கொஞ்சம் படிங்க
நாலஞ்சு
வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்த ஒரு காட்சி ரொம்ப பரவசமூட்டுச்சு. சொல்லப்போனா மனசுக்கு இதமாவும் சந்தோஷமாவும்
இருந்துச்சு.
கூகிள்
மேப் உதவியோடு ஒரு நெடுஞ்சாலையை தவிர்த்துட்டு நேரம் மிச்சம் பண்றதுக்கோசரம்
கிராமத்து வழிய தேர்ந்தெடுத்து வந்துட்ருந்தோம். டீசல் எம்ப்டியாகப்போகுது.
பக்கத்துல எதுனா பங்க் இருக்கானு பாக்கும்போது இனொரு கிளை ரோடு வழியா போனா ஒரு
பங்க் இருக்குதுனு தெரிஞ்சது. ஆயிரங்கால் மணடபம் மாதிரி பரப்பிக்கிட்டு ஷெட் போடாம
சின்னதா குடை பிடிச்சிட்ருக்க மாதிரியான ஒரு பங்க். பங்க சுத்தி கோரைப்புற்கள்
முளைச்சு இருக்கு. ஆளு யாரையும் காணோம்.
என்னடா
இது நமக்குன்னு வந்த சோதனைனு உள்ள போய் பாத்தா அந்த பெட்ரோல் பம்புக்கும் டீசல்
பம்புக்கும் இடைல ஒரு பைய்யன் உக்காந்துட்டு ஒரு புக்க படிச்சிடிருந்தான். எக்ஸாம்
ஏதும் படிக்கிறான் போலன்னு நினைச்சுகிட்டு பக்கத்துல போய் பாத்தா சுஜாதாவோட 'தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' புக்.
ஒரு செகண்ட் அப்டியே புல்லரிச்சிடுச்சு. என்னடா நீ இப்டி ஷாக் கொடுக்குற? இந்த அத்துவான கிராமத்துல இப்டி ஒரு வாசகனான்னு கேக்கும்போது அவன்
ரொம்ப சாதாரணமா நடந்துக்கிட்டான். பெட்ரோல் போட்டுட்டு திரும்பவும் உக்காந்து
படிக்க போயிட்டான். வாத்தியார்ல. இழுத்திருக்கும். ரொம்ப பீல் குட்டா இருந்துச்சு.
என்கிட்ட இருந்த ஒரு புக்க அவன்ட கொடுத்துட்டு வாயார பாராட்டிட்டு கிளம்பிட்டேன்.
அவன் ரொம்ப அலட்டிக்கல. வுட்டா அடுத்தது பிதூர் தத்சவஸ்கி புக்க எடுத்து
வாசிப்பான் போல.
ஏன்
இத சொல்றேன்னா இந்த மாதிரி ஒரு காட்சிய பாத்து பல வருஷம் ஆகுது. ஏன், சொல்லப்போனா இதுவரைக்கும் ஒரே ஒரு முறைதான் பாத்துருக்கேன்.
முன்னெல்லாம் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, சிவசங்கரி, பாலகுமாரன் இவங்க புக்ஸ்லாம் பாக்கெட் நாவலா கிடைக்கும். பத்து ரூபா
இருக்கும். பக்கம் அதிகமா இருந்துச்சுன்னா பதினஞ்சு ரூபா. அவ்ளோதான். பஸ்ஸ்டாண்ட்ல
சிப்ஸ் பாக்கெட் நடுவுல வச்சிருப்பாங்க. வாங்கிட்டு பஸ்ல ஏறினோம்னா ஒரு மணி நேரம்
ட்ராவலுக்கு பக்காவா இருக்கும். பஸ் ஒரு பக்கம் போக நாம வேற எங்கேயோ ட்ராவல்
பன்னிட்டு வந்திருப்போம். அதுமட்டும் இல்லாம வெளியூர் பயணம் செய்றவங்கள்லாம் பைல
துணியோட சேர்த்து ஒரு புக்கையும் பேக் பண்ணி எடுத்துட்டு போவாங்க. அது ஒரு வார
பத்திரிக்கையா கூட இருக்கலாம். ஆனா ஒரு புக் கண்டிப்பா இருக்கும். இடைல
படிக்கிறதுக்காக. இப்போ அது மாதிரி எங்கேயுமே பாக்க முடியல. இருபது நிமிஷ பஸ்
ட்ராவல், அரை மணி நேர ரெயில்வெ ரிசர்வேஷன் கியூ,
டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வெய்ட்டிங்ல,
ட்ராவல்ல இப்டி பல இடங்கள்ல புத்தகத்த கைல
வச்சிட்டு இருந்த பழக்கம் வழக்கொழிஞ்சி போய்டுச்சு.
அப்ப
மக்கள் என்ன தான் பண்ணிட்டிருக்காங்க அப்படினா போன தான் நோண்டிட்ருக்காங்க. எங்க
போனாலும் போன தான் பாக்க முடியுது. சமைஞ்ச புள்ள மாதிரி தலைய தொங்க போட்டுட்டு
உக்காந்துக்க வேண்டிது. அங்க கிண்டில்ல படிக்கிறோம் அப்டின்லாம் தூக்கிட்டு
வரக்கூடாது. பப்ளிக்ல அதுமாதிரி நான் யாரையும் பாக்கல. பன்னிரண்டு வருஷத்துக்கு
ஒரு தடவ பூக்குற குறிஞ்சி மலர் மாதிரி பத்தாயிரம் பேர்ல ஒருத்தன் படிக்கிறான்
அப்டினு ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சொல்லக்கூடாது. மக்கள் முழுக்க முழுக்க இன்ஸ்டா ரீல்ஸ்,
யூடியூப் ஷார்ட்ஸ் அப்டினுதான்
தடவிட்ருக்காங்க. பெரியவங்க அப்டியே சன் நெக்ஸ்ட் அல்லது டிஸ்னில சீரியல் பக்கம்
ஒதுங்கிருக்காங்க. சின்ன பிள்ளைகளும் விட்டுவைக்கல. அதுங்க யூட்யூப் சேனல் பாக்க
போயிடுச்சுங்க. இதெல்லாம் பண்ணக்கூடாதா அப்டினா அப்படிலாம் சொல்ல வரல. பண்ணலாம்
தான். தினமும் ரெண்டு பக்கம் வாசிச்சா என்ன குடி முழுகி போகப்போகுது? அப்டியே அந்த பழக்கம் போய்டுச்சே. திருப்பி எடுத்துட்டு வரது ரொம்ப
கஷ்டம். சொல்ற மாதிரி பிலிஸ்டைன் சொசைட்டி தான் மிஞ்சும்.
இப்போ
மாவட்டம் தோறும் நடக்குற இந்த புத்தக கண்காட்சி ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவரும்னு
நம்பிக்கை இருக்கு. ஆனா அதுலயும் பாருங்க ரெண்டு கோடி நாலு கோடிக்குலாம் புக்
விற்பனையாயிருக்குனு சொல்றாங்க. ஆனாலும் மக்கள் கைல மொபைல் தான் இருக்கு. ஏன்
அவ்ளோ. டாய்லட்டுக்கு கூட போன தான தூக்கிட்டு போறாங்க. நீங்களே யோசிச்சி பாருங்க.
பாலைவனத்துல கூட ஒயாஸிஸ் (oasis) பாத்துடலாம். மக்கள் கைல ஒரு புக்க
பாக்குறது அவ்ளோ சிரமமா இருக்கு. ஒரு வேளை வீட்டுல கதவ சாத்திட்டு போர்வைய
போத்திட்டு அதுக்குள்ளே போய் உக்காந்து படிக்கிறாங்களோ என்னவோ. கதவை சாத்திட்டு
பண்ற பல விஷயங்கள் இப்போ பொதுவுல ரொம்ப சர்வ சாதாரணமா நடக்க ஆரம்பிச்சிடுச்சு. ஆனா
புக் படிக்கிறதுல என்ன பிரச்சினை. அதுவும் பொதுவுல புக் படிக்கிறது அவ்வளவு
கேவலமாயிடுச்சான்னு தெரில.
MTC பஸ்ல ஏறி ஒரு இடம் கிடைச்சா போன நோண்டாம ஒரு புக்க எடுத்து
படிக்கிலாம். சபர்பன், மெட்ரோ மாதிரியான இடங்கள்ல பக்கத்துல
இருக்கவன் மூஞ்சிய கொலைகாரன் மாதிரி முறைச்சு முறைச்சு பாக்காம ஒரு புக்க கைல
வச்சிக்கலாம்.
ஆக,
சொல்ல வரது என்னன்னா கூச்சப்படாம கொஞ்சம்
வாசிங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக