திங்கள், நவம்பர் 13, 2023

ஷாபி


கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள ஷாபி அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள நேர்ந்தது. ஷாபி ஒரு சித்தாள். ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? அவர் பகலில் சித்தாளாகவும் இரவில் ஒரு மொழிபெயர்பாளராகவும் இருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? இன்னும் ஆச்சர்யப்படுங்கள். 

அவரது தாய் மொழி மலையாளம். தட்டுத்தடுமாறி பத்தாவது வரை பள்ளிக்குச் சென்றவர் வறுமையின் காரணமாக மேலும் படிக்க முடியவில்லை. ஆனால் அவரின் தந்தையிடமிருந்து வாசிப்பு பழக்கம் அவரிடம் தொத்திக்கொண்டுள்ளது. எங்கு சென்றாலும் வாசிக்கிறார். எந்த நேரத்திலும் எல்லா கணங்களிலும் பேய் போல வாசிக்கிறார். இருபது வயதில் புனே பேக்கரியில் வேலைக்குச்சென்றவர் பிறகு ஒரு வருட காலத்தில் பெங்களூருவின் டீக்கடைக்கு வருகிறார். தனது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை புத்தகம் வாங்கி வாசிப்பதற்கு செலவிடுகிறார். சு.ராவின் 'ஒரு புளியமரத்து கதையை' மலையாளத்தில் வாசிக்கிறார். அந்த இலக்கியத்தில் மயங்கி தமிழ் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளை தேடித்தேடி வாசிக்கத்தொடங்குகிறார்.

அவரின் பார்வையில் தமிழ் இலக்கியம் பல புதிய பரிமாணங்களை அளக்கிறது எனவும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதாகவும் உணர்கிறார். மொழி பெயர்ப்பு மட்டுமல்லாமல் அதனின் உண்மையான ரசனையை உணர தமிழ் கற்றுக்கொண்டால் என்ன என்று முடிவு செய்து கடைக்கு வருவோர் போவோரின் தமிழை உற்றுக் கவனிக்கிறார். சில வார மாத இதழ்களை வாங்கி எழுத்து கூட்டி வாசிக்கிறார். நேரடி தமிழ் புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெறுகிறார். பின்பு தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மொழிக்கிணங்க தான் படித்தவற்றை மலையாளத்தில் மொழி பெயர்க்கிறார். சோ.தர்மனின் 'கூகை' போன்ற முக்கியமான பல நாவல்களை மொழி பெயர்த்திருக்கிறார். என்ன தலை சுற்றுகிறதா? இதற்கே இப்படி என்றால்? தற்போது இவர் வெங்கடேசனின் காவல் கோட்டம் புத்தகத்தை மொழி பெயர்த்து கொண்டிருக்கிறார். 500 பக்கங்கள் முடிந்துவிட்டதாகவும் பாக்கி 600 பக்கங்கள் இருப்பததாகவும் கூறுகிறார். 

படித்து முடித்தவுடன் பிரமிப்பாக இருந்தது. ஏன்? சற்று கூச்சமும் கூட. எவ்வளவு சவுகரியங்கள் இருந்தும் நம்மால் சேர்ந்தாற்போல் இரு பக்கங்கள் வாசிக்க முடிவதில்லை. பாழாய்ப்போன வாட்ஸப்போ அந்துபோன ரீல்சோ நம்மை இழுத்துச் சென்று விடுகிறது. இப்படியான மனிதர்கள் தெரிந்து கொள்வது நம்மை நாமே பகுப்பாய்ந்து தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்று தான் கூறுவேன்.  

எளிய சாதனை மனிதர்களைத் தேடித்தேடி அடையாளம் கண்டு வெகு ஜன மக்களிடம் சேர்க்கும் வெ. நீலகண்டன் அவர்களுக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை: