ஒவ்வொருத்தராக வந்து சேருவதற்குள் மணி காலை
பத்தாகிவிட்டது. விழாவை தலைமை தாங்கும் அந்த பள்ளியின் தாளாளர் சரியாக பத்து
ஐந்துக்கு வந்ததும் விழா தொடங்கியது. நல்லாசிரியர் விருது பெற்ற தந்தைக்கு மரியாதை
செய்யும் பொருட்டு முகிலன் அந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தான். பள்ளியின் தாளாளர்
இடதுபக்கம் அமர மேடையின் நடுவே கம்பீரமாய் சிறிது புன்முறுவலோடு விழாவின் நாயகன்
நல்லாசிரியர் சபாபதி காணக்கிடைத்தார்.
சம்பிரதாய வரவேற்புரை முடிந்ததும் முகிலன்
முன்வந்து மைக்கை கையிலெடுத்து ஒரு முறை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான். "அனைவருக்கும் வணக்கம். இங்கு நாம்
கூடியிருக்கும் நோக்கம் எனது தந்தை நல்லாசிரியர் விருது பெற்றதை போற்றும்
பொருட்டும் மேலும் அவரது சாதனைகளை அவருடனான அனுபவங்களை இங்கு விவரிக்கும்
தருணங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்ககும் ஊக்கம் அளிக்கும் விதமாகவும்
அமையும் என்ற ஒரு உயர்ந்த எண்ணத்திலே இந்த விழாவை முன்னெடுத்திருக்கிறேன். இந்த
விழாவை இனிதாக துவங்கும் பொருட்டு என் தந்தையுடனான என் அனுபவங்களை இங்கு
விவரிக்கிறேன்.
வாத்தியாரப்பா என்று அன்பாக அழைக்கப்படும்
சபாபதி சார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. அவர் நல்லாசிரியர் விருது பெற்ற
காரணத்தினால் தான் நான் இந்த தருணத்தில் பெருமை கொள்கிறேனா என்றால் நிச்சயமாக இல்லை. என்னுடைய தந்தையாக இருந்தாலும் அவர்
என்னுடன் ஓர் உற்ற தோழனாகத்தான் பயணித்தார். ஒரு பதின்ம வயது சிறுவன் எவ்வாறு தனது
சுகதுக்கங்களை நண்பனுடன் பகிர்ந்து கொள்ளுவானோ அது
போன்ற ஒரு சுதந்திரத்தை எனக்கு அளித்திருந்தார். சிறுவயதில் இருந்தே மருத்துவராக
வேண்டும் என்ற குறிக்கோள் என் மனதில் வேரூன்றியிருந்தது. மருத்துவம் மட்டுமே
படிக்க வேண்டும் என்ற உந்துதலோடு, இல்லை
உந்துதல் என்று சொல்லுவதை விட வெறியுடன் படித்துக்கொண்டிருந்தேன். மருத்துவத்துக்கான நுழைவுத்தேர்வு எழுதி
முடித்த தருணம் அது. அதற்கு முந்தைய வருடத்தின் கட் ஆப் மார்க்கை விட 3 மார்க் குறைவாக வரும் என்பதை தேர்வு
அறையை விட்டு வெளியே வந்தவுடனேயே என்னால்
கணிக்கமுடிந்திருந்தது. ஆங்கோர்
காட்டிடையே பொந்தினில் வைத்தேன் என்பது போல ஏழு ஆண்டுகளாக மருத்துவம் படிக்க
வேண்டும் என மனதுக்குள் சுமந்திருந்த கனவு. மருத்துவப்படிப்பு எட்டாக்கனி என்று
தெரிந்தபின்பு மிகவும் துவண்டிருந்தேன். எதிலும் கவனம் செலுத்தமுடியாத நான் அடுத்த
நாள் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை கடமைக்கேனும் எழுத கூட
முனைப்புக்காட்டவில்லை. அன்று இரவு உறங்காமல் நான் தவித்ததை கண்டு என்னருகில் வந்த
தந்தை, நடந்ததை அவ்வாறே ஏற்றுக்கொண்டு
நடக்கவேண்டியதில் கவனம் செலுத்து என்று ஒரு உற்ற தோழனைப்போல் என் தோள் பற்றி
ஆறுதல் கூறினார். நட்சத்திரங்கள் நிறைந்த அகண்டு விரிந்த ஆகாயத்தின் கீழே நடைபெற்ற
அந்த இரண்டு மணி நேர உரையாடல் என்னை தேற்றி உத்வேகப்படுத்தியது. என்னால் முடிந்த
அளவு முயற்சி செய்து படித்தவற்றை நினைவில் கொண்டு அடுத்த நாள் தேர்வு எழுதினேன்.
பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இதோ இன்று உலகின் உயரிய தகவல் தொழில்நுட்ப
நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் அங்கம் வகிக்கிறேன். வில்லிலிருந்து விருட்டென்று
கிளம்பும் அம்பை போல ஓடும் என் வாழ்க்கையை நான் திரும்பி பார்க்கும் தருணத்தில்
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் முன்வைப்பது, அன்று நான்
துவண்டிருந்தபோது நடைபெற்ற எனது தந்தையுடனான சம்பாஷனைகள் மட்டுமே. இதை ஒவ்வொரு
ஆண்டும் எனது பிறந்தநாள் விழாவில் நினைவு கூர்ந்து தந்தையிடம் கூறி ஆசி வாங்க
வேண்டும் என்று ஆசை கொள்வேன். ஆனால் இன்று உங்கள் எல்லோருக்கும் முன்னால் என்
வெற்றியின் காரணகர்த்தாவாக என் தந்தை மிகவும் உறுதுணையாக இருந்தார் என்பதை இந்த
விழாவிலே பதிவு செய்துகொள்ள கடமைப்பட்டுள்ளேன்".
கூட்டத்தாரையும் தன் தந்தையையும் பார்த்து
வணங்கிய முகிலன் தன் தந்தைக்கு அருகிலே போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று
அமர்ந்துகொண்டான். சபாபதியிடம் கொஞ்சமும் மாறாத அதே புன்முறுவல்.
அவருடன் வேலைபார்த்த பல ஆசிரியர்கள், சபாபதியுடனான தங்களின் அனுபவங்களை
அடுத்தடுத்து பகிர்ந்துகொண்டனர். அவருடன் இருபத்து மூன்று வருடகாலமாக வேலை
பார்த்துவந்த வெங்கடாச்சலம் பேசும்போது அவரது கண்ணில் நீர் வழிந்ததை அவரால்
கட்டுப்படுத்த முடியவில்லை. "நானும்
சபாபதியும் ஒரே வருடத்தில் இந்த பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டோம்.
இருவருமே அவ்வளவு வசதி பின்புலங்கள் இல்லாத குடும்பப்பின்னணியிலிருந்து தான்
முன்னேறி இந்த ஆசிரியர் வேலைக்கு வந்திருந்தோம். பணியில் சேர்ந்த சில நாட்களில்
எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஒரு வருடத்தில் அவள்
சுகவீனப்பட்டுவிட்டாள். மருத்துவமனையில் சேர்ந்து அவளை காப்பாற்றி
கொண்டுவருவதற்குள் ஏகப்பட்ட செலவு செய்து நிலைமை கைமீறி போய்விட்டது. போராடி
பிழைத்தது மட்டுமே சாதனை. ஆனால் மருத்துவச்செலவுக்காக நான் வாங்கிய கடன் என்
கழுத்தை நெருக்கியது. செய்வதறியாது கையறு நிலையில் இருந்த என்னை தேற்றியது சபாபதி
மட்டுமே. என்னுடைய சொல்லொன்னா துக்கங்களை அவருடன் நான் பகிர்ந்து கொண்டதால் அது பாதியாக குறைந்தது. மனதில்
ஏற்பட்ட கலக்கங்களுக்கு வார்த்தைகளால் மருந்து போட்டதோடு மட்டுமல்லாமல் என்னுடைய
கடனை தீர்ப்பதற்கு பொருளாதாரரீதியாகவும் பெரும் உதவிகள் செய்தார். தேவைக்கு
அதிகமாக செலவு செய்யாமல் சிக்கனமாக வாழும் சபாபதி, தான் அன்று
வரை சேமித்து வைத்திருந்த ஒரு பெருந்தொகையை கைமாறாக கொடுத்து உதவினார். வட்டியில்லா அந்த கடன் எனது பெருந்துயரை
துடைத்து எனது குடும்பத்தையும் காப்பாற்றியது. அன்று அவர் காப்பாற்றிய எனது மகள், இன்று மருத்துவராயிருக்கிறார். கடன் வாங்கி பிழைப்பு நடத்தினான் என்ற
பேச்சுக்கு ஆளாக என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆதலினால் சபாபதி அன்று செய்த
உதவி எங்கள் இருவரையும் தவிர்த்து யாருக்கும் தெரியாது. இன்று, இந்த தருணத்தில் உங்கள் எல்லோருக்கும்
மத்தியில் இதை பகிரங்கப்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏனெனில் அவர்
சுயநலம் பாராது உதவி செய்யவில்லையெனில் இன்று நானோ என் குடும்பமோ இங்கு
உயிருடனில்லை. எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று நா தழுதழுக்க பேசிவிட்டு
அமர்ந்தார்.
அந்த கூட்டத்திலேயே வயது மூத்தவராக இருந்த
சபாபதி வாத்தியாரின் சித்தப்பா நீலகண்டன், மேடைக்கு
கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்டார். ஒரு நாற்காலி கொடுக்கப்பட்டு அதில அமரவைத்த
பின்பு, தழுதழுத்த தன் குரலினால் பேச
ஆரம்பித்தார். "கூடியிருக்கும் அனைவருக்கும் என்
வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது அண்ணன் மகன் சபாபதி சிறு வயதிலிருந்தே
படிப்பில் சுட்டி. தன்னை விட வயது மூத்தோரிடம் மரியாதையாக பேசும் தன்மை
இருந்தாலும் தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதில்லை.
அவன் ஆசிரியர் பணியை விரும்பியே தேர்வு செய்தான். ஏனெனில் குழந்தைகளை ஒரு
பொறுப்புள்ள பிரஜையாக மாற்றும் சக்தி
ஆசிரியர்களிடத்தில் இருந்தது என்று அவன் உறுதியாக நம்பினான். மாணாக்கர்களை
நல்வழிப்படுத்துவதன் மூலம் தேசம் சுபிக்ஷமடையும் என்பது அவனது எண்ணம். அவன் விரும்பியது போலவே ஆசிரியர் பணியை
தெய்வீகமாக நினைத்து சுவீகரித்திருந்தான்.
இதை நான் கூறுவதற்கு காரணம், பள்ளி
முடிந்து பின்பு தன் குடியிருப்பின் அருகிலிருக்கும் வசதிவாய்ப்பற்ற
குழந்தைகளுக்கு பணம் ஏதும் வாங்காமலேயே வியாசம் கற்று கொடுத்தான்.
குறைவாக பேசினாலும் அவருக்கு நா
வரண்டிருந்தது. சிறிது நீர் அருந்தினார். தடிமனாக இருந்த மூக்கு கண்ணாடியை சரி
செய்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.
"சபாபதி எனது
அண்ணண் மகன் தான் என்றாலும் நான் அவனிடம் எள்ளளவும் பாசம் காட்டவில்லை.
சிறுவதிலேயே அவன் முதிர்ச்சியடைந்த மனிதனாக தன சுற்றத்தில் நன்மதிப்பை
பெற்றிருந்தான். அதேசமயம் எனது மகன் என் கோடானுகோடி கனவுகளை மெய்யாக்கவில்லை.
கூடாத சேர்க்கை அவனை படுகுழியில் தள்ளியது. போதைக்கு அடிமையாகிய அவன் இளம்
வயதிலேயே புத்தி சுவாதீனமின்றி மரித்துவிட்டான். இறைவன் எழுதிய இந்த சமத்துவமில்லா
கோட்பாடு எனக்கு மனக்கிலேசத்தை கொடுத்ததோடு
மட்டுமில்லாமல் இயலாமையினால் நான் சபாபதியை கண்டு பொறாமை கொண்டேன். அவரவரின்
வினைப்பயன்களே அவரவரின் பலாபலன்கள் என்பதை புரிந்துகொள்ள தவறி விட்டேன்.
முகத்திற்கு நேரே ஒரு முறை கூட அவனை பாராட்டியதில்லை. ஏன் அவன் இல்லாதபோது பொழுது
கூட அவனை பற்றிய பேச்சை லாவகமாக தவிர்த்தேன். பெற்ற பிள்ளையை இழந்து தவிக்கும்
இந்த பித்து பிடித்த மனதிற்கு அனைத்துமே கோணலாக தான் தெரிந்தது. இன்று எனக்கு அகவை
தொன்னூற்றி மூன்றை எட்டுகிறது. இன்று பழுத்த கிழமாக நிற்கிறேன். இளம் வயதிலேயே
சபாபதி முதிர்ச்சி பெற்றுவிட்டிருந்தான். அந்த முதிர்ச்சியை இப்பொழுதுதான் நான்
எட்டுகிறேன் என்று தோன்றுகிறது. சபாபதியின் புகழை அங்கீகரிக்கவில்லையே ஒழிய நான்
அவனை வெறுக்கவில்லை. அவனுக்கு நல்லாசிரியர் விருது மிகவும் பொருத்தமானது. ஏனெனில்
அவன் தனது வேலையை மிகவும் நேசித்தான். அதை ஊழியமாக எண்ணாமல் கடமையாக செய்தான்.
இந்த விருதுக்கு முழு தகுதியுடையவன் அவன். எனது மனதில் எந்த விகல்பமும் இல்லாமல்
நெஞ்சார வாழ்த்துகிறேன். விருது அவனை அலங்கரித்தது என்று சொல்லுவதை விட அவனுக்கு
விருது அளித்து விருது தன்னை அலங்கரித்துக்கொண்டது என்று கூறினால் மிகையல்ல" என்று கூறி தனது உரையை
முடித்துக்கொண்டார்.
அதற்கு பிறகு பேசவந்தவர்கள் அனைவருமே
சபாபதியே வெட்கப்படும் அளவுக்கு பாராட்டினார்கள். அரசுப்பள்ளியில் படித்த தன் மகன்
எந்த வித தனிவகுப்புகளுக்கும் செல்லாமல் IITயில் படிக்க
வாய்ப்பு கிடைத்ததற்கு சபாபதி ஆசிரியரின் தனிப்பட்ட பயிற்றுவிக்கும் முறையே காரணம்
என்று நன்றி தெரிவித்து கொண்டார். அண்டை வீட்டில் வசிக்கும் குமரேசன், சபாபதி தன வீட்டை சுற்றி தோட்ட
வளர்க்கும் பாங்கையும், சுத்தமாக
பேணுவதில் காட்டும் அக்கறையையும் சிலாகித்துக்கொண்டார். எதிர் வீட்டு பாக்கியம்
மாமி, சபாபதி தினமும் காக்கை குருவிகள் மற்றும்
கால்நடைகளுக்கு உணவளிப்பதையும் மனிதர்களை போலவே விலங்குகளிடத்தில் அவர் காட்டும்
அன்பு தன்னை வியக்க வைக்கிறது என்று புளகாங்கிதமடைந்தார். சபாபதி குடியிருக்கும்
ஊரகத்தின் தலைவர் வையாபுரி, தன்
பங்கிற்கு சபாபதியின் பொதுநலத்தை பாராட்டினார். ஊரக மன்றத்தில் அவர் எந்த
பொறுப்பும் அவர் வகிக்கவில்லையென்றாலும், தாமாகவே முன்வந்து சாலை போடுவதற்கும், கழிவு நீர் கால்வாயை சுத்திகரிப்பதற்கும்
கோவிலை புணரமைக்க நிதி திரட்ட உதவியது என பல உதவிகளை பட்டியலிட்டு அவரை தான்
மானசீகமாக குருவைப்போல மதிப்பதாக உணர்ச்சி ததும்ப பாராட்டினார்.
இவர்கள் அனைவருமே பேசி முடிக்கவும் மணி
ஒன்றை நெருங்கவும் சரியாக இருந்தது. பள்ளியின் தாளாளர் நன்றியுரை தெரிவித்து
விழாவை நிறைவு செய்தார். உயிரோடு இருக்கும் பொழுது உறவாடி உணர்வுகளை பகிர்ந்து
வாழத்தெரியாத நம்மை போன்று விழாவுக்கு வந்த அனைவருமே, வரிசையில் நின்று சபாபதியின்
புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு நகர்ந்தனர்.
நல்லாசிரியர் விருதின் அறிவிப்பு வரும்
சில நாட்களுக்கு முன்னர் மறைந்த சபாபதி, தன்
வாழ்நாளில் இதுவரை கேட்டிராத பாராட்டுக்களை கேட்காமலேயே அதே புன்முறுவலோடு
புகைப்படத்தில் உறைந்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக