நண்பன் ஒருவனை விடாக்கொண்டான் போல தேடிய சம்பவம் இது. மேலும் நமது விவரங்கள் இன்டர்நெட்டில் எவ்வாறு விரவிக்கிடக்கின்றன என்பதற்கான ஒரு சான்று.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் அவனுடனான தொடர்பு அறுந்துபோனது. ஏழு வருட நட்பு. எனக்கு பலதரப்பட்ட நூல் அறிமுகப்படுத்தியது மற்றும் வாசிக்க வைத்ததற்கு முக்கியமான காரணீ அவன். மேற்படிப்பு காரணமாக வேறு வேறு திசையில் பயணமாகியதில் மறந்தேவிட்டேன். செல்போன் இல்லாத ஒரு நிம்மதியான காலம் அது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவ்வப்போது ஞாபகம் வந்தாலும் தொடர்பு கொள்ள வழியில்லை.
கடந்த வருடம் இரண்டாவது அலை கொரோனா தாக்கத்தில் தப்பி பிழைத்த நேரம். அதாவது ஆறு வயது மகளிடம் பேங் யூசர் id மற்றும் பாஸ்வர்டை சொல்லிவிடலாமா என்ற ஒரு கலக்கமான தருணமது. பார்க்க வேண்டும் என்று நினைத்து பார்க்க முடியாத நண்பர்களை மீண்டும் பார்க்க வழியில்லாமல் போய்விடுமோ என்ற கவலை. அவனை மையப்படுத்தி ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். இறுதியில் அவனை கண்டுபிடித்ததும் பேசமுடியாத நிலைமை என்று முடித்திருந்தேன். முடிவை வாசித்து அன்றிரவே வேறு ஒரு நண்பன் என்னை விளித்து, தயவு செய்து பேசிவிடு என்றான். நம்பர் இல்லை என்று கூறினாலும் விடவில்லை. இவனுடைய அழைப்பிற்கு பிறகு, அவனை எப்பாடு பட்டாவது கண்டுபிடித்தே தீருவது என்று முடிவு செய்தேன்.
ஏற்கனவே முயற்சி செய்தது தான். மீண்டும் ஒருமுறை facebook, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவனது பெயரை தேடினேன். வைக்கப்போரில் ஊசியை தேடுவது போல இருந்தது. நண்பனது வீடு எனக்கு ஞாபகம் இருந்தது. நான் இருபது வருடத்துக்கு முன் வசித்த ஏரியாவுக்கு அருகில் நண்பன் ஒருவன் போலீசாக வேலை செய்து கொண்டிருந்தான். அவனை விளித்து அடையாளங்கள் சொல்லி விசாரித்து சொல்லுமாறு உதவி கேட்டேன். இரண்டே நாட்களில் விசாரித்து விட்டு பதிலனுப்பினான். அவர்கள் வெகு காலம் முன்பே அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர் என்பதும் மேலதிக தகவல் இல்லை என்றும் கூறினான்.
என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்த வேளையில், அதே ஏரியாவில் வசித்த மற்றுமொரு நண்பனை அழைத்து தகவல் சொல்லி விசாரிக்க சொன்னேன். அவனது நண்பன் அமெரிக்காவில் இருப்பதாகவும் அவனிடம் தொடர்பில் இருக்கிறான் என்றும் அன்றிரவே ஒரு நம்பரை அனுப்பிவைத்தான். ஆர்வமாக உடனே அழைத்தேன். சுவிட்ச் ஆப். இரண்டு மூன்று நாட்கள் முயற்சித்தும் சுவிட்ச் ஆப். இந்த நம்பர் உபயோகப்படுத்தாத நம்பர் என்று தெரிந்துவிட்டது. ஆனால் ட்ரு காலரில் அவனது பெயரை காண்பித்தது. அவனது பெயரில் ஒரு extra
k இருந்தது. மேலும் அவனது அப்பா பெயரும் இணைத்து காண்பித்தது. அதுதான் முதல் லீட்.
அதில் காண்பித்த அதே பெயரை facebook இல் தேடிப்பார்த்தேன். சிக்கிவிட்டான். ப்ரொபைல் லாக் செய்யப்படவில்லை. அதற்கு முதல் நாள் போஸ்ட் செய்திருந்தான். ஆக்டிவான ப்ரொபைல் தான். பிடித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை. உடனே மெசேஜ் அனுப்பி காத்திருந்தேன். இரண்டு நாட்கள் கழித்தும் பதிலில்லை. ஒருவேளை unknown request இல் இருக்கிறதோ என்று நினைத்து அவனது போஸ்டை லைக் செய்த நண்பர்களுக்கு மெசேஜ் செய்து தகவல் சொல்லச்சொன்னேன். மேலும் நம்பர் இருந்தால் பகிருமாறு கேட்டேன். அவர்கள் கொடுத்ததும் அதே பழைய நம்பர். இரு மாதங்கள் கடந்த பின்பும் அதே நிலை. சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது. மேலும் ப்ரோபைலை ஆராய்ந்தபோது அவனது மனைவிபோன்ற ஒரு ப்ரொபைல் கிடைத்தது. ஆனால் அது லாக்ட். நம்பர் கேட்டு மெசேஜ் அனுப்பி காத்திருந்தேன். பதில் வரவில்லை.
மீண்டும் தொய்வு. இப்படியே மூன்று மாதம் ஓடிவிட்டது. ஒருவித குறிக்கோளே இல்லாமல் அவனது மனைவி பெயரை கூகிளில் தேடினேன். சிக்கிவிட்டது. அரசு மருத்துவமனையில் பணிநியமன ஆணை. அதில் அவர் பெயர் இருந்தது. எந்த மருத்துவமனை என்று கண்டுபிடித்து அந்த மருத்துவமனையின் வெப்சைட்டில் அவரது பெயர் இருப்பதை உறுதிப்டுத்திவிட்டேன். இப்பொழுது அங்கு வேலை பார்க்கும் மற்றுமொரு நண்பனிடம் அவனது போட்டோவை பகிர்ந்து பேசியபொழுது அவனது அம்மாவும் அதே மருத்துவமனையில் வேலைபார்த்துள்ளார் என்பது தெரியவந்தது. அடுத்த நாளே அவன் மனைவியிடம் பேசி நம்பரை வாங்கிவிட்டான்.
கிடைத்த மறுநிமிடமே அழைத்தேன். ஊஹூம். பதிலில்லை. இரண்டு மூன்று நாட்கள் அதே நிலை. வெறுத்துவிட்டது. இதற்கு மேல் எப்படி என்று. நான்காவது நாள் வேறொரு நம்பரிலிருந்து கால். அவனே. 'ஏண்டா போன் பண்ணா எடுக்க மாட்டியா?' என்று உரிமையாக கடிந்துகொண்டேன். முந்தைய பிசினஸில் இருக்கும்போது இவனது நம்பர் வெளியே பல பேரிடம் போய்விட்டது. ஒரு நாளைக்கு நூறு ராங் கால். அதற்கு பதில் சொல்லியே மாளவில்லை. ஆதலால் இரண்டு மூன்று முறை விளித்தால் மட்டுமே மீண்டும் விளிப்பேன் என்று ஒரு அரிய கோட்பாட்டை விவரித்தான். சரிதான் என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பழங்கதைகள் எல்லாம் பேசிவிட்டு அவனை ஒரு கேள்வி கேட்டேன்.
'இவ்ளோ முயற்சி பண்ணி உன்ன கண்டுபிடிச்சிருக்கேனே, நீ என்ன ஏன் தேடலை?'
'ஙே' என்று முழித்தான். மேலும் அவனை தர்மசங்கடப்படுத்த விரும்பவில்லை.
காலம் கரைபுரண்டு ஓடினாலும் அவனிடம் நான் கொண்டிருந்த நட்புணர்வு என்றும் மாறாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக