தமிழ் நெடுஞ்சாலை
சந்திக்க விரும்பிய பிரபலமான ஆளுமைகளின் பட்டியலில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முதலில் இருப்பவர் வாத்தியார்(சுஜாதா) தான். கல்லூரியின் ஒவ்வொரு பருவத்தேர்வுக்கும் பாடப்புத்தகம் கையில் இருக்கிறதோ இல்லையோ, வாத்தியாரின் கதைகள் கைகளில் தவழும். அதுதான் ஸ்ட்ரெஸ் பஸ்டர். சென்னையில் வேலைக்கு சேர்ந்தபோது சந்திக்கவேண்டும் என்ற ஆவலில் அவர் வசிக்கும் முகவரி வரை தேற்றிவைத்தபோதுதான், 2008 பிப்ரவரி 27 திகதியில் அவர் இறந்த அந்த துயரச்செய்தி இடியென இறங்கியது. வாய்ப்பு தவறிவிட்டது.
அவருக்கு அடுத்த இடத்தில் நான் பெரிதும் மதிப்பது, வாள் போன்ற கூரிய வார்த்தை வீச்சுகளின் சொந்தக்காரர் பாலகுமாரன் அவர்களை. எண்பது தொண்ணூறுகளில் பாக்கெட் நாவல் அதிகமாக விற்பதற்கு ராஜேஷ்குமாரோடு இவரும் ஒரு காரணாமாயிருந்தார். முன்னவர் க்ரைமில் முதலாவது என்றால், இவர் குடும்ப கதைகளில் ப்ரதமையாக இருந்தார். பெண்களை மட்டுமே மையபடுத்தி எழுதப்பட்ட குடும்ப நாவல்களில், இருப்பாலர்களின் நிறை குறைகளையும் சமன்படுத்தி ஆண்களையும் குடும்ப நாவல்களை படிக்க வைத்த பெருமைக்குரியவர். இவரது அசாதாரண கதை சொல்லலுக்கு இன்றளவும் உதாரணமாக இருப்பது, 'இரும்புக்குதிரைகள்', 'மெர்குரிப்பூக்கள்' மற்றும் 'பயணிகள் கவனிக்கவும்' நாவல்கள். பிடிக்குமென்றால் முயன்றுபார்க்கலாம். 2000த்திற்கு பிறகு இவர் எழுதிய கதைகள் அனைத்தும் ஒரு ஆசானை போல் அருகில் இருந்து கற்றுக்கொடுக்கும் வகையறாக்கள். தனக்கென்று ஒரு குருவைத்தேடி பின்பு தானும் குருவாக பரிமளித்தார். இவரை எங்கேனும் நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். காலன் வென்றுவிட்டான்.
ஆனால் எஸ்.ராவை ஒரு புத்தக கண்காட்சியில் கண்டு அரை மணி நேரம் அளவளாவி ஒரு புகைப்படம் எடுத்தது மட்டுமே ஆறுதல்.
தற்போது வாராவாரம் விகடனில் பிரசுரமாகி வரும், தமிழ் நெடுஞ்சாலை தொடரின் ஆசிரியர், இ.ஆ.ப. பாலகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்கள் மிகவும் கவருகின்றன. அனுபவத்தை பகிரும் ஆதாமார்த்தமான வார்த்தைகள் இவரது பலம். சிந்து முதல் வைகை நாகரீகத்திற்கு ஒரு பயணம் என்ற ஒரு புத்தகமே இவரது இலக்கிய அர்பணிப்பிற்கு ஒரு சான்று. புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். தன்னம்பிக்கையாளர். இரு விதங்களில் கவருகிறார். ஒன்று, இ.ஆ.ப. மீது நமக்கு ஆவல் வரும் பொருட்டு இவரது நடவடிக்கைகளினால் ஏற்படும் நேரடிப்பயன்கள். உதாரணமாக தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குனராக இவரது பணிகள் அளப்பரும் ஆற்றல் மிக்கவை. 34 வாக்காளர்களின் வாக்கை சேகரிக்கும் பொருட்டு தன்னந்தனியாக நக்சலைட் இருக்கும் காட்டுக்குள் சென்று தேர்தலை நடத்தி காண்பித்தது, மற்றும் புயல் போன்ற பேரழிவு மேலாண்மையில் முன்மாதிரியாக இருக்கும் ஒடிசாவில் இவரது செயற்பாடுகள் என அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. அதன் காரணமாகவே முதல்வர் பட்நாயக்கின் செல்லப்பிள்ளை. எல்லையில்லா அதிகாரம் கொண்ட இந்திய ஆட்சி பணி மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு முன்னேற்றலாம் என்ற இவரின் ஒவ்வொரு வருட பணியையும் ஒவ்வொரு புத்தகமாக பதிப்பிக்கும் அளவிற்கு முன்மாதிரி செயல்கள். வயதிருந்தால் ஐ ஏ எஸ் அகாடமியில் சேர்ந்திருக்கலாம். அப்படி ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை. இரண்டாவதாக இவர் கவருமிடம், தமிழ் மீது தனக்கிருக்கும் அதீத காதலால். தேர்ந்தெடுத்த வார்த்தை பிரயோகங்கள், வாசகனை அருகில் அமரச்செய்யும் சொல்லாடல் என மீண்டும் மீண்டும் படிக்க ஆர்வம் ஏற்படுத்துகிறார். தமிழ் மொழியிலேயே கல்லூரி வரை பயின்று, கிங்மேக்கர் காமராஜரால் கவர்ந்திழுக்கப்பட்டு தமிழில் தேர்வெழுதி தனது முதல் முயற்சிலேயே வென்றவர். விசாலமான பார்வைக்கும், அனைத்து துறைகளிலும் அறிவைப்பரப்பும் பரந்து விரிந்த கட்டுக்கரைகளுக்கும் இவருக்கு நன்றிகள். நம்மவரில் ஒருவராக வரவேற்கலாம்.
சமூகத்தின்பால் மற்றும் தமிழ் மீது அக்கறை கொண்டு திறமையானவர்களை உலகத்திற்கு அடையாளபடுத்தும் சமுதாய அக்கறையுள்ள சஞ்சிகைகளில் விகடன் என்றுமே நம்பர் ஒன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக