காதலை தமிழ் சினிமா அணுகிய விதம் பல சமயங்களில்
நகைப்புரியதாகத்தான் இருந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பின்னாலே சுற்றுவது,
கையை அறுத்துக்கொள்வது, மிரட்டி பணிய வைப்பது, கடத்திச்
சென்று, கட்டாயத் திருமணம் என கோக்குமாக்குகள்
இன்னும் பல.
ஒரு பெண்ணின் பார்வையில் காதலை நகர்த்திய
படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் மாடர்ன் லவ் சென்னைத் தொடரில்
'மார்கழி' என்கிற எபிசோட் ஒரு மைல்கல். கமிங் ஆப் ஏஜ் வகையறா கதை. பெண்ணின்
மனதை தொட்டு எழுதப்பட்ட ஒரு கவிதை.
பெற்றோரின் பிரிவினால் துயர்கொள்ளும் ஒரு பதின்ம
வயது பெண், தனது மனதை திசை திருப்பி வலியைப்
புறந்தள்ள தேவன் திருக்கோவிலில் choir வகுப்புக்குச்
செல்கிறாள். அங்கு வரும் வேற்று மாநில இளைஞன் மீது மையல் கொள்கிறாள். என்னதென்று
தெரியாது ஒரு இனம்புரியாத பரவசம் அவளது மனதில் மற்றும் உடலில். அவனை கவரும்
பொருட்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அந்த ஒரு நிமிட காட்சி பல உணர்வுகளை
நம்மிடம் படபடவென கடத்தி விட்டுச் செல்கிறது. சோகமே உருவான முகம் முதல் காதலின்
பட்டாம்பூச்சி பறக்கும் தருணம்வரை அவ்வளவு உணர்ச்சிகளை பாந்தமாக பரப்பி வைக்கிறார்
சஞ்சுலா. எதிர் வீட்டுப் பெண் போல் இருக்கிறார். எங்கோ பார்த்த முகம் போல்
உங்களுக்கும் தெரிந்தால் உங்கள் நினைவடுகளுக்குள்ளும் ஒரு ஜேஸ்மின்.
பொதுவாக இரண்டாம் முறை ஒரு படத்தைப்
பார்ப்பதற்கு என்றுமே விருப்பப்பட்டதில்லை. ஏனெனில் அந்த எக்ஸைட்மென்ட் இராது.
ஆனால் மார்கழி எபிசோட் என்னுடைய அகராதி பிடித்த இந்த கட்டுக்கோப்பை பிடுங்கி
எறிந்துவிட்டது. மூன்றாவது முறை பார்க்கிறேன். இன்னும் சில முறைகள் பாக்கி
இருக்கின்றன. காரணம் ஒன்று படத்தின் நாயகி சஞ்சுலா சாரதி. இரண்டாவது காரணம்
படத்தின் நாயகன் இளையராஜா. வழி நெடுகிலும் பன்னீர் பூக்கள் உதிர்ந்து உங்கள் தலையில்
விழுந்து கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? அதுபோலதொரு உணர்வை மார்கழி முழுவதும் பனி போல விரவி இருக்கிறார்.
இதம். அது ஒரு சுகம். மீண்டும் மீண்டும் கேட்கும் போதை. மூன்றாவது காரணம் இந்த
மார்கழி நம்மிடம் புதைந்து கிடக்கும் பால்யத்தை, முதல் காதலின் படிமங்களை, அந்த
பட்டாம்பூச்சி தருணங்களை முடுக்கி எழுப்பி விடுகிறது.
அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக