பையோக்ராபி படங்கள் எப்பொழுதுமே ஒரு முழு நிறைவை கொடுப்பவை. அந்த வகையில் முத்தையா முரளிதரனின் 800 ஏமாற்றவில்லை. சொல்லப்போனால் ஒரு நல்ல பீல் குட் மூவி.
டெஸ்ட் கிரிக்கட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முரளியை மட்டுமே நாம் அறிந்திருந்தோம். ஆனால் கிரிக்கெட்டிற்குள் நுழைய அவர் எதிர்கொண்ட சவால்கள், இலங்கை மக்களின் ஆதிக்கத்திற்கு நடுவே மலையகத்தமிழனாய் ஸ்ரீலங்கா கிரிக்கட் டீமிற்குள் நுழைந்தது, முதல் டெஸ்ட் கிரிக்கட் விளையாட இங்கிலாந்திற்கு சென்றது, ஆஸ்திரேலியாவில் போட்டிக்கு நடுவே இவரை விளையாட அனுமதிக்காமல் அவமானப்படுத்தியது, அப்பொழுதிலிருந்து இவர் ஒய்வு பெரும் வரை இவரது பந்து வீச்சு முறைக்கு எதிர்கொண்ட சவால்கள், விமர்சனங்கள், பரீட்சைகள், 1000 விக்கெட்டுக்கு முன்பே தனது ஓய்வை அறிவித்தது என்று இவரது வரலாறு விரிகிறது.
முரளியாக மிட்டல் நல்ல தேர்வு. குதித்து ஓடி வந்து பந்து வீசும்போது முரளியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கபில்தேவ், அர்ஜுனா ரணதுங்கா, சனத் ஜெயசூர்யா என விளையாட்டு வீரர்களையொத்த நடிகர்களின் தேர்வு நன்று. 1982 முதல் 2010 வரைக்கான போட்டிகளை மீளுருவாக்கம் செய்திருக்கின்றனர். திரளான மைதானத்தை காட்டுவதற்கு முயற்சித்திருக்கும் க்ராபிக்ஸ் சற்று ஏமாற்றமே.
தேயிலை பறிக்க மலையகத்தமிழர்களாய் இங்கிருந்து இலங்கை செல்வதை காட்சிப்படுத்தி முரளியை பூர்வ தமிழனாய் பதிவு செய்வதிலிருந்து இறுதியில் 800 விக்கெட் வீழ்த்துவது வரை அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை திரைப்படமாய் தந்திருக்கிறார் இயக்குனர். படம் நெடுகிலும் அவரது பந்து வீச்சை விமர்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். இரண்டரை மணி நேரத்தில் இத்தனை விமர்சனங்களா என்று நமக்கே அயர்ச்சி தொற்றிக்கொள்ள முரளியோ தன் வாழ்நாள் முழுவதும் இந்த விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறார் என்பதே பெருத்த ஆச்சர்யமாய் இருக்கிறது. ஸ்டீல் ப்ரேஸ் செய்து பந்து வீசச்செய்து பரீட்சத்தது எல்லாம் இனவெறியின் உச்சம், பொறாமையின் மறுமுகம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. உலகின் நம்பர் ஒன் விக்கெட் டேக்கர் என்ற மகிழ்ச்சியைத் தாண்டி இந்த போராட்டமே அவரது வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிறது என்பதை உரக்க பதிவு செய்கிறது இந்த 800. அதனால் தானோ என்னவோ 1000 விக்கெட் என்ற மயில்கல்லைத் தொட அவர் முயற்சிக்கவில்லை. நம்ப வேண்டாம் என்று முடிவு செய்தவர்களிடம் அவர் இனிமேலும் போராடத் தயாராக இல்லை.
எதைத்தொட எதனை விட என்ற ரீதியில் அவரது வாழ்க்கையை முழுமையாய் காமிக்க முயற்சி செய்திருக்கிறது 800.
கிரிக்கட் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்.
#MuthaiahMuralidharan #800Movie
#800moviereview #MSSripathy

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக