செவ்வாய், ஜூன் 15, 2021

MARE OF EASTTOWN

 

இரண்டு மணி நேர படங்களை காட்டிலும் இதுபோன்ற binge watching சீரிஸ்களுக்கு பல மடங்கு அதிகமான உழைப்பை கொட்டிக்கொடுக்க வேண்டிருக்கிறது. கொஞ்சமும் பிசகு இல்லாத நேர்த்தியான திரைக்கதை இன்றியமையாததாகிவிடுகிறது. 8 மணி நேர எபிசோடிற்கு 8 மாதங்கள் மேலே உழைக்க வேண்டிதுள்ளது.  இடையிடையே வரும் வேறு வேலைகளால் சீரிசின் டெம்போவை இழந்து விடாமலும்  அந்த 8 மாதங்களில் கதையின் தொடர்ச்சி கரைந்து போகாமலும் ஒரு பறவை அடை காப்பதை போல இதனை அடை காத்து பிரசவிக்க வேண்டிதுள்ளது. சீரிஸ்க்கான இலக்கணமே முழுக்க முழுக்க வேறு.


அந்த இலக்கணத்திலிருந்து சற்றும் பிசிறாமல்
, ஒரு கொலைக்கான துப்பறியும் கதையின் ஊடாக கதாநாயகியின் வாழ்க்கை, அதனுடன் பின்னியிருக்கும் பல கிளைக்கதைகள் என்று ஒரு சிறு community வாழ்க்கையை அந்த community ன் அருகிலிருந்து பார்க்கும் உணர்வை கொடுக்க விழைகிறது இந்த Mare of Easttown.

கதையின் நாயகன் மற்றும் நாயகி கேட் வின்ஸ்‌லட். சோஃபாவில் ஒய்யாரமாய் சாய்ந்துகொண்டு ஒரு கையை தலைக்கு மேல் தூக்கி வைத்து படுத்திருக்கும் டைட்டானிக் கேட்டை எதிர்பார்த்தீர்களானால், you need to cut a sorry figure. ஒரு விவகாரத்தான அம்மாவாக, நான்கு வயது சிறுவனுக்கு பாட்டியாக, துப்பறியும் டிடெக்டிவாக, முதல் முறை துப்பாக்கியை கையில் பிடித்து ஆக்சன் காட்சிகளில், ஒன் நைட் ஸ்டேண்ட், பத்து வயது குறைந்த தனது ஜூனியருடன் ரொமேன்ஸ், தோழியின் மடியில் நிழல் தேடும் பயணி போல் என பன்முக கதாபாத்திரங்களில் 8 மணி நேரமும் அதகளம் செய்திருக்கிறார்.

ஒவ்வொரு எபிசோடும் 1 மணி நேரம். ஒன்று முடிந்ததும் அடுத்தது என்ன என்று ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு, அந்த எபிசோடின் இறுதியில் மர்ம முடிச்சுகள்.

அணைகட்டமுடியாத அளவு உணர்வுகளை மனதினுள் தேக்கிவைத்து அவை எந்தநேரத்திலும் கரைபுரண்டு வெடித்து பாயலாம் என்கிற அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு இறுக்கத்தோடு உலவுகிறார்கள். No wonder why there is gun shooting in school and churches.

கேட்டின் கணவர், மகன், மகள், அம்மா, நண்பர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பரந்து விரியும் கிளைக்கதைகள், கொலையாளி யார் என்ற முடிச்சை அவிழ்ப்பதற்க்கு அதன் போக்கில் நெருடலின்றி உதவி செய்கின்கின்றன.

சீரிசின் கரு, ஒரு கொலையை துப்பறியும் கதை தான் என்றாலும், அது பேசும் பொருளாக எடுத்திருப்பது, அவர்களின் வாழ்வியலை. திருமணம் விவாகரத்து, குழந்தை வளர்ப்பு, affair, ஓரினச்சேர்க்கை, பாக்கெட் மணிக்காக விபச்சாரம் செய்யும் மாணவிகள், போதைப்பொருள் கலாச்சாரம், குடும்ப உறவு, அதில் அம்மாவென்றாலும் மகனென்றாலும் மற்றவருக்கு அவர்கள் கொடுக்கும் personal space என அவர்களின் சமூக கட்டமைப்பை அதனால் ஏற்படும் விளைவுகளை நுண்நோக்கி கொண்டு பார்வையாளருக்கு நெருடல் தராமால் கதையின் போக்கில் ஆராய்ந்து முடிவை நம்மிடமே விட்டுவிடுகிறது.

சீரிசில் நகைச்சுவையை குறையின்றி அளித்திருப்பது கேட்டிற்கும் அவரது 80 வயது அம்மாவிற்கும் நடக்கும் சிறு சிறு உரையாடல்கள். நுகர்வு கலாச்சாரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு எல்லோருமே materialistic ஆக இருக்கிறார்கள். ஒரு சிறு தொழிற்சாலைக்குள் இயங்கும் அளவுக்கு உள்ள ஒரு பெரிய இயந்திரத்தை ஒரே ஒரு வீட்டிற்க்காக ஹீட்டர் என்ற பெயரில் உபயோகிக்கும் இந்த மேற்கத்திய நாடுகள், வளரும் நாடுகளிடம் carbon emission ஐ குறைக்கும்படி கூறுவது விவாதிக்கப்படவேண்டிய நகை முரண்.   

சீரிஸ் முழுவதும் வரும் பின்னணி இசை அந்த எபிசோடுக்கான மனநிலையை பார்ப்போருக்கு எளிதில் கடத்திவிடும் ஒரு ரசவாத வித்தை. அதிலும் அந்த வயலின் இசை, சொல்லி விவரிக்கமுடியாத ஒரு melancholy உணர்வு. சுற்றி சுற்றி காட்டப்படும் கேட்டின் வீட்டில், நாமும் வாழ்வது போன்ற ஒரு பிரமையை தவிர்க்க முடியவில்லை

தேர்ந்தெடுத்த ஒரு பில்லியர்ட்ஸ் வீரரால் சொடுக்கிவிடப்படும் கழி மேசையின் மீதிருக்கும் பந்துகளை மூலைகளில் இருக்கும் குழிகளில் எவ்வாறு சரியாக விழவைக்கிறதோ, அதுபோல சீரிசின் கடைசி எபிசோடில் அதுவரை விடைதெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கான விடைகள் கனகச்சிதமாக வந்து மடியில் உட்கார்ந்துவிடுகின்றன.  

 கண்டிப்பாக தவற விடக்கூடாத சீரிஸ்.

என்னுடைய ரேட்டிங்கில் 10/10.

 

 

கருத்துகள் இல்லை: