புதன், ஜூலை 13, 2022

பெரியார்

 

அம்புலிமாமா, கோகுலம் போன்ற சிறார் புத்தகங்களை வாசித்து பின்பு பதின்ம பருவத்தில் ராஜேஷ் குமார், கி.ரா. என்று கலந்துகட்டி வாசிக்க தொடங்கிய காலத்தில், எனது நண்பன் ஒருவன் பெரியார் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான். அந்த வயதில் எனக்கு அவரை பற்றிய நேரடி அறிமுகமோ, கருத்துக்களோ  திணிக்கப்பட்டதில்லை.  இருந்தாலும் அவர் அரசியல் சம்பந்தப்பட்ட ஒருவர் என்றளவில் மட்டுமே என்னுடைய மதிப்பீடு இருந்ததினால் பெரிதாக அவர்பால் ஈர்க்கப்படவில்லை.

தற்போது இரு தசாப்தங்கள் கழித்து ஒரு நூலகத்தில் மேய்ந்துகொண்டிருந்த பொழுது பி.சி.கணேசனின் "பெரியார் ஒரு சகாப்தம்" என்ற நூல் கண்ணில்பட்டது. பி.சி.கணேசன் என்பவர் நேர்மறை எண்ணங்களை பற்றி வெற்றிகரமாக பல புத்தகங்கள் எழுதியவர். தமிழ் மொழியின் நார்மன் வின்சென்ட் பீலே என்று சொல்லுமளவுக்கு ஒரு நேர்மறை எழுத்தாளர். அவரின்பால் கொண்ட பற்றுதல் அந்த புத்தகத்தை படிக்க தூண்டியது.



'யார் சாமி இவர்? இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டோமே' என்கிற பீலிங். வாட்சப், ட்விட்டர், யூட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ் போன்றைய வஸ்துக்கள் மட்டும் அன்று இருந்திருந்தால் இங்கர்ஸாலை மிஞ்சியிருப்பார் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. பெரியார் என்றாலே நாத்திகர் என்கிற குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிடும் பிம்பம் ஒன்றே நம் மனதில் தோன்றுமாறு ஏற்படுத்தியது அவர் எதிர்த்து போராடிய சமூகத்தினரின் வெற்றி என்றே பார்க்கிறேன்.

அவரின் இளம்பிராயத்தில் பல சமூக அவலங்களை உற்று நோக்கி அதனை களையும் பொருட்டு பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்தகைய சீர்திருத்தங்கள் தாங்கள் இதுகாறும் பின்பற்றிய வழக்கங்களுக்கு மாறாக இருப்பதினால் மக்கள் அதனை ஏற்கத்தயங்கினார்கள்.  பிரச்சினைகளின்  ஊற்றுக்கண்ணாக விளங்கிய சடங்கு சம்பரிதாயங்கள் என்று உணர்ந்த அவர் ஆன்மிகத்தின் பேரில் திணிக்கப்பட்ட கொள்கைகளை தடாலடியாக மறுக்கத்துணிந்தார். இந்த சடங்குகளே ஒரு வகையில் தீவிரவாதம் எனலாம். அவர் நினைத்திருந்தால் தன்னுடைய சொத்துக்களை கொண்டு ஒரு சுகபோக சம்சார வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போயிருக்கலாம். அதை விடுத்து தன வாழ்நாள் முழுவதும் சமூக விடுதலைக்காக போராடியவர்.

வகுப்புவாரிச்சட்டம், பெண்கள் உரிமைக்கான மசோதா, தீண்டாமை ஒழிப்பு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, சுயமரியாதை முழக்கம் என எண்ணற்ற சாதனைகள். இன்று பேசவே தயங்கியவற்றை அன்றே மேடையேறி கர்ஜித்து முழங்கியவர். 1953இல் விநாயகர் சிலை உடைப்பு போராட்டமெல்லாம் அந்த காலத்திலேயே அவர் வாழ்ந்து காட்டிய thug life க்கு ஒரு சோற்று பதம். திருமண விழா ஒன்றி பேச அவரை அழைத்ததற்கு இவ்வாறு பேசத்கோடங்குகிறார். “நான் இங்கு கூறப்போகும் எவற்றையும் நீங்கள் கண்மூடித்தனமாக ஏற்கவேண்டியதில்லை. ஆனால் நியாயமிருப்பின் ஏற்றுக்கொளுங்கள். சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறேன். எதற்கு இந்த திருமணம்.  பெண்களை அடிமைபடுத்தவா? கணவனுக்கு கை கால அமுக்கிவிட்டு நீர் கொடுத்து சோறு போடுவதற்கா? இதனால் நாடு என்ன சுபிட்சமடைந்தது? பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும்....” என்கிற ரீதியில் உரையாற்றியுள்ளார். இன்னும் பலப்பல. தான் இறந்த 94வது வயதிலும் மேடையில் சமதத்துவத்தை உரக்கப்பேசியவர் தந்தை பெரியார்.

அவர் போன்று பலர் போட்ட விதை இன்று என்னை இங்கு தட்டச்சு செய்யவும், உங்களை எழுத்து கூட்டி படிக்கவும் வைத்திருக்கிறது. நெருப்பு அணைந்திருக்கலாம். ஆனால் இன்னும் கனன்றுகொண்டுதானிருக்கிறது.

கருத்துகள் இல்லை: