கொரோனா தொற்றுக்கு முன்னாடி ஒரு மாதம் கொரோனா தொற்றுக்கு பின் மூன்று மாதம் என மொத்தம் நான்கு மாதம் அறுவடை செய்யாத காரணத்தினால் தலை மேல் பாரம் கூடியிருந்தது. மாவட்டத்தில் தொற்று கணக்கு 110 தான் என குறைத்து செய்தி வெளியிட்டிருந்த ஒரு நன்னாளில் தலையில் களை எடுக்க அருகில் இருக்கும் சலூனுக்கு சென்றிருந்தேன். 'வாங்க சார், இங்க உக்காருங்க' என்று சொன்னவர் மாஸ்க்கை, ஒரு வயது குழந்தை ஜட்டி போடும் ஸ்டைலில் போட்டிருந்தார். மூக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தது. இங்கே உவமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள குழந்தை ஆன் குழந்தை என கண்டுபிடித்தோருக்கு ஒரு ஷொட்டு.
'கட்டிங்கா? ஷேவிங்கா?' என்றவரிடம், 'முதல்ல மாஸ்க்கை ஒழுங்கா போடுங்க' என்றேன்.
கனமான முறைப்பு, மிதமான அலுப்பு என ஒரு வெரைட்டியாக கருப்பு துண்டை உதறி மேலே போர்த்தினார்.
'அண்ணே, மாஸ்க்கை ஒழுங்கா போடுங்கண்ணே' என்றேன், மறுபடியும்.
வேகாத வெயிலில், புழுக்கத்தில் லுங்கிக்குள் கனத்த ஒரு பட்டாப்பட்டியை போடும் வெறுப்பில் மாஸ்க்கை ஏற்றி விட்டார். அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் ஒரு வயது ஆன் குழந்தையை நியாபகப்படுத்தியது.
'உங்களை திருத்துறது என் வேலை இல்ல' என்று மனதுக்குள் நான் முனங்கிவிட்டு, முடி வெட்டும்பொழுதும் என்னுடைய N95 மாஸ்க்கை கழட்டாமல் அறப்போர் நடத்தினேன்.
சுற்றியும் நோட்டம் விட்டதில் கடைக்குள் இருந்த ஒருத்தருமே மாஸ்க் அணியவில்லை. ஏசி வேறு. ஒரு தும்மல் ஊடே இரண்டு இருமல் என்ற இலவச இணைப்பு.
ஐந்து நிமிடத்திற்கு மேலே இங்கே இருந்தால் காவேரி மருத்துவமனையில் சட்டையை கழட்டி CT ஸ்கேன் எடுக்க விடுவார்கள் என்று தோன்றியதால், ஆன வரைக்கும் போதும் என்று அவசரப்படுத்தி கீழிறங்கினேன்.
கடைக்குள் சென்றதிலிருந்து வெளியே கிளம்பும் வரைக்கும் நான் மாஸ்க்கை கழட்டவில்லை என்று கவனித்த ஒரு மேதகு, 'ரொம்ப பயப்படாதீங்க சார். தைரியமா இருங்க' என்று அறிவுரை சொரிந்தது.
சற்று யோசித்துவிட்டு, 'அதில்லண்ணே, நேத்து தான் எனக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துச்சி. அதான். வேறொன்னுமில்லே' என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.
வண்டியை ஸ்டார்ட் செய்யும்பொழுது நிமிர்ந்து பார்த்தால், பொதுக்கழிப்பறையில் உட்கார்ந்துவிட்டு பைப்பில் தண்ணீர் வராத காட்சியை மிரட்சியுடன் பார்ப்பது போல, அனைவரும் மாஸ்க்கை அணிந்து என்னை வெறிக்க வெறிக்க பார்த்தனர்.
ஊரு நல்லாருக்க ஒரு பொய் சொன்னா தப்பில்லை என்று கிளம்பிவிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக