ஒரு சிறு கனவு. கனவு தான் என்றாலும் அதிகாலையே அப்சட்.
அன்று அலுவலக விடுமுறை தினம். உணவு இடைவேளையில் பள்ளியில் இருக்கும் குழந்தையை பார்த்து விட்டு வரலாம் என்று இருசக்கர மிதிவண்டியை அழுத்தி கொண்டு செல்கிறேன். விளையாண்டு கொண்டிருக்கும் குழந்தையை பார்த்து கை அசைக்க, ஆனால் பதிலுக்கு ஏதும் சொல்லாமல், சிறு சலனம் கூட இன்றி குழந்தை உள்ளே சென்றுவிட்டது. மற்ற பெற்றோர்கள் சிரித்து பேசிக்கொண்டிருக்க, எங்கிருந்து தான் அழுகை முட்டி கொண்டு வந்ததோ தெரியவில்லை. கேவிக்கேவி அழுதுகொண்டே மீண்டும் சைக்கிளில் வீட்டிற்கு வருகிறேன். போகிற வழியெங்கும் எதிர்படும் அனைவரும் என்னை வெறித்து பார்க்க, பழைய படிக்காதவன் (ரஜினி) திரைப்பட தீம் ம்யூசிக் ஒலித்து மேலும் மனதை பிசைகிறது. எழுந்து பார்க்கும்பொழுது என்னை அறியாமல் விசும்பி கொண்டிருந்தேன். கனவின் ஒளித்தாக்கம் அந்த அளவிற்கு இருந்திருக்கிறது.
யோசித்து பார்க்கையில் சார்பு நிலை கடந்து சுயமாய் நிற்கும் அந்த ஒரு நாள் குழந்தைகளுக்கு நாம் முன்னுரிமை ஆக இருப்பதில்லை. priorities changes. உண்மை கசக்கும் தான் என்றாலும் மத்திம வயதில் நாம் நமது பெற்றோருக்கு எந்த அளவுக்கு நேரம் செலவிட்டிருக்கிறோம் அல்லது கொண்டிருக்கிறோம் என்று எண்ணி பார்த்தால் குற்ற உணர்வே மிஞ்சுகிறது. life is a cycle. அந்தந்த இடம் வரும்பொழுது அந்தந்த விஷயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் என்றுமே பெத்த மனம் பித்துதான். நாம் பிள்ளைகளாக இருக்கும்பொழுது கல்லாகவும் நமது பிள்ளைகளை நினைக்கும்பொழுது பித்தாகவும் மாறிக்கொண்டிருப்பதுதான் நகை முரண். நியதியும் அதுவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக