வியாழன், ஜனவரி 04, 2024

பார்க்கிங்

 


ஒரு வண்டி நிறுத்துறதுல பிரச்சினையாயா? அப்டின்னுதான் நமக்கு டவுட் வரும். டவுட்டே வேண்டாம். பார்க்கிங் பிரச்சினைல வெட்டு குத்தே நடந்துருக்கு. அதுலாம் எக்சின்ட்ரிக் கேரக்டர்ஸ் அப்படினு நினைப்பீங்க. இல்ல. ஊருக்குள்ள பல சைக்கோ இருக்குது. என்ன நமக்கு தெரியாது அவ்ளோதான். நமக்கு நம்மளையே முழுசாத் தெரியாது. இதுல போய் மத்தவங்கள எப்படி முழுசா தெரிஞ்சிக்கிறது, புரிஞ்சிக்கிறது.



எங்க ஆபிஸ்லேயே ஒருத்தர். நார்மலான ஆள். வம்பு தும்புக்கு போகாதவர். இதே பார்க்கிங் பிரச்சினை. ஒன்னும் பெரிசாகூட நடந்துடல. ஆனா ஆளு லபோதிபோன்னு குதிச்சார். என்ன மேட்டர்னா, நம்மாளு மாமனார் வீட்டுக்கு வந்துருக்கார். வண்டிய மரத்துக்கு கீழ நிழல்ல நிப்பாட்டிருக்கார். அது பக்கத்து வீட்டுக்காரர் வந்து நிறுத்துற இடம். இது அவருக்கு தெரியாது. பவுசா நிப்பாட்டிட்டாப்புல. கிளம்பும்போது வந்து பாத்தா, விண்ட்ஷீல்டுல ஒரு கடுதாசி. கால் மீ அப்டினு எழுதி ஒரு போன் நம்பர் இருந்துருக்கு. அவ்ளோதான். இவரு படாதா பாடு பட்டு போன் நம்பரை கண்டுபிடிச்சி அவன்ட பேசினாரா அப்டினு கேட்டா இல்லை. ஊரெல்லாம் 'என்ன இவன் பெரிய இவனா. கால் பண்ணுனு போட்ருக்கான்' அப்டினு திட்டிகிட்டு திரிஞ்சார். ஆளு யாருனு பாத்தாச்சு. அப்புறம் என்ன பேசவேண்டிதானே. ஒருவேளை கால் பண்ணாம லபோதிபோன்னு இவனுக்கு கேக்காத மாதிரி கத்தினது ஓகே தான் போல். இல்லனா ரெண்டு பேரும் பூட்டுன வீட்டுக்குள்ள கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு நோக்கியா போன மைக்ரோ வேவ் ஓவனுக்குள்ள போட்டு பத்திகிட்டு எரியுமா அப்டின்னு பாத்துட்டு இருந்துப்பாங்க போல. சரி படத்துக்கு வருவோம்.

கதை ரொம்ப சிம்பிள். வாடகைக்கு குடியிருக்கிற ரெண்டு பேரு, தங்களோட வண்டிய நிப்பாட்டுறதுல ஏற்படுற ஈகோ பிரச்சினை தான் பார்க்கிங் படம். இதுல என்னடா சொல்லிட முடியும்னு பாத்தா, அப்டியே மாலைல பூவ கோக்குறமாதிரி ஸீன் பை ஸீன் செதுக்கி நம்ம எல்லாரையும் சீட் நுனில உக்கார வச்சிருக்கார் அறிமுக இயக்குனர் ராம்குமார். எனக்கென்னவோ நம்ம பட்டாபியை மனசில வச்சுதான் கதையை ரெடி பண்ணிருப்பாரு போலன்னு தோணுது. அப்படி ஒரு பொருத்தம். ஆளு எந்த கேரக்டர் கொடுத்தாலும் பிச்சி ஒதறிடறாரு. உண்மைய சொல்லனும்னா இந்த படத்தோட அடி நாதமே நம்ம எம்.எஸ்.பாஸ்கர் தான். மனுஷன் என்னமா பண்ணிருக்காரு. பார்க்கிங்குல பக்கத்து வீட்டுக்கார கார விட்டுற கூடாது அப்டிங்கறதுக்காகவே ஒரு புது கார் வாங்கிட்டு அத ஓட்டிட்டு வரும் போது ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க. ரெட் சிப் சிட்டி ரோபோ மாதிரி அப்டி ஒரு வில்லத்தனம். அமெரிக்கால தேசிய திரைப்பட பாதுகாப்பு வாரியம் அப்டினு ஒரு வாரியம் இருக்கு. அவங்க முக்கியமான படங்களையெல்லாம் ஆவணமா பாதுகாப்பாங்க. அதுமாதிரி இவரை, இவரோட நடிப்பை கண்ண மூடிட்டு நேஷனல் ரெப்பாஸிட்டரில  preserve பண்ணிடலாம்.

ஆரம்பத்துல இவரோட நடிப்பு முன்னாடி ஹரிஷ் ஒன்னும் இல்லாம தெரிஞ்சாலும் போகப்போக சரியான லெவெல்ல அந்த கிராஃப் ஏத்தி கொண்டு போய்டுறார். 37 வருஷம் ஆகியும் நேர்மையா சம்பாதிச்சும் ஒரு கார் வாங்க முடில அப்படிங்கற பொறாமைல ஆரம்பிக்கிற வாக்குவாதம் அப்டியே கொஞ்சம் கொஞ்சமா பார்க்கிங்கோசரம் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டைபோட்டு கடைசில ஜென்மப்பகைங்குற அளவுக்கு மாறிடுறாங்க. சும்மா ஏனோ தானோன்னு சண்டை போட்டுகிற மாதிரி ஸீன் அமைக்கலை. ஒவ்வொரு சீனும் யதார்த்தமான படைப்பு. நாடகத்தன்மையே சுத்தமா இல்லாத ஒரு பக்கா ரைட்டிங். EO ஆபிஸ்ல லஞ்சம் ஒழிப்பு சோதனை சீன்லாம் அவ்ளோ பதைபதைப்பு. படபடப்பு.  ஒரே வீட்ட சுத்தி சுத்தி வந்தாலும் அலுப்பே தட்டாத காட்சிகள். கேமரா கோணங்கள்.

கிளைமாக்ஸ் வரை யதார்த்தமமா நகர்ந்து போற கதை தடுமாறி நின்னது இறுதி காட்சில அப்டின்னுதான் நினைக்கத்தோணுது. அடிதடி கூட ஓகே. பாட்டில் எடுத்து தலைல அறைஞ்சு, ஸ்பேனர் வச்சி முகமெல்லாம் தாக்கி, சிலிண்டரை ஓபன் பண்ணி வெடிக்க வைக்கிற அளவுக்கு போனது மட்டும் கொஞ்சம் மிகையாயிடுச்சு. சரி. ஒரு ஜோடி வாடகைக்கு இருக்காங்க ஓகே. அது எதுக்கு கர்ப்பமான ஜோடி. தலையணையை கட்டிட்டு முழுப்படமும் ஏன் நடிக்க தேர்வு செய்யணும், என்னமோ இடிக்குதே அப்டினு யோசிச்சேன். க்ளைமேக்ஸ் தாலி சென்டிமென்ட்டோ இல்லை அம்மா சென்டிமென்ட்டோ இல்லாம படம் சக்ஸஸ் ஆகாது போல. முழுமாசப் பொண்ணை கீழ விழ வச்சி, மூச்ச நிறுத்தி பிரதான எதிரி கேரக்டரை வச்சி காப்பத்திட்டா சுபம் மங்களம். ஹீரோ சண்டையெல்லாம் விட்டு கைகுலுக்கி  எண்டு கார்ட் போட்டுறலாம்னு ஒரு பிளான். பாக்கறதுக்கு நல்லாருந்தாலும் மண்பானைல சொருகி வச்சி பிளாஸ்டிக் டேப் மாதிரி எனக்கு அதுமட்டும் ஒட்டல. 

பட், மொத்தத்துல ஒரு சின்ன விதைலேந்து ஆலமரம் மாதிரி ஒரு பெரிய விருட்சத்தை ரசிக்கும்படி உருவாக்கின இயக்குனருக்கு வாழ்த்துக்கள். அதுவும் நம்ம ஆதர்ச குணச்சித்திர நடிகர் பாஸ்கருக்கான முழு நீள படங்குற விதத்துல புல் மீல்ஸ் பார்த்த திருப்தி.  

 

#parkingmoviereview #MSBaskar #harishkalyan #indhujaravichandran

கருத்துகள் இல்லை: