அருகில் இருக்கும் தெருவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கான தனிப்பயிற்சி (tution) ஒன்றை நடத்துகிறார்கள். இரண்டு டீச்சர்கள். ஒரு டீச்சர் அந்த வீட்டின் ஓனர்.
காலை எட்டு மணியளவில் அந்த வீட்டின் அருகில் குடியிருப்பவர் அவரை அழைத்து 'இது என்ன?' என்று மரத்தில் இருக்கும் கூட்டை ஒரு முறை பார்க்க சொல்லியிருக்கிறார். அங்கு ஆரம்பித்தது வினை. அந்த கூடு வெள்ளியை போல 'ஜக ஜக' வென்று ஜொலித்துள்ளது. டீச்சருக்கும் அது என்ன என்று பிடிபடவில்லை. தென் கூடு போன்று தெரிந்திருக்கிறது. ஆனால் தேன்கூடு இல்லை. எட்டு அடி உயரத்தில் கூடு கட்டியிருக்கிறது. பரோபகாரியான டீச்சர், சரி வயதானவர்கள் கேட்கிறார்களே என்று அது என்னவென்று பார்த்துவிடலாமென ஒரு அலுமினியம் லேடரில் ஏறியிருக்கிறார். ஏறி சன்ஷேடில் நின்றுகொண்டு அது என்னவென்று ஒரு குச்சியால் தொட்டதும்தான் தாமதம். சரசரவென்று ஒரு ஐம்பது கதண்டுகள் அவரை மொய்த்துள்ளது.
கதண்டு என்பது ஒரு வகை பூச்சி. ராணி தேனீயைவிட 100 மடங்கு வீரியம் அதிகமுள்ளது. இரண்டு மூன்று கொட்டினாலே சுற்றத்தாருக்கு தகவல் சொல்லிவிடலாம் எனுமளவுக்கு விஷப்பூச்சி.
உச்சந்தலை முதல் எங்கெங்கெல்லாம் உடை மறைக்கவில்லையோ அங்கெல்லாம் கொட்ட ஆரம்பித்திருக்கிற்றது. கொட்டுவது என்றால் குடைந்து கொட்டுவது. ஒவ்வொன்றையும் உருவி பிடுங்கி எடுத்துப்போடும் அளவுக்கு கொட்டும். கேஎஸ்ஹீ திரும்பி பார்த்தால் அழைத்தவரை காணவில்லை. ஜூட். லேடரில் இறங்கும் அளவுக்கு பொறுமையில்லை. கதண்டுகள் மேலும் மேலும் படையெடுக்கின்றன. எட்டடி உயரத்திலிருந்து குதித்துவிட்டார். வேகமாக குளியலறை சென்று ஒவ்வொரு கதண்டாக பிய்த்து தண்ணீரில் எரிந்து வேகா வேகமாக மருத்துவமனை செல்வதற்கு வெளியே வந்திருக்கிறார். கூப்பிட்டவரை வண்டியை ஸ்டார்ட் செய்ய சொல்ல அவர் எதோ அரை மயக்கத்தில் பிதற்ற இவரே வண்டியை ஸ்டார்ட் செய்து அருகில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அங்குள்ளவர்களோ கதண்டு கடித்தால் வைத்தியம் கிடையாது. அதுவும் 36 கதண்டு கொட்டியிருக்கிறது என்று சொல்கிறீர்கள்; இன்னும் நீங்கள் இரண்டு மணி நேரம் பிழைத்திருந்தாலே அதிசயம். அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று விரட்டாத குறையாக அனுப்பியிருக்கிறார்கள். நான் நன்றாகத்தான் இருக்கிறேன், முதலுதவியாவது செய்து அனுப்புங்கள் என்று சொன்னதற்கும் மசியவில்லை.
வேறு வழியின்றி 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னோரு அரசு மருத்துவமனைக்கு தான் வண்டியை ஒட்டிக்கொண்டு விரைந்திருக்கிரார். கை கழுத்து என எல்லா இடங்களிலும் வீக்கம் அதிகமாகிவிட்டது. அந்த அரசு மருத்துவமனையிலும் அதே பதில் கிடைத்துள்ளது. சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லிவிடுங்கள் என்று வேறு பதறியிருக்கிறார்கள்.
தேனீ கொட்டுவது போன்ற வலியை மட்டும் உணர்ந்துகொண்டிருப்பவர் மருத்துவமனையின் இந்த பதில்களை கேட்டு இப்பொழுது சற்று கலக்கமாகியிருக்கிறார். மீண்டும் மனம் தளராமல் வண்டியை தானே ஒட்டிக்கொண்டு அடுத்த மருத்துவமனைக்கு சென்று உதவி கேட்க அவர்களும் இதே பதில் சொல்ல என களேபரமாகியிருக்கிறது. டீச்சரின் வயதான மாமியார் அந்த மருத்துவமனையில் முன்பே வேலை பார்த்தவர். 86 வயது. அவர் வீட்டில் இருந்த படியே மருத்துவமனை ஊழியரிடம் பேச அவர்கள் முதலுதவிக்கு சம்மதித்திருக்கிறார்கள். ஒரு பெயின் கில்லர் கொடுத்து பல்ஸ், BP, ECG போன்று வஸ்துக்களை சோதிக்க ஆரம்பித்திருக்கார்கள். இதற்கிடையில் 36 கதண்டு கடித்த பெண்மணி இன்னும் உயிரோடிருக்கிறார் என்ற அதிசய செய்தியை கேட்டு ஒவ்வொருத்தராக வந்து பார்த்தது சென்றிருக்கிறார்கள். வேறொருவர் மூலம் கணவருக்கும், சென்னையிலிருக்கும் தன்னுடைய மகளுக்கும் விஷயத்தை கூறியிருக்கிறார். இறுதியாக தன் தாயை பார்க்க வருகிறோம், தன் மனைவியை பார்க்க வருகிறோம் என்ற பதட்டடத்துடன் இருவரும் கிளம்ப ஒரு மிகப்பெரிய உச்சகட்ட மனப்போராட்ட்டம் அங்கு நடந்திருக்கிறது.
இந்த பிரச்சினைகளை கண்கூடாகப்பார்த்துக்கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் தன்னுடைய கணவருக்கு போன் போட்டு தருமாறு டீச்சர் கேட்க அவரோ நெட்ஒர்க் இல்லை, சிக்னல் இல்லை என்று சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து ஜூட். டீச்சருக்கு ஏதுனும் ஆகிவிட்டால் இவரை தூக்கி உள்ளே வைத்துவிடுவார்களோ என்ற பயம். ஆதலால் டீச்சர் யாரிடமாவது போனில் பேசிவிட்டால் இவர் கூப்பிட்டுதான் கதண்டு கொட்டிவிட்டது என்று தெரிந்துவிடும் என்கிற எண்ணத்தில் டபாய்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எஸ்.
அதுமட்டுமில்லாமல் தாங்கள் எவ்வளவளோ தடுத்தும் கேட்காமல் டீச்சர் சன்ஷேடில் ஏறிவிட்டதாக மற்றவர்களிடம் கூறியிருக்கிறார். முத்தாய்ப்பாக அவர்களுக்கு அது கதண்டு என்று தெரிந்துதான் டீச்சரையே அழைத்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை அந்த வீட்டில் வேலை பார்ப்பவர் இவர்களிடம் பின்னர் கூறியிருக்கிறார்.
DNAவோ இல்லை இவர் கும்பிட்ட சாமியோ அல்லது பெற்றோரின் ஆசிர்வாதமோ ஏதோ ஒன்றின் காரணமாக ஒரு மாதம் தாண்டியபிறகும் தற்போது நலமாயிருக்கிறார்.
நெறி யாதெனில்,
1. தேனீக்கும் கதண்டுக்கும் அவசியம்
நாம் வித்தியாசம் தெரிந்துகொள்ள வேண்டும்.
(கதண்டின் வீரியம் தெரியாதவர்கள் ஒரு முறை கூகுளிடம் கேட்டுப்பார்க்கலாம்)
2. நாமே நம்மை கைவிடாதவரை நாம் தோற்கவில்லை என்பது சர்வ நிச்சயம்.
3. நாம் அழைக்காமல் நம்மை அழைக்கும் எந்தவொரு அழைப்பும் நமக்கு துன்பம் தருபவையே. ஒருத்தனும் கூப்டு ஒரு கோடி கொடுக்கப்போறது கிடையாது. பிரச்சனைல இழுத்துவிடத்தான் கூப்பிடுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக