சினிமாவுக்கு கதை என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் காட்சி மொழி என்பது வேறு. புத்தகத்தில் கதைமாந்தர்கள் செய்யும் ஒரு செயலுக்கான காரணத்தை அதன் நியாய தர்மங்களை அல்லது அதன் தாக்கத்தை இரண்டு மூன்று பக்கங்கள் விளக்கி எழுத வேண்டும். இல்லையெனில் கதாசிரியரின் எண்ணவோட்டங்கள் வாசகனை சென்று சேராது.
போலவே
சினிமாவுக்கான கதை எழுத ஆரம்பிக்கும் முன், Characterization என்று அழைக்கப்படுகிற
மாந்தர்களின் குணாதிசயத்தை எழுதிவிடுதல் நலம். அதுவே காட்சிக்கு உயிர்ப்பை அளித்து
பார்வையாளனின் ரசனையை நீட்டிக்கச்செய்யும். உதாரணமாக ஒரு காட்சி கொண்டு விளக்கலாம்.
ஒரு வயதான பெண்மணி மற்றும் இளமங்கை. இருவரும் ஒரே நேரத்தில் இக்கட்டில் மாட்டிக்கொள்கிறார்கள்.
ஹீரோ யாரை காப்பாற்றுவான். நாம் அந்த கதைக்காக ஹீரோவுக்கென்று எழுதிவைத்த இலக்கணம்
ஹீரோவை எந்த முடிவு எடுக்கச்செய்யும் என்று தீர்மானிக்கிறது. இன்னொரு காட்சி. ஹீரோயின்
வீட்டில் தனியே இருக்கும் சூழ்நிலை வருகிறது. ஹீரோயின் ஹீரோவை அழைக்கிறாள். இன்னும்
திருமணம் ஆகவில்லை. இந்த மாதிரியாக சூழ்நிலையை தவற விடக்கூடாது என்று ஹீரோ செல்வானா
அல்லது 'கதவை தாழிட்டு தூங்கு' என்று ஹீரோ
சொல்வானா என்பது தான் அந்த Characterization. ஹீரோயின் அவ்வாறு அழைப்பதும் அழைக்காமலிருப்பதும்
நாம் ஹீரோயினுக்காக எழுதியிருக்கும் Characterization.
முகுந்தன்
உன்னி அசோசியேட்ஸ் படம் அந்த வகையைச்சார்ந்தது.
சொல்லப்போனால்
முகுந்தனின் Characterizationஐ முழுவதுமாக எழுதிவிட்டு இந்த இந்த சூழ்நிலைக்கு முகுந்தன்
என்ன முடிவு எடுப்பான் என்று கதை எழுதியிருப்பார்கள்
போல. அவ்வளவு டீடைலிங் அந்த கேரக்டரில் கொட்டி கிடக்கிறது. முகுந்தன், வக்கீல் படித்த
ஒரு இளைஞன். சாதிக்கத்துடிக்கும் இளைஞன். ஆனால் அவனுக்கு அவனது திறமையை பறைசாற்றும்
படிக்கு அல்லது சம்பாதிக்கும் பொருட்டோ எந்த ஒரு கேசும் அமையவரவில்லை. சாதிக்க வேண்டும்
என்று நினைக்கும் முகுந்தன் அதற்காக எந்த எல்லைக்கும் செல்வான் என்பதுதான் அவனுடைய
Character.
இந்த
ஒற்றை வரியில் இரண்டு மணி நேர கதைச் சுழல்கிறது.
ரசிக்கவும் வைக்கிறது. சில நேரங்களில் முகுந்தன் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்போகிறான்
என்று பதைபதைக்கவைக்கிறது.
ஹீரோயினை
முகுந்தன் கழட்டி விடுவதற்கு பதில், ஹீரோயினே இவனிடமிருந்து விலகிப்போகச்செய்வதில் ஆரம்பிக்கிறது முகுந்தனின் சாணக்கிய நகர்வுகள்.
போட்டி வக்கீலை கொலை செய்துவிட்டு ஒன்றுமே அறியாதது போல அவனது மனைவியிடம் சென்று வக்காலத்து
கையெழுத்து வாங்க அணுகுவது இதுவரை யாருமே செய்யாத சைக்கோ வில்லத்தனம்.
தற்கொலைக்கு
தூக்க மாத்திரை கிடைக்காததால் தான் பயணம் மேற்கொள்ளும் பஸ்ஸின் ஓட்டுனருக்கு தூக்க
மாத்திரை கலந்து மொத்த பயணிகளையும் விபத்தில் சிக்கவைக்க நினைப்பது Cruelty to the
Core.
விபத்தில் சிக்கிய மாணவர்களின் உயிரை துச்சமென நினைத்து அனைத்து
மாணவர்களின் வக்காலத்து கையெழுத்தும் தனக்கே வேண்டும் என்று ஹாஸ்ப்பிட்டலில் முகுந்தன்
மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மனநோயின் உச்சம்.
யார்
பார்க்கலாம்? வித்தியாசமான கதை மாந்தர்களை தேடுபவர்கள், ரத்த களரியில்லாத த்ரில்லர்
டிராமா விரும்பிகள், வினீத் ரசிகர்கள், மாற்று கதைக்களம் சினிமா விரும்பிகள் ஆகியோர்
தாரளாமாக பார்க்கலாம். என்னங்க மருந்துக்கும் காமெடி இல்லை என்று சொல்லுபவர்கள்
300 அடி தூரம் விலகியிருத்தல் நல்லது.
இவை
அனைத்தையும் செய்து இறுதியில் இந்த மனநோயாளி கண்டிப்பாக இறந்துவிடுவான் என்று நாம்
எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு வெற்றியாளனாக முகுந்தனை முன்வைத்து இந்த சினிமா
முடிவடைகிறது. ஒரு கயவன் அதற்குண்டான தண்டனையை அடைந்தே தீரவேண்டும் என்று எழுதப்படாத
விதியின் கீழ், முகுந்தன் சினிமாவுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களின் நீட்சிக்கான
திறவுகோலை திறந்து வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக