நெட்பிலிக்ஸ்ல்
வெளியாகியுள்ள நான்கு எபிசோட் தொடர். இதே டிசம்பர் மாதம் 1984இல் போபாலில் நடைபெற்ற மிகப்பெரும் விபத்து பற்றிய சீரிஸ். இன்னும்
தெளிவாகச் சொன்னால் அன்று நடந்த அந்த பேரிடரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை
எவ்வாறு ரெயில்வே ஊழியர்கள் காப்பாற்றினர் என்பது தான் இந்த ரயில்வே மென்.
பூச்சிக்கொல்லி
மருந்து தயாரிக்க நிறுவப்பட்டிருக்கும் யூனியன் கார்பைட் பேக்டரியில் அந்த விபத்து
நடக்கிறது. சீரிஸ் நேரே குதிக்கும் இடம் அந்த விபத்து நடந்த பனிரெண்டு மணி
நேரத்துக்கு முன்பு. என்ன காரணம் என்பதை விலாவரியாக சொல்லவில்லை. தொடரின்
ஆத்மாவும் அதுவன்று. விஷ வாயு காற்றில் கரைய ஆரம்பித்த மாரு நொடியிலிருந்து இறப்பு
ஆரம்பிக்கிறது. தொழிற்சாலை முதற்கொண்டு அந்த ஊரில் காற்று பரவும் வேகத்திற்கு ஏற்ப
ஒவ்வொருவராய் சுருண்டு விழுந்து மடிகிறார்கள். குற்றுயிரும் குலை உயிருமாய் தப்பி
பிழைத்தவர்கள் சில பேர் ஸ்டேஷனில் தஞ்சம் அடைய, அங்கிருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுயிரையும் மதியாமல் அவர்களை
காப்பாற்றுகிறார். அதுமட்டுமன்றி அருகில் இருக்கும் இடார்சி ஸ்டேஷனிலிருந்து
மற்றொரு பொது மேலாளர் மருத்துவர், ஆக்சிஜன் சிலிண்டர் சகிதமாக
துரிதமாக அந்த நச்சு வெளியியேறிய நகரத்தை
நோக்கி முன்னேறுகிறார். நச்சு வாயு வெளியேறிய இரண்டு மணி நேரத்தில் ஊரே சுடுகாடாக
மாற, மக்கள் சில பேர் ஸ்டேஷன் வெயிட்டிங்
ஹாலில் தஞ்சம் புக, மற்றொரு முனையிலிருந்து கோரக்பூர்
செல்லும் விரைவு வண்டி போபாலை வந்தடைகிறது. மக்களை இறங்க விடாமல் தடுத்து, ஜன்னல்களை மூடச்சொல்லி, தஞ்சமடைந்த
மக்களை அந்த கோரக்பூர் விரைவு ரயிலில் ஏற்றி பல உயிர்களை காப்பாற்றிய அந்த மூன்று
மணி நேரம் தான் தொடரின் கதை.
மாதவனின்
முகம் போஸ்டர் எங்கிலும் பரவி நின்றாலும், மனதை
தொட்டது என்னவோ கே கே மேனன் தான். உதயம் NH4 என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக வந்து சித்தரத்தை
மிரட்டடியிருப்பாரே, அவரே தான் இந்த கே கே மேனன். ஸ்டேஷன்
மாஸ்டர். ஏற்பாடு பட்டாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு மத்திய வயது
ரயில்வே அதிகாரியாக அவர் காட்டும் துடிப்பு பச்செக்கென மனதில் ஒட்டிக்கொள்கிறது.
ரயில்வே GM ஆக மாதவன். நடிப்பிற்கான வாய்ப்பு
மிகக் கம்மி. மிடுக்கு குறையாமல் வந்து போகிறார். நச்சு வாயு வெளியேறும்பொழுது
டெல்லியில் நடைபெறும் அரசியல் காட்சிகள், அந்த
பேக்டரிக்கான தலைமை நிர்வாக அதிகாரி அன்டேர்சனை பத்திரமாக பேக் செய்து
வெளிநாட்டிற்கு தப்ப வைத்தது, விஷ முறிவு மருந்தான சோடியம்
தையோசல்பேட் வயலை மூடி மறைத்தது போன்ற காட்சிகள் தெளிவில்லை. என்ன நடந்தது என்பதை
ஆய்வு செய்தாலே HBO ரீலிஸ் செய்தa செர்நோபில் தொடர் போன்று பல உண்மைகளை வெளிக்கொணரும் பேரிடர் இது.
அதுவும் இறுதி காட்சியில், பேரிடர் நடந்த மறு நாள் அனைவரையும்
புதைக்கும் வேளையில், இறந்துவிட்டார் என்ற நினைத்த ஸ்டேஷன்
மாஸ்டர் உயிர்த்து எழும் போது, ஒரு ஊழியர் சொல்லுவார். 'சரியாகப் பாரு. இதோடு நான்காவது முறையாக தவறாகிவிட்டது' என்று. இந்த ஒரு காட்சி போதும் அன்று நடந்த பேரழிவை விளக்க.
தொடர்
சற்று நீளம் தான் என்றாலும், மக்கள் பட்ட துயரை, குழப்பங்களை, இழப்பை, வலியை சொல்லுவதற்கு நாலு எபிசோட் என்பது குறைவுதான். ஏனெனில் இன்றளவும் தலைமுறை தலைமுறையாக அவர்கள்
அந்த நச்சு காற்றின் கோரப்பிடியில் இருந்து மீளவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக