ஒரு காத்திரமான எழுத்து சமுதாயத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதுபோல் ஒரு திரைப்படமும் சின்ன சலனத்தையாவது ஏற்படுத்தி விட வேண்டும். அவ்வாறு சலனத்தை ஏற்படுத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களில் ஒன்று தான் ரைட்டர்.
புகார் கொடுக்க வந்தவர்களிடம் என்ன ஏது போன்ற விவரங்களை கேட்டு தன் வாழ்நாள் முழுவதும் பேனா, டைப்ரைட்டர் மற்றும் கம்ப்யுட்டருடன் வாழ்க்கையை கழித்து ஓய்வின் விளிம்பில் இருக்கும் ஒரு வயதான ரைட்டரின் கதை தான் இது. உயரதிகாரியின் ஷொட்டில் மயங்கி, கோர்வையாய் கதை எழுதும் தன் திறமையை வெளிக்காட்டுகிறார். அதுவே ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. குற்ற உணர்ச்சியில் உழலும் ரைட்டர், அந்த இளைஞனை காப்பாற்ற எதற்கும் துணிந்து ஒரு முடிவை எடுக்கிறார். ரைட்டரின் முயற்சி பலித்ததா? மேலும் காவல்துறைக்கென்று தனி சங்கம் வேண்டும் என்று கோரிக்கையையும் இந்த கதைக்குள் அதை உறுத்தலில்லாமல் நெய்த தொனியையும் பாராட்டியே ஆக வேண்டும்.
ஒரு வசனம் வரும். 'இங்குள்ளவன் எதுத்து பேசக்கூடாதுங்கிறதுக்காக பிரிட்டிஸ்காரன் கொண்டு வந்தது தான் இந்த காவல் துறை. சுதந்திரத்துக்கு அப்புறமும் அதை கொஞ்சமும் இம்மி பிசகமா அப்டியே வச்சிருக்காங்க. அதிகாரம் இல்லாத எந்த ஒரு வேலையும் அடிமை வேலை தான்'. காவல் துறையை ரத்தினச் சுருக்கமாக
இதை விட விவரிக்க முடியாது. உயரதிகாரி முதல் அடி மட்ட ஊழியர் வரை தனி மனித மரியாதை என்பது கிஞ்சித்தும் இல்லாத ஒரு துறை. எத்தனை குமுறல்கள். மனப்போராட்டங்கள். அழுத்தம். மிகை வேலை நேரம். சமூக செயல்பாடே இல்லாது 24x7 வேலை என்பது ஒரு மனிதனை எந்த அளவுக்கு மன அழுத்தத்திற்கு உண்டாக்கும் என்பதை நாம் உணராமல் இல்லை. விடுப்பு என்பது மிகப்பெரிய சொல் அங்கே. ஏன் பாவச்சொல் என்று கூட கொள்ளலாம்.
அந்த ரைட்டரின் கதாப்பாத்திரத்துக்கு அளவெடுத்து தைத்தது போல் சமுத்திரக்கனி. ஒரு சில இடங்களில் மிகை நடிப்பைத் தவிர்த்திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்கும். மிடுக் தோற்றத்தில் அதிகாரமிக்க இன்ஸ்பெக்டராக கவிதா பாரதி. அசல் போலீஸ் ஸ்டேஷனையே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். ஆதிக்க மிச்சமாக DCP கவின் ஜெய் பாபு. ஸ்வீட் காரம் காஃபி புகழ் மதுபாலா கணவர். அதிகாரத்த் தோரணையை தான் பிடிக்கும் புகை போல எளிதாக வெளிப்படுத்துகிறார். இனியா, காலா திலீபன், போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர் என தேர்வான கதாபாத்திரங்களின் பிரதிபலிப்புகள். எதற்கு பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியாத அப்பாவி இளைஞனாய் ரஞ்சித்தின் பட்டறையிலிருந்து ஹரி. அடித்தட்டு அப்பாவி இளைஞனின் அச்சு அசல் பிரதிபிம்பம்.
எந்த காரணத்திற்காக அப்பாவி இளைஞனை பிடித்து வைத்துள்ளார்கள் என்கிற சஸ்பென்ஸ் படத்தின் இறுதி வரை கடத்தப்பட்டிருப்பது ப்ளஸ். உறுத்தலில்லாத காரணம். மெல்லமுடியாமல் தன் முதல் மனைவியிடம் வெடித்து அழும் இடமாகட்டும், முப்பத்தைந்து வருட இறுக்கத்தை அழுத்தத்தை இறுதியில் DCPயிடம் வெளிப்படுத்தும் இடமாகட்டும் சமுத்திரக்கனி தன் முத்திரையைப் பதிக்கிறார். DCPயின் வண்டிக்கெதிரே குதிரையை இனியா ஒட்டி அதன் இரு முன்னங்கால்களை தூக்கி நிறுத்தும் இடம், அந்த அடக்குமுறை வலியின் வெளிப்பாடு. சபாஷ் பிராங்க்ளின் ஜேக்கப். அதுமட்டுமின்றி குற்ற உணர்ச்சி தாளாது அப்பாவி இளைஞனுடைய அண்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதில் மனம் நிறைவுறுகிறது. தனக்குப் பின் அந்த யூனியன் கனவை நிறைவேற்றத்துடிக்கும் இளைஞனாக காலா திலீபனிடம் பொறுப்பை கொடுக்கும் வரைக்கும் ஒரு நல்ல தலைவனாக ரைட்டரின் கதாப்பாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது.
காவலரின் வலியை பதிவு செய்த விதத்தில் ரைட்டர் துடைத்தெறிந்து விட முடியாத ஒரு சரித்திரம்.
கவால்துறை குறித்து 2022இல் நான் பதிவு செய்திருந்த கட்டுரை முதல் கமெண்ட்டில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக