ஞாயிறு, ஜனவரி 01, 2023

நீரதிகாரம்


 

முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட கதையை வரலாற்று ஆதாரங்களுடன் வடித்து வைத்தால் அதுதான் நீரதிகாரம்.

 

சரித்திரத்தை ஒட்டி எழுதப்பட்ட கதைகளில் புனைவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். காரணம் அதற்கான தகவல்கள் நம்மிடம் கிடையாது. உதாரணத்திற்கு பொன்னியின் செல்வன் நாவலின் வரிவடிவம் வரலாற்று நிகழ்வுகள். ஆனால் அந்த வரி வடிவத்தின் ஊடே பயணிக்கும் கதைமாந்தர்களின் உணர்வுகள் உரையாடல்கள் அனைத்தும் புனைவு. அந்த புனைவின் சுவாரஸ்யமே அதனின் ஸ்திரமான வெற்றிக்கு அடித்தளமாக இருக்கிறது. 25% காஃபி. 75% சிக்கரி.



 


'நீரதிகாரம்' அதுபோன்ற ஒரு புனைவு தான் என்றாலும் இது நேரெதிர். ஏனெனில் இதில் 75% காஃபி. 25% சிக்கரி. ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கதை என்றால் மிக சுதந்திரமாக கதையினுள் விளையாடலாம். ஆனால் இது நூறு வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு. தரவுகள் எங்கெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அடி பிசகினாலும் எந்த திசையிலிருந்து பிராது கொடுப்பார்கள் என்றே கணிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு கருவை எடுத்து எந்த ஒரு சமரசமும் இல்லாமல் நாவலாக வடித்துக்கொண்டிருக்கிறார் அ.வெண்ணிலா.  தற்போது விகடனில் 71வது வாரம். அதாவது ஒரு வருடம் தாண்டி இந்த கதை சென்று கொண்டிருக்கிறது. தொடர் தொடங்கி 65வது வாரத்தில் தான் அணை கட்டும் பணி ஆரம்பமாகியுள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்கு மேலாக கூட தொடர் செல்லுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 

வெங்கடேசனின் காவல் கோட்டம் போன்றதொரு பிரம்மாண்ட தொடராக விகடன் இதை பிரஸ்தாபிக்கலாம். துல்லிய தகவலின் மீது பிணைந்தோடும் இந்த வரலாற்று புனைவுக்கு விருதுகள் பல காத்திருக்கின்றன.

 

தொடரில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள்

 

1. ஒரு அணை கட்ட வேண்டுமானால் அதற்கான தேவை ஏற்பட வேண்டும். அந்த தேவையின் பெயர் பஞ்சம். அங்கு ஆரம்பிக்கிறது இந்த நாவல். Famine- பஞ்சம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த பஞ்சம் எவ்வளவு கொடுமையானது என்று விவரித்திருக்கும் பாங்கு, அதை படித்தபின் நம்மை ஒரு பருக்கை கூட கீழே சிந்தவிடாது. அதுவே அந்த விவரிப்பின் வெற்றி. எழுத்தாளரின் லட்சியம். அது இங்கு நிறைவேறியிருக்கிறது. மதுரையில் சோமாலியாவைப்போல ஒரு பஞ்சமா? அந்த பஞ்சத்தின் காரணமாக மக்கள் திருடர்களாக மாறியது, வழிப்பறி செய்தது, கஞ்சித்தொட்டிக்காக கையேந்தி நின்றது என பல நிகழ்வுகள் டாகுமெண்டரி போல் அல்லாது ஓரொரு கதை மாந்தர்கள் மூலமாக நமக்கு கடத்தப்படுகின்றன.

 

2. திருவிதாங்கூர் சமஸ்தானம், திவான் அய்யங்கார் என அணை கட்டுவதற்காக அறியப்பட்ட நிலங்களை கையகப்படுத்த மெட்ராஸ் ப்ரெசிடென்சிக்கும் விசாகம் மற்றும் மூலம் திருநாள் (மஹாராஜா) ஆகியோருக்கும் இடையில் உண்டான சம்பாஷணைகள், அரசியல் விளையாட்டுகள் என நாவல் அசரடிக்கிறது.

 

3. மலைமேல் வாழும் மக்கள் அவர்கள் வாழ்வியல்கள் மற்றும் கண்ணகி கோயில் என மற்றொரு பக்கம் சிறகை சீராக விரிக்கிறது.

 

4. சர் பென்னி குயிக்கின் அளப்பரிய காதல். அணை கட்டுவதின் மீதான காதல் பிரமிக்கவைக்கிறது. பல முறை நிராகரிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக தூங்கிய இந்த பேரியாற்று ஆணை திட்டத்தை எப்படியும் செயல் படுத்தி விட வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதி அவர் மீது நமக்கு மாளா அன்பை விதைக்கிறது. பென்னி குயிக்கின் ஆரம்பம் மட்டுமின்றி அவரது தந்தை காலம் முதல் இந்த நாவல் விவரிக்கிறது. அடிஸ்கும்பே முதல் அவர் ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியது வரை அங்குலம் அங்குலமாக உரையாடல் நடக்கிறது. பிரிட்டிஷாரின் வாழ்க்கை முறை, பென்னி குயிக்கின் மனைவி, அவரது குழந்தைகள் அவர் ஓய்வெடுக்கும் பங்களா என அதகளப்படுத்திருக்கிறார் கதாசிரியர்.

 

5. கிடைக்கும் சந்தடி சாக்கிலெல்லாம் மதமாற்றம் செய்யத்துடிக்கும் பாதிரியார்களை, மதம் மாறும் மக்களின் பிரதான காரணமாகிய வர்ணாசிரம பேதம், பஞ்சம் என அவற்றையும் நுட்பமாக விரவியிருப்பது நாவலின் பன்முகத்தன்மையை மெருகூட்டுகிறது.

 

6. Geological investigation of site என்றொரு பதம் உண்டு. அதாவது கட்டப்போகும் அணையைத்தாங்க வலுவான இடம்தானா என கண்டறியும் ஒரு பரிசோதனை. தேர்ந்தெடுத்த கட்டுமானப்பொறியாளர் போல அதை இவ்வளவு நுண்ணறிவுடன் விலாவரியாக எழுதியிருப்பது எழுத்தாளரின் சிறுத்தைக்கு ஒரு சோற்று பதம். இந்த நாவலின் ஒரே ஒரு பக்கத்திற்காக வரலாற்றின் பல பக்கங்களை புரட்டி குறிப்பு எடுத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

 

எவ்வாறு பேரியாற்று நீரை தேக்கி வைத்து வைகை ஆற்றின் படுகையை குளிர்வித்து பென்னிகுயிக் தன் லட்சியத்தை நிறைவேற்றினாரோ அது போல அ.வெண்ணிலா அவர்களின் சரித்திர சாட்சியான 'நீரதிகாரம்' மாபெரும் வெற்றி பெறட்டும்.

 

 

 

கருத்துகள் இல்லை: