பொறுப்பு துறப்பு
1. கொஞ்சம் நீண்ட பதிவு தான். ஆனால் முக்கியமான பதிவு.
2. புத்தகத்தில் குறிப்பிடப்பட்டவை மட்டுமே இங்கு சொல்லப்பட்டுள்ளன. சொந்த கருத்துக்கள் இல்லை.
3. தீவிர ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் உணர்ச்சிவசப்பட வாய்ப்புண்டு. புத்தகத்தை படித்து தெளிவுபடுத்தி கொள்ளலாம்.
இனி பதிவிற்குள்,
இதுவரை நீங்கள் நம்பிய ஒன்றை, அது உண்மையில்லை; மாயை என்று சொன்னால் எவ்வாறிருக்கும்? இதுதான் மஞ்சள் நிறம் என்று புரிந்துகொண்டதை சட்டென்று இது சிவப்பு நிறம், மஞ்சள் என்ற ஒன்றே கிடையாது என்று சொன்னால் எப்படி இருக்கும். சந்தோஷமாகவோ அல்லது துக்கமாகவோ ஏதோ ஒரு உணர்வில் உழன்று கொண்டிருக்கிறீர்கள். அதை கலைப்பது போல், இதுவரை கண்டதெல்லாம் கனவு என்று சொன்னால் எப்படி இருக்கும். அதுபோல ஒரு உணர்வைத்தருகிறது இந்த புத்தகத்தை வாசிக்கும்பொழுது. ‘அடப்பாவிகளா, இவ்வளவு நாட்களாக ஏமாற்றி விட்டீர்களே’, என்பது போல ஒரு உணர்வு வருகிறது.
பின்புலம்
சுற்றம் எப்பொழுதுமே நேர்மறை எண்ணங்களை கொண்டவர்களால் நிரப்பி வைத்துக்கொள்ளுதல் நல்லது. எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் நொந்துகொள்வது மட்டுமல்லாமல் நம்மையும் நொந்து கொள்ளச்செய்வார்கள். அதனை தவிர்த்தல் மனதிற்கும் உடலிற்கும் நலம்.
அவ்வாறு நேர்மறை எண்ணம் கொண்ட சில நட்புகளின் பரிந்துரையின் பேரில், சில பல புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். அதில் ஒரு பிரிவு முற்றிலும் விவகாரமானது. உதாரணமாக, 'வால்கா முதல் கங்கை வரை', 'கிறுத்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்', 'இதர ராமாயணங்கள்' என பட்டியல் நீள்கிறது. அப்படியான ஒரு தேர்விலிருந்து சமீபத்தில் சுவீகரித்து கொண்ட புத்தகம் தான் 'இந்து மதம் எங்கே போகிறது?' வெளியீடு- நக்கீரன் பதிப்பகம். பதிப்பகத்தின் பெயர் பார்த்தவுடன் ‘நாத்திகம்’ என்று முன்முடிவுகள் எதுவும் கொள்ள வேண்டாம். எழுதியவர் - அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார். கும்பகோணத்து அய்யங்கார். அவாளே சொல்லிட்டா ஓய்.
இது நக்கீரனில் தொடராய் வெளிவந்ததின் தொகுப்பு. எழுதும்போதே அவருடைய மக்கள் மூலம் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார். இருந்தும் வேதத்தில் உள்ள உண்மைகளை சொல்லிவிடவேண்டுமென்ற உந்துதலினால் இந்த தொடரை கர்ம சிரத்தையுடன் எழுதியிருக்கிறார். ‘இவர் சொல்லவில்லையென்றால் வேறு யாரும் சொல்லமாட்டர்களா என்ன?’ என்ற வரிந்து கட்டி கொண்டு கேட்பவர்களுக்கு ‘இல்லை’ என்ற பதிலைத்தான் கூறுவேன். முதலில் உண்மையை ஒத்துக்கொள்ளும் மனம் வேண்டும். இரண்டாவது வேதத்தில் உள்ளவற்றை அர்த்தம் புரிந்து கொள்ள சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். இது இரண்டும் கூடிவரப்பெற்றோர் தற்காலத்தில் இல்லை. இருந்தாலும் இல்லாமலாக்கிவிடுவார்கள்.
என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்?
இவர் கூறிய அனைத்திற்கும் வேதத்தில் உள்ளவற்றையே மேற்கோள் காட்டுகிறார். அது தற்கத்திற்கு உகந்ததாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது. சரி, என்னவெல்லாம் சொல்லுகிறார். 352 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் அவர் விவரிப்பதிலிருந்து சுவாரஸ்யமான சில தரவுகள் கீழே.
கடவுள் இல்லை. உருவாக்கப்பட்டுள்ளார். ஆதிமனிதன் முதலில் இயற்கையை (நீர், நெருப்பு, மலை) பார்த்து பயந்து பின்பு அதையே தொழத்தொடங்கியுள்ளான். வழிபாடு என்பது இயற்கையிலிருந்து உருவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஆரியர்கள் இன்றைய இந்தியாவிற்குள் குடிபுகுந்திருக்கின்றனர். வரும் பொழுது மனுநீதி என்று சொல்லப்படுகிற அவர்களது புனித நூலையும் கையோடு கொண்டு வந்துள்ளனர்.
யார் இந்த மநு? சமஸ்கிருதத்திதில் உள்ள வேதங்களை எளிதாக புரிந்து கொள்ள எழுதப்பட்ட கோனார் உரை தான் (guide) மநு ஸ்ம்ருதி மற்றும் அதை எழுதியவர் மநு என்கிறார். அது கோனார் உரையாக மட்டுமல்லாமல் சமூகத்தில் பிளவுகளையும் பெண்களை அடிமைகளாகவும் ஆக்கியது என்கிறார்.
சமூகத்தில் என்ன பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தணன் (பிராமணன்), ஷத்ரியன் (அரசன்), வைசியன் (வியாபாரி) என்று இருந்த சமூக கோட்பாட்டில் சூத்திரன் என்ற ஒன்றை புதிதாக ஏற்படுத்தியது. அதாவது வேலை செய்யும் கூட்டம்.
அவர்கள் இங்கு வந்தேறியபொழுது தங்களுடைய பெண்களை மிகவும் கொஞ்சமாக அழைத்து வந்துள்ளனர். அதற்கும் காரணம் அந்த மநு தான். பெண்கள் பிறந்தது முதல் தகப்பன் அரவணைப்பில், பின் கணவனை அனுசரித்து அதன் பின் முதுமையில் தன் மகனின் தயவில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறது.
பின்பு இவர் விவரிக்கும் அஸ்வமேத யாகம் என்றால் என்ன என்பது அதிர்ச்சிக்குள்ளாக இருக்கிறது. பொதுவாகவே யாகம் வளர்க்கும்பொழுது பசுவை பலி கொடுத்திருக்கிறார்கள். ஞானம் பெற்ற புத்தர் இதனை எதிர்த்து ‘don’t pour innocent lives into fire’ என்றொரு தத்துவத்தை முன்னெடுக்கிறார். உலைக்கே பங்கம் என்று வந்தவுடன் புத்தர் இவர்களுக்கு எதிரியாகிறார்.
இவர்களின் வருகைக்கு முன் சிலைக்கு வழிபாட்டை அந்தந்த இனமக்கள் தான் முன்னின்று நடத்தி கொண்டிருந்தார்கள். பூவை கொண்டு இவர்கள் செய்துகொண்டிருந்த மிக எளிய வழிபாட்டை பூசை என்று எவ்வாறு திரித்தார்கள்? அதில் சாஸ்திரமும் சாங்கியமும் எப்படி நுழைந்தது? சிலைக்கு அருகில் நின்றவன் வெளியில் எப்படி தள்ளப்பட்டான்?
பூபெய்தும் பெண்களை அலேக்காக இளவட்டங்கள் தூக்கி சென்றதூம் பின்னர் பெரியவர்கள் இவர்கள் பின்னால் சென்று அவர்களை கவர்ந்து கொண்டு திருமணம் என்கிற ஏற்பாட்டினை செய்து வைப்பதும் தான் வழக்கம். தென்நாட்டை பொறுத்தவரை கல்யாணம் என்பது இதுதான். இவர்களின் வருகைக்கு பிறகு அதில் பல சடங்குகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?
அனுலோம சங்கரம் மற்றும் பிரதிலோம சங்கரம் என்றால் என்ன என்று மநுஸ்ம்ரிதி எதை விளக்குகிறது? அதாவது உயர் ஜாதி ஆண் கீழ் ஜாதி பெண்ணை மனம் செய்து கொண்டால் அது அனுலோம சங்கரம். அதே கீழ் ஜாதி ஆண் உயர் ஜாதி பெண்ணை மணந்து கொண்டால் அது பிரதிலோம சங்கரம். இதில் மனுஸ்ம்ரிதி ஏற்றுக்கொள்ளும் வகை அனுலோம சங்கரம் என்ற சங்கமத்தை மட்டும். அது ஏன்?
இயல்பாகவே பெண்கள் அனைவரும் சூத்திரர்கள் என்றே மனுஸ்ம்ரிதி சொல்கிறது. மோட்சம் என்பது அந்தண ஆண்களுக்கு மட்டுமே கிட்டுவதாகவும் மற்றவர்கள் (including அந்தண பெண்கள்) மோட்சம் வேண்டும் என்றால் அடுத்த பிறவியிலாவது அந்தண ஆணாக பிறக்க தவம் செய்து பிறகு மோட்சம் கிட்ட முயற்சிக்க வேண்டும் என்று சொல்கிறது. மேலும் சூத்திரர்களுக்கு வேதம் கற்று கொடுக்க கூடாது என்று உபதேசிக்கிறது.
யஜனம் (யாகம் வளர்ப்பது) மற்றும் யாஜனம் (வளர்த்த யாகத்திற்கு யாசகம் பெறுவது) என்றால் என்ன? இவற்றை மட்டுமே அந்தணன் கடைபிடித்தால் போதும் என்று மநு ஏன் வழிவகுக்கிறது?
மடங்கள் எவ்வாறு தோன்றின? இவர்கள் புத்தரை மட்டும் வெறுத்தார்களே ஒழிய அவர் வழி தோன்றிய மடங்களை தங்கள் தத்துவங்கள் வளர்க்க உபயோகித்துக்கொண்டனர். விளைவு ஸ்ரீங்கேரி மடம், காஞ்சிபுரம் மடம், கும்பகோணம் மடம் என்று பல மடங்கள் தோன்றின. ஸ்ரீங்கேரி மடத்தில் தமிழ் பேசும் அந்தணனை ஏற்று கொள்ளாததால் கும்பகோணம் மடம் தோன்றியது என்று பின்பு அது அரசியல் காரணமாக காஞ்சிபுரத்திற்கு இடம் பெயர்ந்ததாகவும் விவரிக்கிறார்.
ஸ்ரீங்கேரி மடத்தில் தமிழ்
பேசும் அந்தணனை ஏன்
ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றால்
தமிழ் நீச பாஷை.
அதாவது பிடாது என்றால்
பிடாது. சமஸ்கிருதம் பேசத்தெரிந்தால் மட்டுமே மடத்திற்குள் அனுமதி.
இவ்வளவு ஏன்
பெரியவா என்று சொல்லப்படும் சங்கராச்சார்யார் கூட சமஸ்கிருதம் மட்டுமே பேசினவர் என்று சொல்லுகிறார். தமிழ் பேசுபவர்களிடம் அல்லது சமஸ்கிருதம் பேச தெரியாதவர்களிடம் பேசினால் அவர்கள் மீண்டும் தலை குளித்து தங்கள் பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார்.
அதே சங்கராச்சார்யார் இரண்டு முறை
பரிதாபபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் கோவிலில் நுழைய
முற்பட்ட சூத்திர மக்களை
தடுக்கும் பொருட்டு அந்தண
மக்களிடையே ஒரு கூட்டம்
நடந்தது. அதில் முடிவாக
பொம்மனாட்டிகள் அனைவரும் சேர்ந்து
கோவில் வாயிலில் அரண்
அமைத்து அவர்கள் கண்ணில்
மிளகாய் பொடியை தூவுவது
என்று முடிவு செய்து
அதை செயல்படுத்தும்பொழுது காவலர்களால் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அய்யய்யோ, மிளகாய் பொடி
கண்களில் பட்டு அலறி
துடித்த சூத்திரர்களை விடுத்து
நம்மாத்து பெண்கள் அடி
வாங்கி விட்டார்களே என்று
பெரியவா பரிதாபப்பட்டுள்ளார். இது முதல்
முறை. பிரதமர் நேருவின்
அரசாட்சியில் பெண்களுக்கும் சொத்தில்
சம பங்குண்டு என்ற
ஆணை நிறைவேற்றபட்டபோது, அதனை எதிர்த்து
நம்மாத்து பெண்கள் நமது
கண்ட்ரோலில் இருக்கமாட்டார்களே என்று பெரியவா
பரிதாபப்பட்டுள்ளார். இந்த இரண்டு
சம்பவங்களையுமே அக்னிஹோத்ரம் தாத்தாசார்யார் விலாவாரியாக விளக்கியுள்ளார்.
திருமணத்தின் பொது வாத்தியார் சொல்லும் மந்திரத்தின் அர்த்தம் என்ன? அவற்றை தமிழில் மொழிபெயர்த்து அதன் அர்த்தத்தை மீண்டும் புரிந்துகொள்வோமா? என்று கேள்வி கேட்கிறார். பண்டைய காலங்களில் திருமணங்களுக்கு விருந்தாக மாடு பலியிடபட்டுள்ளது என்பதனை வேதத்திலிருந்து மேற்கோளிட்டு விளக்குகிறார். சதி அதாவது உடன்கட்டை ஏறுவதை வேதம் எவ்வாறு ஆதரிக்கிறது?
உபநயனம் என்றால் கல்வி கற்றுக்கொள்ள பாடசாலைக்கு அனுப்புவது. அதே உபநயனம் இன்று எவ்வாறு உருமாறி பள்ளிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு பூணூல் திருமானமாக உருமாறியது?
திவசத்தில் சொல்லப்படும் மந்திரத்தின் அர்த்தத்தை கேட்டால் தலை சுற்றுகிறது. இதை சொல்லியா இத்தனை நாட்கள் இவர்கள் சிரார்த்தம் செய்தார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.
பால்ய விவாகத்தை மநு எவ்வாறு ஆதரித்தது? விதவை மறுமணத்திற்கு எந்த ஒரு முத்திரையை குத்தி சதி என்னும் அரங்கேற்றத்தை ஆதரித்தது போன்றவற்றை தெளிவுபடுத்துகிறார்.
கணபதி என்ற சொல்லிற்கு அர்த்தம் என்ன? முருகன் வரலாறு என்பது என்ன? திருப்பதி எழுமலையானின் ரகசியம், அதற்கும் காளி அம்மானுக்கும் உள்ள சம்பந்தம், அய்யனார் அய்யப்பனாக மாறிய கதை, தட்சிணை ஏன் வெள்ளியாக இருக்கக்கூடாது (தங்கம் விலைமதிப்புடையது)? கிறுஸ்துவத்தில் மட்டுமல்ல, வேதத்திலும் பாவமன்னிப்பு, உண்மையாகவே விரதத்தை வேதம் அனுமதிக்கிறதா? காளிக்கு பூஜை செய்துகொண்டிருந்தவர்கள் திருப்பதியில் மொட்டை அடிக்கும் ரகசியம் என்ன?
நாம் இன்றை நம்மை அடையாளபடுத்திக்கொள்ளும் ‘இந்து’ என்கிற மதத்தின் பெயர் எப்பொழுது தோன்றியது?. சிந்து சமவெளி நாகரீகத்தின் மக்களிடம் வாணிபம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி, முதலில் நம்மை சிந்து என்று அழைத்து பின்பு அதுவே மருவி இந்து என்று மாறிய கதையை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். மேலும் ஆரியர்கள் விஜயம் செய்யும் முன்பு இங்கு தோராயமாக 450 மதங்கள் இருந்தன என்றும் கூறுகிறார்.
இதுமட்டுமில்லாது இன்னும் பல செய்திகள், அதன் பின் உள்ள உண்மைகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது இந்த புத்தகத்தில். மேலே குறிபிடபட்டவை ஒரு பானை சோறுதான்.
பொட்டில் அறைந்தார் போல் இவற்றை வெளிக்கொணர்ந்து எழுதவும் ஒரு திராணி வேண்டும். மீண்டும் சொல்கிறேன். மேலே உள்ள அனைத்தும் ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற புத்தகத்தில் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சர்யரால் எழுதபட்டவை. எழுதிய அனைத்திற்கும் ஆதாரங்கள் வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். தவிர நூலின் மொழி நடை எளிமையாக ஒரு பெரியவர் குழந்தைகளுக்கு கதை கூறுவது போல் இருக்கிறது.
இறுதியாக அவர் கூறுவது, மதத்தின் பெயரால் எழுப்பட்டுள்ள மூடநம்பிக்கைகளை களைந்து, வேதம் காட்டிய திசையில் இயற்கை வழிபாட்டை கடைபிடித்து ஷேமம் பெறுங்கள் என்பதே.
அனைத்து மதமுமே கிட்டத்தட்ட நாடாள வேண்டும் என்ற ஆசையில் பிறந்தது தான். அதுபோல எல்லா மதத்திலுமே இது போன்ற நிறைகளும் குறைகளும் காணக் கிடைக்கின்றன. காலத்திற்கேற்ப அவை புகழப்படுவதாகவும் அல்லது எள்ளி நகையாடுபவையாகவும் மாறி இருக்கின்றன. மதத்தின் பெயரால் நிகழும் மூடநம்பிக்கைகளை நிறுத்துவோம். மனிதம் காப்போம்.
நக்கீரன் வெப்சைட்டில் இலவசமாக
படிக்க கிடைக்கிறது. தவிர
கிண்டில் மற்றும் இதர
இணைய தளங்களிலும் புத்தகம்
கிடைக்கிறது.
புசித்து இன்புறுக. தெளிவு
பெருக. !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக