ஜோஜு ஜார்ஜின் நடிப்பா இல்லை எம்.ஜி.கிருஷ்ணனின் திரைக்கதையா என்று எதைச்சொல்ல? இரட்ட படத்தின் வெற்றிக்கு.
வேகமான் போலீஸ் ஸ்டேஷன் அமைச்சர் ஒருவரின் வருகைக்காக தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்த தருணத்தில் ஒரு காவலர் அங்கே இறந்துவிடுகிறார். மூன்று குண்டடிபட்டு. அவரின் மேல் வன்மம் கொண்ட மூன்று காவலர்களின் மேல் சந்தேகம் வலுக்கிறது. SP மற்றும் அமைச்சர் அங்கு நேரே வந்துவிட, இறந்ததற்கான காரணம் என்ன என்று தெரிந்து கேஸை முடிக்க அங்குள்ள காவலர்களுக்கு மட்டுமல்ல பார்க்கும் நமக்கும் ப்ரெஷர் ஏறிவிடுகிறது.
இறந்து போன ASI காவலராக மற்றும் அவரின் அண்ணன் DSPயாக ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடம். விசாரணை செல்லும் கோணத்திலேயே கதையும் விரிகிறது. ASI காவலருடைய பின்னணி, டிஸ்பியின் பின்னணி, இவர்கள் இரண்டு பேர் மற்றும் பெற்றோரின் பின்னணி, சந்தேக வட்டத்திற்குள் இருக்கும் அந்த மூன்று காவலர்கள் மற்றும் அவருக்கும் ASIக்கும் இடையிலான grudge என ரேஷமோன் பாணியில் திரைக்கதை கிளை பரப்பிச் செல்கிறது. இரண்டு மூன்று நடிகர்களைத்தவிர அனைவருமே அதிகம் பரிச்சயப்படாத புது முகங்கள். அவ்வளவு யதார்த்தம் நடிப்பிலே.
இறுதியில் அவர் ஏன் இறந்தார் என்ற காரணம் தெரியவரும்போது DSP மட்டுமல்ல நமக்கும் மெல்லிய சோகம் கலந்த அதிர்ச்சி ஏற்படுகிறது.
மற்றுமொரு தரமான மலையாள சினிமா.
கொசுறு: கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என்று நடிப்பில் வெரைட்டி காட்டி பின்பு சரியான வழிகாட்டுதல் இன்றி நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை விட்டு கொடுத்துவிட்ட அஞ்சலி இரட்ட படத்தில் இன்னதென்று புரியாத ஒரு சிறு கேரக்டரில். நெஞ்சு பொறுக்குதில்லையே !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக