கையேந்திபவன்களில் சுத்தம் என்றுமே கவலைக்கிடம் தான். பாத்திரம் கழுவுவது முதல் இலையில் பரிமாறப்படும் உணவு வரைக்கும் மனதிற்கும் உடலிற்கும் அதில் தொந்தரவு செய்யும் சமாச்சாரங்கள் அதிகம். அதையெல்லாம் கடந்து தான் நம்மவர்கள் உண்டு திரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க ஊரகத்தில் இருக்கும் பி செக்டர் மாமி கடையில் கூட்டம் என்றுமே அலைமோதும். எந்த வகையில் கூட்டம் இருக்கிறது என்றால் இரவு 8 மணிக்கு மேல் சென்றால் சாம்பார் வாளியை நம்மீது கோரி ஊற்றாத குறையாக ' எல்லாம் காலி. இன்று போய் நாளை வா ' என்பார்கள். மறுநாள் சென்றால் மட்டும் உடனே கிடைத்துவிடுமா என்ன ? திருவிழாக்களில் இலவசமாக கொடுக்கப்படும் ஜூஸ் பாக்கெட்டுக்கு மல்லு கட்டுவது போல கூட்டம் அம்மும். அவர்களையெல்லாம் தாண்டி ' அண்ணே , ஹாஃப் பொங்கல் , ஒரு மெது வடை ' என்று சொல்லி அவர்களுக்கு கேட்டு உடனே தட்டை நீட்டிவிட்டால் போதும் , உங்களுக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார் என்று மார் தட்டிக் கொள்ளவும். அதுவும் ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம். ஊரகத்து இல்லத்தரசிகள் அனைவரும் விடுமுறை. ஏழு மணி வாக்கிலே லுங்கியை மடித்து விட்டு மேலே ஒரு டிஷர்ட்டை மாட்டிக்கொண்டு ஒரு கூடையில் டிபன் பாக்ஸும் தூக்குவாளியையும் கொண்டுவந்து ஜபர்தஸ்தாக அந்த கரும்பலகையில் இறக்கி வைப்பார்கள் கனவான்கள் (கணவர்கள்). போதாக்குறைக்கு அன்று மட்டும் அதிகாலையில் சீக்கிரமாக எழுந்துவிடும் வாண்டுகளை இவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.
உணவின் ருசிக்கோ உடலின் ஆரோக்யத்துக்கோ என்றுமே அந்த உணவகத்தில் பங்கம் இல்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு கூட்டமும் வந்திருக்காது , ' கடையை சாத்தியாச்சு. கிளம்புங்கோ ' என்றும் அவர்களும் சொல்லியிருக்க முடியாது.
பிரச்சினை அதுவல்ல. ஒரு நாள் இரவு 7 மணியிருக்கும். கோடைகாலமாதலால் போகலாமா வேண்டாமா என்று சூரியன் தயங்கிக்கொண்டிருக்கும் ஒரு விதமான அந்திவேளை. அந்த வழியாக வந்தபொழுது மாமி கடையின் மார்க்கை பார்த்தேன். மார்க் என்பது அவரது அடைமொழி. மார்க்கை எந்த கோலத்தில் பார்த்தேன் என்றால் , அவர் எக்லவ் கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார். மனிதன் காலையிலிருந்து பரிமாறி பரிமாறி ஓய்ந்துவிட்டாரோ என்று சந்தேகித்த நேரத்தில் உற்று கவனித்தால் அவரது இடது கை இடுப்பிற்கு கீழே இருக்கிறது. சுவற்றில் ஈரம் தெரிகிறது. சிறுநீரை பெருநீராக கழித்துக்கொண்டிருந்தார். இது எப்போது பொதுக்கழிப்பிடமாக மாறியது என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் கிராதக புத்தி வேறு மாதிரி யோசிக்க வைத்தது. ஆண்களில் பெரும்பாலோருக்கு சிறுநீர் கழித்து கை கழுவும் பழக்கம் இருப்பதில்லை. எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் இது செல்லும். எவருடைய செல்பேசியையும் பொருளையும் தொடுவதற்கு முன் யோசித்துக் கொள்ளுங்கள்.
அந்த சந்தேகத்துடனேயே மார்க்கை பாலோ செய்தேன். மருந்துக்கும் அவர் பேண்ட்டில் கூட கையை துடைக்கவில்லை. வெகு வேகமாக பின்வழியாக உள்ளே சென்றவர் , ' அண்ணே ரெண்டு இட்லி ' என்றவருக்கு *ஞ்சை தோட்ட கையால் பரிமாறிக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு இவர் கையால் தான் பில்டர் காஃபி சாப்பிடுவேன் என்று ஒரு ஓய்வு பெற்ற மேலாளர் ஒற்றைக்காலில் தவம் புரிந்து கொண்டிருந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை அங்கு சென்றதே இல்லை. மேலும் அந்த காட்சி மனக்கண்ணை விட்டு அகல மறுக்கிறது. இருபாதயிரம் மக்கள் நம்பி வரும் ஒரு உணவுக் கூடத்தில் ஒரு குறைந்தபட்ச தன் சுத்தத்தையாவது பேண வேண்டாமா ?
இது அந்த கடையில் மட்டுமல்ல. ஊரகத்தில் உள்ள எல்லா உணவகங்களுக்கும் இதே நிலை தான். ஊரகம் ஏன் ? ஊரில் உள்ள ஒளிர்ந்து மிளிரும் படோடோப கடைகளிலும் இதுதான் நிலைமை.
என்ன செய்யலாம் ? முடிந்தவரை வீட்டிலேயே உண்டு பணத்தையும் ஆரோக்கியத்தையும் மிச்சப்படுத்தலாம் அல்லது கண்டும் காணாமல் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்.
செவ்வாய், டிசம்பர் 13, 2022
மாமி கடையும் மார்க்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக