்து வயதுக்குள்ளகத்தான்.
CCTV யில்
இவர்கள் நடந்து போன காட்சியை போலீசார் காமித்திருக்கிறார். எதையோ சாதித்தது போல் கத்தியை
கையில் பிடித்துக்கொண்டு நடு ரோட்டில் நடந்திருக்கின்றனர். பயம் என்ற உணர்வு கிஞ்சித்தும்
இல்லை. ‘நான் மகான் அல்ல’ படத்தில் வரும்
விஷக்கிருமிகள் போல. கஞ்சா, ஊசி, பவுடர்
போன்ற போதைப்பொருள் அவ்வளவு எளிதாக ஊருக்குள் கிடைக்கிறது. விடலை பையனிற்கு எங்கு விற்கிறார்கள்
என்று தெரிகிறது. ஆனால் போலீசுக்கு தெரியவில்லையா? அரசியல் சாயம்
பூச விரும்பவில்லை. எந்த ஆட்சி என்றாலும் இதுதான் நிலைமை என்றால் எங்கு போய் முறையிடுவது? ஆயிரம் அற்புதங்கள் நிகழ்த்தும் இதுபோன்ற இளைஞர் சக்தி, பாதை மாறி போனால் முடிவு என்னவாகும் என்பது யோசிக்கவே மிரட்சியளிக்கிறது.
படிக்கப்போகும் பிள்ளைகள் படிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.
ஒழுக்கத்துடன் இவர்கள் பள்ளியிலிருந்து வெளி வந்தால் போதுமேன்றிருக்கிறது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மாணாக்கர்கள்
மற்றும் பொது மக்கள் என அனைவரும் விழித்துக்கொள்ளவேண்டிய தருணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக