முதல் கட்டமாக தலித் சினிமா என்று அழைக்கலாமா என்பதே என்னளவில்
கேள்விக்குறியாகிறது. தனியொரு அங்கீகாரம் அளித்துவிட்டோம் என்பதே ஒதுக்கிவைத்ததை
பிரகடனபடுத்துவதற்காக மட்டுமே என்று
கொக்கரிக்கும் ஒரு ஆதிக்க எண்ணமாகவே புரிந்துகொள்கிறேன்.
இந்த பதிவின் காரணம் கர்ணன் சினிமாவின் தாக்கம்.
ஒரு சிறிய கிராமம். அந்த ஊரிற்கு பேருந்து நிறுத்தம் கிடையாது.
பேருந்தில் ஏற வேண்டும் என்றால் அருகிலிருக்கும் மேலூருக்கு செல்ல வேண்டும்.
மேலூர் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். மேலூருக்கும் இந்த சிறிய
கிராமத்திற்கும் ஆகாது. பேருந்து நில்லாமல் போவதினால் குழந்தைகளின் படிப்பு
எவ்வாறு பாதிப்படைகிறது, மருத்துவமனைக்கு செல்ல முடியாமல்
எத்தனை பேர் அவதிப்படுகின்றனர், அயலூருக்கு
வேலைக்கு செல்ல முடியாமல் பொருளாதார ரீதியாக
மக்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றனர் போன்ற பல பிரச்சினைகள் ஒவ்வொன்றாக கிளை
பரப்புகிறது. இறுதியாக அந்த ஊரில் பேருந்து நின்றதா? கர்ணனின் பங்கு இதில் என்ன? என்று
கண், காது, வாய் மூடி ஒதுங்கி
நிற்கும் சமூகத்திடம் அறைந்து சொல்கிறது.
காட்சிப்படுத்துதல் என்ற ஒன்று இல்லாத காலத்தில் இயல், இசை, நாடகம் என்று முப்பிரிவாக இருந்த தமிழ், இன்று முக்கலவையாகி
முப்பரிமானத்தில் திரைப்படமாக உருமாறியிருக்கிறது.
புத்தகம் எவ்வாறு ஒரு வாழ்வின் சாட்சியோ அதைப்போலவே சினிமாவும் ஆவணம் தான். இதை
ஒரு கருவியாக பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட குரலை ஓங்கி ஒலிக்க செய்து அதில் வெற்றியும் கண்டிருப்பது பா.ரஞ்சித் மற்றும் மாரி
செல்வராஜ் அணி. இவர்களுக்கு முன்னால்
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை பறைசாற்றும் முழு
நீள திரைப்படம் என்பது தமிழ் சினிமாவில் இல்லை. புதிதாக ஒரு புள்ளியும்
வைத்து கோடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
காலா, கபாலி, அசுரன், ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன் என ஆரோக்கியமான ஆவணப்படுத்தும்
நீட்சியாக இது தொடர்கிறது. தற்சமயம் மீள் நினைவில் வரும் இரு வேறு காட்சிகள். 'என்னங்க சார் உங்க சட்டம்?' திரைப்படத்தில்
அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற காட்சியில், அர்ச்சகர்
தேர்வுக்கு வரும் ஒரு தாழ்ந்த சாதி மாணவனை, OBC என்று வரையறுக்கப்பட்ட ஒருவன் இழித்து பேசவும், அங்குள்ள ஒருவர் 'உனக்கும் சேர்த்துதான்டா அவன் போராடுறான். இதுகூடவா உனக்கு புரியல', எனபதும், கபாலியில் ‘நான் முன்னுக்கு வர்றதுதான் உனக்கு எரிச்சலா இருக்குன்னா, கோட்டு சூட்டு போடறது தான் உனக்கு எரிச்சலா இருக்குன்னா, நான் முன்னுக்கு வருவேண்டா, கோட்
சூட் போட்டு கால் மேல கால் போட்டு உக்காருவேண்டா, ஸ்டைலா, கெத்தா' என்பதும் நினைவலைகளில் எழும்பி வருகிறது. இந்த இரு வேறு
வசனங்களையும் அதன் பின் உள்ள தாக்கங்களையும் புரிந்துகொள்ள நமக்கு கர்ணனும்,
ஜெய் பீமும் இன்னும் பல காட்சிகளும் தேவைப்பட்டிருக்கிறது.
மேடைகளில் பேசும் வைகோ துண்டை இழுத்து இழுத்து போட்டுக்கொள்வதற்கும்,
நாதஸ்வரம் வாசிக்கும் வித்வான்கள் அந்த
வேர்வையிலும் விடப்பிடியாக
பட்டு சட்டை அணிவதற்கும் வரலாறு உண்டென்பதை
நாம் அறிவோமா?
ஆவணப்படுத்தல் ஆங்காரமாய் தொடரட்டும். பறை எட்டு திக்கும்
ஒலிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக