இண்டஸ்ட்ரியில் முழுமையான சப்போர்ட் மற்றும் பணபலம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு படத்தை வெளியிட்டு தமிழ் திரையுலகின் வரலாற்றையே சற்று தலைகீழாக மாற்றியமைத்த ஒரு சம்பவம் இது.
எவ்வளவு தான் ஷார்ட் ஸ்டின்ட் ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அவர்களது ஞாபகம் வந்தால் ஒரு முறையாவது விளித்து கதைத்துவிடுவேன். பகிர்ந்து அளவளாவி மகிழ்ச்சியை தெரிவிப்பதை விட வேறென்ன பெரிய வேலை செய்து கிழித்து விடப்போகிறாம். அவ்வாறான ஒரு நண்பரின் ஞாபகம் வந்தது. பத்து வருடங்களுக்கு முன் சந்தித்திருந்தேன். பக்கத்து அறை. அவர் ஒரு பைன் ஆர்ட்ஸ் நிபுணர். நாங்களெல்லாம் காலையே கல்லெறிந்த நாய் போல் பரபரப்பாக கிளம்பி வேலை முடித்து, பிழிந்து போட்ட கரும்பு போல் இரவு வீடு திரும்பும் நெகிழி குப்பைகள். இவரோ காலை சாவகாசமாக எழுந்து வரைவதற்காண கான்செப்டை வெளியில் சென்று கேமராவில் பதிவு செய்து பின்னிரவில் தனது படைப்புகளை மெருகேற்றும் ஒரு படைப்பாளி. தேர்ந்த வித்தைக்காரர். அவர் தத்ரூபமாக வரைந்திருந்த ஒரு அல்லி மலர் இன்றளவும் எனது நினைவில். இது போன்ற படைப்புகளை அவ்வப்போது வரைந்து கண்காட்சியில் அதை விற்றுவிடுவார். என்னளவில் அவரை இவ்வாறே தெரிந்து வைத்திருந்தேன்.
ஆனால் அன்று அழைத்து பேசிய போதுதான் அவர் இதற்கு முன் ஒரு கிராஃபிக்ஸ் ஹெட் ஆக வேலை செய்தது தெரியவந்தது. மேலும் ஒரு படத்தை பாதிவரையில் முடித்துவைத்திருந்திருக்கிறார். அது வரைக்கும் செலவழிக்கப்பட்ட தொகை 14 கோடி. ஒப்பீட்டளவில் சொல்வதென்றால், அந்த காலகட்டத்தில் ரிலீசான வெயில் படத்தின் பட்ஜெட் 1 கோடி மட்டுமே. இப்படிப்பட்ட சூழலில் தான் 'இது ரஜினின்னு சொன்னா லதாவே நம்ப மாட்டாங்க' என்ற விமர்சனத்திற்கு புகழ் பெற்ற 'கோச்சடையான்' ரிலீஸ் ஆகியது. கதை திரைக்கதை இசை என் எல்லாமே பிரமாதமாக இருந்தாலும் படம் நெடுகிலும் உறுத்திய கிராபிக்ஸ் காட்சிகள் உலகளவில் மிக மோசமான விமர்சனத்தை சந்தித்தன. இதன் காரணமாக அன்றைய காலகட்டத்தில் இவருக்கு தெரிந்து தயாரிப்பு தரப்பில் தொந்தரவு செய்யாத நல்ல கிராபிக்ஸ் வல்லுநர்கள் இருந்தும், ஆறேழு ப்ராஜெக்ட்கள் அப்படி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதன் தயாரிப்பாளர்கள் கிளம்பிவிட்டார்கள். தோராயமாக இன்றைய மதிப்பில் 500 கோடி மதிப்புள்ள தொகை முதலை வாயில் மாட்டிக்கொண்டது. காரணம் இந்த 3d படங்கள் ஒர்க்கவுட் ஆகாதோ என்ற அவநம்பிக்கை தான். வேலை செய்து கொண்டிருந்த கிராபிக்ஸ் ஆட்களுக்கு வேலை பறிபோய்விட்டது. விரக்தியில் வேறு வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டார்கள்ஏ. எனது நண்பர் மீண்டும் பைன் ஆர்ட்ஸை கையில் எடுத்திருக்கிறார். ஒரு வேளை இவரது படங்கள் வெற்றிகரமாக வெளிவந்திருந்தால் இவர் அடைந்திருக்க வேண்டிய உயரம் சர்வதேச அளவில். மற்றவர்களின் தவறுகளால் பகடையாக்கப்பட்ட இவரை போன்ற சிலர் மீண்டும் துளிர்த்தெழுந்து செட்டில் ஆவதற்கு சில காலம் பிடித்துள்ளது. இன்னும் பலர் இன்றும் போராட்டத்தை சந்தித்து கொண்டுதானிருக்கின்றனர். ஏன், தமிழ் திரையுலகில் இன்றளவும் ஒரு நல்ல முழு நீள 3d படம் வெளிவரவே இல்லை என்பதற்கான விதை இங்கு போடப்பட்டுள்ளது. பண்படுத்தி மீண்டும் கை கூடிவர காலம் உதவி செய்யட்டும்.
இதுவரை தான் சம்பாதித்த பேரை வைத்து கொண்டு 'முதன்முதலில்' என்ற பேரை பெறுவதற்காக, அரைகுறையான கிராபிக்ஸ் உடன் வெளியிடப்பட்ட ஒரு திரைப்படம், கெயாஸ் தியரி போல் பின்வைளைவுகளை ஏற்படுத்தி எத்தனை பேரின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது என்பதற்கான சான்று இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக