ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

Create a New Contact

"பேர் என்ன சார்" என்று கேட்டு பாசமாக போனில் சேமித்துக்கொள்கிறார்களோ என்று நினைத்தால், நம்மளைப்போன்ற அப்பிராணி ஊரில் இல்லை என்று அடித்துச்சொல்லலாம். போனையே எடுக்கக்கூடாது என்று தான் இந்த சேமிப்பு.

ஒரு சில வருடங்களுக்கு முன், பரவலாக எல்லோர் கையிலும் போன் இல்லாத காலங்களில், தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தால் எடுத்து பேசுவதில்லை என்று உறுதியுடன் பலர் இருந்தனர். இதுவே தவறு என்று என் அண்ணன் ஒரு முறை கூறினான். எப்படி என்றும் விளக்கினான். பெரியப்பா காலை வாக்கிங் போயிருக்கிறார். குறைந்தபட்சம் ஆறு ஏழு கிலோமீட்டர் நடப்பவர். கையில் போன் கிடையாது. திடீரென நெஞ்சுவலி. அருகில் இருப்பவரிடம் போன் வாங்கி அழைத்திருக்கிறார். உடனே அங்கு சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். க்ரெடிட் கார்ட், இன்சூரன்ஸ் அழைப்புகளுக்கு பயந்து போனை அட்டென்ட் செய்யவில்லை என்றால் உதவியை எதிர்நோக்கி நம்மை அழைத்தவருக்கு வினை புரிய முடியாமல் போயிருக்கும். அப்படியே க்ரெடி கார்ட் அழைப்பாகத்தான் இருந்தாலும்  அட்டென்ட் செய்து ஐந்து வினாடிகளில் நாசூக்காக அழைப்பை துண்டிக்க முடியாதா என்ன


சரி, தெரியாத நம்பருக்கு தான் இந்த தலைவிதி என்றால் தெரிந்த நம்பருக்கு இப்போதெல்லாம் இதே கதிதான். வசதியாக சேவ் செய்த நம்பரை சைலென்டில் போட்டுவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். ஒரு தகவல் கேட்பதற்காக போன் செய்து பார்த்தேன். எடுக்கவில்லை. இரண்டாம் முறையும் அதே. அருகில் இருந்தவரிடம் போன் வாங்கி அழைத்தேன். விடாக்கண்டனைப்போல. எதிர் முனை புத்திசாலி உடனே அட்டென்ட் செய்துவிட்டது. அழைத்தது நான் தான் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது வாயிலேயே பிஸியாகவும் இல்லை என்று வாக்குமூலம் வேறு. முப்பது வினாடிக்குள் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன். இந்த பழக்கம் பலபேரிடம் இருக்கிறது. பலர் வாயிலாக சொல்லவும் கேட்டிருக்கிறேன்.  இந்த ரகத்தை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்று தெரியவில்லை. 

"Strictly no talking. Whatsapp Only" என்கிற கும்பல் வேறு இப்போது. தூக்கத்தை ஒழித்து மீதமிருக்கும் 16 மணிநேரத்தில், அதாவது (வருடத்திற்கு 5760 மணிநேரங்கள்) நண்பர்களுடனோ, உறவினர்களிடமோ பேச நேரமில்லை என்று கூறும் பொய்யை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் வட்டத்தில் நாம் இல்லை என்ற கூற்றையாவது அனுமதிக்கலாம். ஆனால் கிளையண்ட் மீட்டிங், டீம் மீட்டிங் என்று டபாய்ப்பது கும்பி பாகத்திற்கு இட்டுச்செல்லும் வழியாகும். இங்கிலாந்து பிரதமர் கூட இந்த அளவுக்கு பிஸியாக இருப்பது போல் தெரியவில்லை. அப்படியே சூடம் அடித்து சத்தியம் செய்து பிசி தான் என்று நிரூபித்தால், இரண்டே காரணம் தான், ஒன்று டைம் மேனேஜ்மண்ட் தெரியவில்லை, அல்லது wrong person in wrong job.  முதல் காரணத்திற்கு ஒன்றும் செய்யமுடியாது. சுட்டுப்போட்டாலும் வராது.  இரண்டாவது காரணத்திற்கு ஓடுற வயசுல தான் ஓட முடியும்னு சொன்னாலும் பேசி சிரிக்கற வயசுல தான் அனுபவிக்க முடியும்ங்கிற உண்மையையும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஓடியாடி சம்பாதித்து அக்கடா என்று ஓய்ந்து உட்கார்ந்தபின் எதிர்முனைல ஆளே இல்லாதபோது கால் பண்ணி என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.  

காக்கை கூட பகிர்ந்து தான் உண்கிறது.

கருத்துகள் இல்லை: