கேரளத்தில் வரதட்சிணை கொடுமை
காரணமாக ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி படிக்க நேர்ந்தது. RIP என்று போட்டுவிட்டு அடுத்த வேலையை
பார்க்க மனம் ஒப்பவில்லை.
இந்தியா முழுவதும் புற்றுநோய் போல
வரதட்சினை ஊடுருவி இருந்தாலும், கேரளத்தில்
மிக மிக அதிகம். தனது வரம்புக்கு மீறி அதிக வரதட்சிணைகொடுத்து திருமணம் செய்து
கொடுக்காவிட்டால் பெண் வீட்டாரே வெட்கப்படும் அளவுக்கு, சமூகத்தில் வேருடன் ஊறிப்போயுள்ள
நச்சு. போலவே, கேரள வாடை வீசும் கன்னியாகுமரி
மற்றும் நாகர்கோவிலிலும் இந்த நோய் சாதாரணமாக பரவியுள்ளது.
படித்து முடித்தவுடன் ஒரு நல்ல
குடும்பத்தில் மணம் செய்து கொடுத்து தன்னுடைய பெண் ஒரு நல்வாழ்வு வாழ்வதை
பார்க்கத்தான் எந்த பெற்றோரும் விரும்புவர். அவ்வாறு, பிறந்தது முதல் திருமணம் செய்து
கொடுக்கும் வரை அடை காக்கும் கோழி போல பொத்தி போத்தி வளர்த்த பெண் மகவை, உடற்கூராய்வு செய்து கையில்
வாங்கும் பெற்றோரின் வலி மரணத்திலும் கொடியது. பெற்றவர்களின் உடல் அழியும் வரை
இந்த நினைவலைகள் அவர்களை ரணப்படுத்தி கொண்டே இருக்கும்.
இதில் எனது ஆற்றாமை எதுவெனில், ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளையும், டிஃபரன்ஷியல் கேல்குலஸ் போன்ற இன்ன
பிற வஸ்துக்களையும் கற்றுக்கொள்ள மாய்ந்து மாய்ந்து டியூஷன் வைத்து நமது
குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க முனையும் நாம், ஆளுமைத்திறன் பற்றி அவர்கள் தெரிந்தும் தேர்ந்தும்
கொள்ள வாய்ப்பளிக்க மறந்துவிடுகிறோம். இன்னும் சிலபேருக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கவே
இல்லை. ஒரு தனிமனிதன் தன்னுடைய சுய மரியாதையை இழந்து இரந்து வாழும் நிலைக்கு இதுவே
காரணமாகிவிடுகிறது.
தன் வாழ்நாள் முழுவதும் வெறும் ஒரு
அலகை மட்டுமே நம்பி வாழும் பறவை கூட ஒரு கட்டத்திற்கு
அப்பால் தன்னால் இவனை வெல்ல முடியாது என்று தெரிந்தும், தன்னை சீண்டுபவனை தன் அலகை கொண்டு
கொத்த முயலுகிறது. எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.
மாறாக, 18 வருடங்கள் கல்வி பயின்று வரும்
ஒரு பெண்ணால், தன்னுடைய சுயமரியாதையை, தன்முனைப்பை எது வரை சமரசம் செய்து
கொள்ள வேண்டும், எந்த இடத்தில் எதிர்த்து போராட
வேண்டும் என்று கற்று கொடுக்காமல் விட்டது, இந்த சமூகத்தின் ஆகப்பெரியகிகுற்றமாகும்.
இனிமேலும் அந்த வீட்டில் வாழ
முடியாது என்று பிறந்த வீட்டிற்கு திரும்பி வரும் பெண்ணை, பெற்றோர்கள் சமரசம் செய்து
மீண்டும் அனுப்பி வைப்பதை காட்டிலும் அரவணைத்து கொள்ளுதல் மிக நலம், ஏனெனில் குடும்ப வன்முறை தாளாது
தற்கொலை முடிவை எட்டும் அந்த பாவப்பட்ட அன்பிற்கினியாளை விட விவாகரத்தான பெண்
பெற்றோரின் அரவணைப்பில் உயிர் வாழ்கிறாள்.
எனக்கு கீழ் பயிற்சி எடுக்க வரும்
ஒவ்வொரு பெண்ணிடமும், நான் மீண்டும் மீண்டும்
வலியுறுத்தி சொல்வது, எப்பாடுபட்டாவது திருமணத்திற்கு முன்
சொந்தக்காலில் நில்லுங்கள். இதுநாள் வரையில் கேட்டதை வாங்கி கொடுக்கும் பெற்றோர்
உடனிருந்தனர். இனிமேல் வரப்போகும் வாழ்க்கைத்துணை அதுபோலவே இருக்கவேண்டும் என்ற
கட்டாயம் இல்லை, ஒரு சின்ன ஹேர் க்ளிப்
வாங்குவதற்கு கூட பணம் தரமாட்டேன் அது அநாவசியம் என்று வியாக்கியானம் பேசிவிட்டு, நாளொன்றுக்கு ஒரு பாக்கெட்
சிகரட்டை புகைக்கும் ஆண்களை நான் அறிவேன்.
என்னுடன் வேலை பார்த்த சக ஊழியர்
ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு செடி
கொடிகள், கீரைகள் அதன் பயன்கள் என்று தாவி
பின் தோட்டத்தில் விழும் இலைகளைச்சுத்தம் செய்வதில் வந்து நின்றது. ஒருமுறை கூட
தான் அதை சுத்தம் செய்ய முனைந்ததில்லை எனவும், அவ்வாறு செய்தால் அதன் பின் அந்த வேலை என் தலையிலேயே
விடியும் என்று கூறினார் அந்த பெருமகனார். இவரை நம்பி தன்னுடைய சொந்த பந்தங்களை
விடுத்து 1200 கிலோமீட்டருக்கு அப்பால் வாழ வந்த அந்த பெண்ணின் ஹேப்பினஸ்
இன்டெக்ஸ் நெகட்டிவில் ஏன் ஆழ்துளை கிணற்றில் கண்ணுக்கெட்டாதவாறு தான் இருக்கும்.
ஆளுமைத்திறனோடு வரும் கல்வியும்
அதன் பின் கொஞ்சமே கொஞ்சம் பணம் தரும் ஒரு வேலையும் அந்த பெண்ணுக்கு பெரு
மகிழ்ச்சியைக்கொடுப்பது மட்டுமல்லாமல் இங்கிதம் இன்றி நடக்கும் ஆணிற்கு எதிராக
போராடி தலை நிமிர்ந்து வாழச்செய்கிறது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று
கற்றுக்கொடுக்கவேண்டிய தருணமிது.
இவை எல்லாவற்றிற்கும் முதலில், கைகளில் துண்டு போட்டு மூடி
மாட்டிற்கு விலை பேசுவது போல வரதட்சிணை வாங்கி வாழ்க்கை நடத்துவது இரந்து பிழைப்பதற்க்கு
சமம் என்பதையும், ஒரு பெண்ணை எவ்வாறும் மதித்து
நடத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டிய மிக முக்கிய கடமையும், ஆண் பிள்ளையை பெற்றெடுத்த ஒவ்வொரு
பெற்றோருக்கும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக