வியாழன், டிசம்பர் 09, 2021

நகரம்

 


கிழக்கே உதித்திருந்த சூரியனின் வெளிச்சக்கீறல்கள் கண்ணுக்கு புலப்பட ஆரம்பித்திருந்தது. இரவு பெய்த பலத்த மழை நின்றாலும் கூட தூவானம் நின்றபாடில்லை. 


முந்தைய நாட்களின் கசடுகள் கரைந்து புத்தம் புது காலையாக விடியும் பலருக்கு மத்தியில் அந்த பெரியவருக்கு அது மீண்டும் மற்றொரு நாளாகவே விடிகிறது.  பூட்டிய ஹார்டவெர் கடையின் வாசலில் ஷட்டரை ஒட்டி படுத்திருந்த அவர் முழித்துப்பார்த்தார். மழைத்தூறலும் குளிர்காற்றும் அவரது உடலை பதம்பார்த்தன. கட்டியிருந்த சாரத்தை இழுத்து உடலைப்போர்த்திக்கொண்டார். எழுவதற்கு தெம்பும் இல்லை. மனமுமில்லை. அருகில் செயல்படும் கனரக தொழிற்சாலையின் வாசலில் கொட்டப்படும் அன்றைய பேப்பர் குப்பையை சேகரித்து எடை போட்டு வயிற்றை நிரப்பும் ஒரு எளிய ஜீவராசி. பெயர் தெரியாது. வீடும் உறவும் அற்றவர்களை அலட்சியம் செய்து பெயரை தெரிந்துகொள்ள விழையாத வசதியான இந்த சமூகத்தின் மீது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஹார்டுவேர் கடையை திறக்கும் வரைக்கும் படுத்தே கிடப்பார். கண்விழித்து முழித்து பார்த்தால் எவராவது வந்து எழுந்திருக்கச்சொல்லலாம். ஆனால் அதை விட முக்கியமாக வயிற்றை கிள்ளும் பசியை ஒத்திப்போட வேண்டி தலைமீது கட்டியிருந்த உருமாலை அவிழ்த்து முகத்தில் மூடிவிட்டு மீண்டும் உறங்க முயற்சித்தார்.   


தே காலை வேளையில், ஆறு முப்பத்துக்கு ஐபோனில் ஒலித்த குக்கூ அலாரத்தை, கௌதம், ஒரு கையால் அமர்த்திவிட்டு மறு கையால் 24 டிகிரியில் குளிர்வித்துக்கொண்டிருந்த ஹாயர் ஏசியை ஆஃப் செய்து   சோம்பலை நெட்டி முறித்துக்கொண்டான். துள்ளியோடும் இருபத்து ஐந்து வயது. மாதம் ஆறு இலக்க சம்பளம். எழுவதற்கு தெம்பும் மனமும் இருந்தாலும் சோம்பலில் இன்னும் சில நிமிடங்கள் கண்ணை மூடி உறங்க முயற்சித்தான். கண்களை கசக்கி கொண்டான். க்யுல்ட்டை விலக்கிக்கொண்டு அந்த பிரமாண்ட வேலைப்பாடுள்ள மரக்கட்டிலை விட்டு இறங்க யத்தனித்தான். கால்களை கிரானைட் தரையில் வைக்கும்போது சில்லென்று, ஊசி குத்துவது போல அவன் உடம்பில் குளிர் ஏறியது. அருகில் இருந்த பஞ்சு போன்ற காலுறையை அணிந்துகொண்டான். ஆட்டோமெட்டிக் பல் விளக்கும் கருவியில் தனது ஆறடி உயரத்தை கண்ணாடியில் ரசித்துக்கொண்டே பல் துலக்கினான். வலது கையால் பல் துலக்கும் போதே ஒருக்களித்து இடது கையின் முஷ்டியை முறுக்கி தசைகள் தெரியும் தனது புஜங்களை ரசித்தான்.  


"பெரியவரே எந்திரிங்க" என்று குரல் கேட்டு விழித்து பார்த்தார் அந்த பெரியவர். ஹார்டவெர் கடை வாசலை கூட்டி பெருக்கும் பெண்மணி வந்திருந்தாள். அவள் வந்துவிட்டாளானால் மணி ஏழரை ஆகிவிட்டது என்று அர்த்தம். அடுத்தது என்ன செய்வது என்று பெரியவருக்கு தெரியவில்லை. எந்திரித்து இடத்தை காலி செய்ய வேண்டும். மெதுவாக எழுந்திரித்து வெளியே நடக்க ஆரம்பித்தார். பசி வயிற்றை கிள்ளியது. போட்டிருந்த அழுக்குச்சட்டையில் இரண்டு ரூபாய் மிஞ்சியிருந்தது. சைக்கிளில் வரும் சுக்கு காஃபி குடிக்க வேண்டுமென்றாலே எட்டு ரூபாய் கேப்பான். அருகிலிருந்த அடிபம்பை நோக்கி வெறுங்காலில் நடந்தார். தேங்கியிருந்த நீரை குடிக்கும் மாடை சத்தம் போட்டு விரட்ட முயன்றார். இவரிடம் காசில்லை என்று விஷயம் தெரிந்தோ என்னமோ மாடு கூட நகர மாட்டேன் என்று முரண்டு பிடித்தது. கீழே கிடக்கும் குச்சியை எடுத்து விரட்டினார். மாடு அசைந்து சென்ற பிறகு, பெரியவர் அடிபம்பை பலம் கொண்ட மட்டும் பிரயத்தனம் செய்து அடித்து தண்ணீர் வரவைத்து குடித்தார். தொண்டையை தாண்டி தண்ணீர் வயிற்றை சென்று அடைந்து அவரது பசியை கொஞ்சம் கொஞ்சமாக தணித்தது. 

 

கௌதமுக்கு அந்த வெனிலா ப்ரோடீன் ஷேக் கொஞ்சம் உவப்பாக இருந்தது. நேற்றைய சாக்லெட் பிளேவர் ப்ரோடீன் ஷேக்கை விட தான் இதை அதிகம் விரும்புவதாக உணர்ந்தான். ட்ரெட் மில்லில் ஓடியதால் வியர்வை துளிர்த்திருந்தது. ஓடிய அளவிற்கு 560 கலோரியை அவன் கரைத்திருப்பதாக அந்த வெல்கெர் ட்ரெட்மில் கணக்கு காட்டியது. மனதுக்குள் கணக்குபோட்டுக்கொண்டான். இப்பொழுது குடித்த ஷேக் 390 கலோரி. அதை விட 170 கலோரி அதிகமாக கரைத்திருக்கிறோம் என்பதில் அவனுக்கு திருப்தி. காலை உணவாக அவித்த முட்டைகள் 3 மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என்று முடிவுசெய்துகொண்டான். கழுத்தில் வழிந்த வியர்வையை தனது தேங்காய் பூ டவலால் துடைத்து விட்டான். லேசாக மூச்சு வாங்குவதை ஆசுவாசப்படத்திக்கொள்ள ஒரு சில நிமிடங்கள் ஆளுயர கண்ணாடியில் தன்னை உற்று பார்த்துக்கொண்டு 

குளிர்வித்து கொண்டிருக்கும் ஏசியின் கீழே நின்றுகொண்டான். ஓடுவதற்காக மட்டுமே உபயோகப்படுத்தும் அந்த நைக் ஷூவை கழற்றி கவரில் சுருட்டி தனது ஜிம் பேக்கில் வைத்துவிட்டு ஏழாவது மாடியிலிருந்து கீழே இறங்கும் பொருட்டு லிப்ட் பொத்தானை சொடுக்கினான். 


ண்ணீர் குடித்த தெம்பில் பெரியவர் அந்த கனரக தொழிற்சாலையை அரை மணி நேரத்தில் வந்தடைந்தார். விதவிதமாக கார்கள் நிப்பாட்டப்பட்டிருக்கும் அந்த கார் ஷெட் தான் அவர் ஓய்வுகொள்ளும் இடம். இன்னும் சிறிது நேரத்தில் அந்த ஷெட் முழுவதும் கார்களால் நிறைந்துவிடும். அருகில் பரந்து விரிந்திருந்த ஆலமரம் அந்த இடத்திற்கே பர்வத மலை போன்ற நிழலை கொடுத்துகொண்டிருந்தது. புள்ளினங்களின் க்ரீச்கள், ஆற அமர உட்கார்ந்து அசை போடும் மாடுகள், செல்லும் வழியெல்லாம் முகர்ந்து பார்த்துக்கொண்டே ஓடும் நாய்கள், அவ்வப்போது தோகை விரித்தாடும் மயில்கள் என ரசிக்க ஆயிரம் இருந்தும் வண்டியை நிறுத்திய வேகத்தில்  கட்டிடத்தை நோக்கி ஓடும் மனிதர்களை பார்க்கும் போது இவருக்கு விந்தையாக இருக்கும். இன்னும் சற்று நேரத்தில் தூய்மைப்பணியாளர்கள் வந்து கொட்டும் பேப்பரை சேகரிக்கத்தொடங்க வேண்டும். சில நேரங்களில்  கெட்டியான பிளாஸ்டிக் மற்றும் உடைந்த இரும்புத்துண்டுகள் போன்றவை கூட வந்து விழும். அவ்வாறான நாட்களில் இன்னும் ஒரு இட்லியோ அல்லது ஒரு பருப்பு வடையையோ  அதிகமாவோ வாங்கி சாப்பிடலாம். மதியம் சாப்பிடப்போகும் அந்த ஒரு தட்டு உணவை மனதில் நினைத்துக்கொண்டே ஆவலுடன் தன் பார்வையை அந்த குப்பைகொட்டப்படும் இடத்தை நோக்கி நிலைகுத்தி நிற்கச்செய்தார்.


குளித்து முடித்து உற்சாகமாக உடைகளை அணியத்தொடங்கியிருந்தான் கௌதம்.  முஸ்லி சில்க் ஷர்ட் அவனை இன்னும் எடுப்பாக காட்டியது. முழுக்கை சட்டையின் கை கஃப் பட்டன்களை  அணிந்துகொண்டே வட்டமாக இருக்கும் அந்த ரோஸ்வுட் டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். முன்னமே அவித்து தயாரகியிருந்த முட்டைகளை வெளியில் எடுத்து உரிக்கத்தொடங்கினான். அருகிலிருந்த அலெக்சாவை விழித்து இன்றைய செய்திகளை சொல்லுமாறு பணித்தான். காதுகளை அலெக்ஸாவுக்கும், கண்களை ஸ்மார்ட்போனிலும், கைகளை முட்டையிலும் மனதை அன்று அலுவலக நண்பர்களுடன் பார்ட்டிக்காக செல்லும் ப்ரன்ச் சாப்பாட்டிலும் குவித்தான். அன்லிமிட்டட் சாப்பாட்டில் வழங்கப்படும் கடல் உணவு வகையறாவை மட்டுமே சாப்பிட வேண்டும் இல்லையென்றால் வயிற்றில் சதைப்பிடிப்பு விழுந்து விடும் என்பதில் கவனம் கொண்டான். வெள்ளை கருவை மட்டுமே எடுத்துக்கொண்டு மஞ்சள் கருவை குப்பையில் கொட்டினான்.  அலுவலகத்திற்கு கிளம்பும் பொருட்டு 27ஆவது மாடியில் இருக்கும் தனது பிளாட்டிலிருந்து ஜிவ்வென்று லிப்ட்டில் கீழிறங்கத்தொடங்கினான். 


ணி பத்தை தாண்டியிருந்தது. அந்த அலுவலகத்திலிருந்து இரு நபர்கள் டீ கேனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர்.  அலுவலகத்திலிருக்கும் ஊழியர்களுக்கு போக டீ மீதமிருந்தால் அந்த நபர்களுக்கு அன்று மனதிருந்தால் அந்த பெரியவரை கூப்பிட்டு டீயை ஒரு கிண்ணத்தில் ஊற்றுவர்.  சூடு ஆறியிருந்தாலும் பசிக்கிற வாய்க்கு அது அமிர்தமாகவே அந்த பெரியவருக்கு இருந்தது. ஆவலுடன் அந்த இரு நபர்கள் இவரை நோக்கி வருகின்றனரா என்று  பார்த்துக்கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த இரு நபர்கள் அவர் நோக்கி வந்தனர். கேனை கவிழ்த்தது அரை க்ளாஸ் டீயை அவருக்கு ஊற்றினர். அவர்கள் டீ கேனை நிமிர்த்துவதற்குள் அந்த டீயை குடித்துவிட்டார்.  அந்த இனிப்பு சுவை அவருக்கு நாடி நரம்பெல்லாம் சென்று சற்றே தெம்பை அளித்தது. அவர் எதிர்பார்த்தது போலவே சரியாக பத்தரை மணிக்கு துப்புறவு ஊழியர்கள் வந்து பேப்பரை கொட்டினர். அவர்கள் செல்லும்வரை அமைதியாக இருந்துவிட்டு மெதுவாக எழுந்து செல்லலானார்.


புதிதாக சேர்ந்திருந்த  மூன்றே மாதங்களில் அவனுக்கு ஆன்சைட் வாய்ப்பு கிடைத்ததன் பொருட்டு இந்த உபச்சார விழாவை அலுவலக நண்பர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தான்.  அன்றைய ஆன்சைட் கால்களின் நிலுவையில் உள்ள வேலைகளை முடிந்தளவு முடித்துவிட்டு பதினோரு மணியளவில் அந்த நட்சத்திர ஹோட்டலை அடைந்து வேலட் பார்க்கிங்கிற்கு காரை கொடுத்துவிட்டு அனைவரும் அந்த பிரமாண்ட வாயிலை நோக்கி நடந்தனர். சலாம் அடித்து வாயிற்கதவை திறந்த காவலாளியை சற்றும் அலட்சியம் செய்யாமல் அனைவரும்  உணவு அறையை நோக்கி விரைந்தனர். விருந்து என்ற காரணத்தினால் அனைவரும் காலை உணவை குறைவாகவே எடுத்திருந்தனர். அனைவரும் ஒருமுறை அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் உணவுகளை கண்களால் மேய்ந்துவிட்டு வட்டமாக இருந்த போர்சிலின் தட்டுக்களை கையில் எடுத்துக்கொண்டனர். மெக்ஸிகன், கொரியன்   உணவுகளை ருசிக்கும் பொருட்டு தட்டில் எடுத்துவைத்து அதன் சுவை பிடிக்காமல் தட்டுடன் அவற்றை அப்புறப்படுத்தி புது தட்டுக்களை கையில் எடுத்து வேறு புது உணவுகள் இருக்கிறதா என்று தங்கள் வேட்டையை மீண்டும் ஆரம்பித்தனர். 


ன்றைக்கும் இல்லாத அளவுக்கு அன்று அதிக அட்டைப்பெட்டிகள் அந்த குப்பைத்தொட்டியில் கொட்டிக்கிடந்தன. இன்று ஒரு நாள் நன்றாக சாப்பிடலாம் என்று அவர் மகிழ்ந்த நேரத்தில் இவ்வளவு சுமைகளையும் எவ்வாறு தூக்கி செல்லப்போகிறோம் என்ற கவலை மிதமிஞ்சி நின்றது. ஒருவாறாக தரையில் அனைத்தையும் விரித்து வைத்து அடுக்கிவைத்தார். அதை தலையில் சுமந்துகொண்டு அந்த பழைய பேப்பர் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இறுதி இலக்கை கண்களால் கண்ட பின் அதை நோக்கி ஓடும் மராத்தான் வீரர் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ அதே போன்ற உவகையை அந்த பழைய பேப்பர் கடையை பார்த்தவுடன் அந்த பெரியவர் கொண்டார். நா வறண்டு கால்கள் துவண்டு நடந்துகொண்டிருந்த அவர் சற்று வேகமாக நடக்கத்தொடங்கினார். சுமந்துவந்தவற்றை எடை போட்டபின் அவருக்கு 60 ரூபாய் கிடைத்தது. எப்பொழுதுமே முப்பது ரூபாய்க்கும் குறைவாக மட்டுமே கிடைக்கும் அவருக்கு இன்று சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. கையில் அந்த ரூபாய் தாள்களை வாங்கி முகர்ந்துபார்த்தபொழுது அவருக்கு மட்டும் உணவு வாடை அடித்தது. பசி இன்னும் வயிற்றை கிள்ளியது.  எப்பொழுதும் ஒரு கரண்டி கலவை சாதம் சாப்பிடும் அவர்,  வெகு நாள் கனவாக இருந்த அரை பிளேட் பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என்று சற்றே மகிழ்ந்து அந்த தெரு முனையிலிருக்கும் தள்ளுவண்டியை நோக்கி நடக்கலானார். கால்களில் தெம்பு கூடியிருந்தது. 


டல் உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்று முடிவு செய்திருந்த கௌதம், அங்கு பரப்பி வைத்திருந்த விதவிதமான உணவுகளை கண்டதும் சற்றே கட்டுப்பாடு இழந்து அளவுக்கதிகமாக உண்டான். அந்த நிகழ்வின் விளைவாக செரிக்காத உணவுகளை அவன் வாந்தி எடுக்கும் அளவுக்கு ஆகியது.  சிறிது நேரம் கழித்து ஐஸ்க்ரீம் மற்றும் கஸாட்டா போன்ற கேக் வகைகளை அனைவரும் உள்ளே தள்ளினர். லெதர் வாலெட்டில் வைத்த பில்லை எவ்வளவு எனறு பாராமலேயே கார்டை தேய்த்தான். ஐந்தாயிரத்து முன்னூறு என்று குறுஞ்செய்தி காட்டியது. கார் வாசலில் காத்திருக்க அனைவரும் அதில் ஆரோகணித்து அலுவலகம் நோக்கி கிளம்பினர். 


ந்த தெருவின் முனையில் இருந்த தள்ளுவண்டியை வந்தடைந்த பெரியவர், கூட்டத்தை பார்த்தவுடன் அரை பிளேட் பிரியாணி என்று மிகுந்த தயக்கத்துடன் ஆர்டர் செய்தார். ஒரு தட்டில் பிளாஸ்டிக் கவர் விரித்து பிரியாணி கிண்ணம் கவிழ்க்கப்பட்டு பெரியவரிடம் தட்டு நீட்டப்பட்டது. அறுபது ரூபாயை கொடுத்தபொழுது "கொஞ்சம், அந்தப்பக்கம் ஓரமாய் போய் சாப்பிடுங்க பெரியவரே" என்ற கடைக்காரர் கூறியதை செவிமடுத்து சற்று தள்ளி நின்று கொண்டார்.


கௌதமின் கார் அந்த பெரியவர் நின்றிருந்த அதே தெருமுனையை வந்தடையும் நேரத்தில் பெரியவர் சற்று ஒதுங்கி நின்று சாப்பிட யத்தனித்தார். வேகமாக திருப்பத்தில் திரும்பிய கௌதமின் கப்பல் போன்ற அந்த பென்ஸ் கார் பள்ளத்தில் ஒருமுறை ஏறி இறங்கியது. விஷ்போன் சஸ்பென்க்ஷன் உதவியுடன் உள்ளே மிக மெலிதான அதிர்வுதான் என்றாலும் வெளியே பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீர் அந்த பெரியவர் ஏந்தி நின்றிருந்த பிரியாணி பிளேட்டின் மீது சகதியுடன் சேர்த்து சிதறியது.  அவர் என்ன நடந்தது என்று உணரும் முன்னரே அந்த கார் கண்ணைவிட்டு மறைந்துவிட்டது. பெரியவருக்கு அழுகையாய் வந்தது. ஒரு முறை அந்த பிரியாணியை கிளறிப்பார்த்தார். முழுவதும் மண் கொட்டியிருந்தது. பிளாஸ்டிக் கவருடன் அதை குப்பையில் போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். 


ங்கிதம் இல்லாத அந்த பசி அவரின் வயிற்றை இன்னமும் பிராண்டி கொண்டிருந்தது. மிகவும் தளர்ந்த நடையுடன் அந்த அடிபம்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

கருத்துகள் இல்லை: