சினிமாவில் ஜெயிப்பதற்கு உழைப்பு அதிர்ஷ்டம் காலம் என இவையனைத்ததும் எந்த அளவுக்கு கைகூடிவர வேண்டுமோ அதை விட மிக முக்கியம் அவர்களது குடும்பத்தில் ஒருவர் சினிமாவில் இருப்பது. இந்த சமன்பாட்டை பொய்யாக்கி தனக்கென ஒரு பார்முலாவை சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்விலும் கடைப்பிடித்து தனி ரசிகசாம்ராஜ்யமே நடத்தி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவரைப்போலவே எந்தவித பின்புலமும் இல்லாது சின்னத்திரை காம்பியரிங்கில் இருந்து பெரியத்திரையில் கோலோச்சிக்கொண்டிருப்பவர் SK என்னும் சிவகார்த்திகேயன். முக்கியமாக குழந்தைகளை கவர்ந்தது இவரது மிகப்பெரிய ப்ளஸ். குறைந்தபட்சம் இரண்டு டிக்கட்டுக்கு க்யாரண்டி.
இந்த இருவரைதவிர்த்து சினிமாவில் வெற்றியை ருசிக்க தனியொரு ஆளாக போராடிக்கொண்டிருப்பவர், இந்த பத்தியின் நாயகர் சந்தானம். சினிமாவை அதிரிபுதிரியாய் கலாய்க்கும் லொள்ளுசபாவில் தனது பயணத்தை ஆரம்பித்து பின் அதே சினிமாவில் நாயகனாய் தன்னை நிலைநாட்ட துடிப்பது நகை முரண் தான் என்றாலும், லொள்ளுசபா சந்தனமாக, ஒரு காமெடியனாக மட்டுமே நமக்கு தெரிந்த சந்தானத்தை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராய் இருப்பது, திறமை இருந்தால் திரையில் மிளிரமுடியும் என்று மிடில் க்ளாஸ் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வரவேற்கத்தக்க வெற்றியே. கிட்டத்தட்ட பன்னிரண்டு படங்களில் கதாநாயகன், ஹீரோவாய் நடிக்க வேண்டும் என்பதற்காக காமெடியனாக நடித்து சம்பாதிப்பதை விடுத்து வெள்ளித்திரையில் ஏழு வருட போராட்டங்கள், நான்கு படங்களுக்கு தயாரிப்பாளர் என இதுவும் வாழ்த்துவதற்கான தருணம் தான்.
தற்போது வெளியாகிருக்கும் இவரது படம் டிக்கிலோனா. தனது காதல் திருமணத்தை சரி செய்ய கால யந்திரத்தை உபயோகப்படுத்தும் இளைஞன் இறுதியில், இக்கரைக்கு அக்கரை பச்சை என்று உணருவதே கதையின் கரு. சந்தானம் ஸ்லிம் ஆக ட்ரிம் ஆக இருக்கிறார். 41 வயது என்று சொல்லவே முடியாது. அதே டைமிங் ரைமிங் காமெடி என்றாலும் சில இடங்களில் உருவ கேலி காமெடி நம்மை அசௌகர்யப்படுத்துகிறது. இரண்டு ஹீரோயின்கள் மூன்று சந்தானம், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், நிழல்கள் ரவி என படம் கேரக்டேர்களால் நிறைந்து இருக்கிறது. வெடிச்சிரிப்பு சிரிக்கவைக்கும் காமெடியாக இறுதியில் ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்காதது. ஒர்கவுட்டும் ஆகியிருக்கிறது. கெஸ்ட் அப்பியரன்ஸ் போல யோகி பாபு கேரக்டர்.
"பேர் வச்சாலும் வைக்கமாப்போனாலும்" என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். கமலுடைய இடத்தை யாராலுமே நிரப்பமுடியாது என்பதால் பாடலில் நடிப்பு ரசிக்கவில்லை. இருந்தாலும் ராஜாவின் ஒரிஜினல் இசை, காதை பதம்பார்க்காத ரீமிக்ஸ் இசை, கொஞ்சமே கொஞ்சம் நடன அசைவு, கலர்புல்லான ஒளிப்பதிவு என என்கேஜிங்காக இருக்கிறது. கால இயந்திரத்தை பயன்படுத்தி முன்னே பின்னே என கதை பயணித்தாலும் குழப்பமில்லாமல் திரைக்கதை எழுதிய இயக்குனருக்கு சபாஷ்.
சந்தானமும் காமெடியும் உங்களுக்கு பிடிக்குமென்றால் இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக