திங்கள், ஜனவரி 06, 2020

கரையெல்லாம் செண்பகப்பூ


வாத்தியார் (சுஜாதா) “கற்றதும் பெற்றதும்” தொடரில் ஒருமுறை தனது நாவலான “கரையெல்லாம் செண்பகப்பூ” பற்றி குறிபிட்டிருந்தார். அந்த குறிப்பின் சாராம்சம் இதுவே. இனி எந்த இயக்குனர் வந்து கேட்டாலும் என் கதையை யாருக்கும் தருவதாயில்லை. நாவலில் கூறப்பட்ட கதை வேறு. அதை எடுத்த விதம் வேறு. இறுதியில் அந்த படத்தை பார்த்தபொழுது, ஒரு கதையை திரைக்கதையாய் மாற்றுவதால் அது எவருக்காகவெல்லாம்  சமரசம் செய்யப்பட்டு எவ்வாறு அகால மரணமடைகிறது, என்று மிகவும் வருந்தியிருப்பார்.  வாத்தியாரே வருத்தப்பட வைத்த அந்த கதையை படிக்கும் ஆவல் ஈசானிய மூலையில் ஒன்னரை டன் அழுத்தத்தில் மனதில் பதிந்திருந்தது.


அந்த அழுத்தம் ஒருவாறாக வெளிப்பட்டு ஒரு புனித புதனில் சுக்கிர ஹோரையில் அந்த நாவலையும் படத்தையும் அடுத்தடுத்து படிக்கவும் பார்க்கவும் வாய்ப்பமைந்தது. ஒரு அருமையான த்ரில்லர் நாவலை காசு போட்டு கரிசட்டியாக்குவது எப்படி என்று “Discovery Channel-How do they do it” சீரிசில் ஒரு எபிசோட் ஆக இதை எடுக்கலாம். அவ்வளவு டேமேஜ்.

நாவலின் ஆதி முதல் அந்தம் வரை விறுவிறுப்பாய் வைத்திருப்பதில் முக்கிய காரணியாகத்திகழ்வது வெள்ளி கதப்பாத்திரத்தின் உடல் கட்டமைப்பை பற்றிய வர்ணனையும், அதை கண்டு மோகிக்கும் கல்யாணராமனின் (கதாநாயகன்) எண்ணங்களும் தான். நாவலின் முதல் பக்கத்தில் போனால் போகுதென்று திருநீலத்தில் நிற்கும் ரயிலிலிருந்து இறங்கும் கதாநாயகனிடம் சுமை தூக்க பேரம் பேசும் வெள்ளியின் அழகை ?!! வர்ணிப்பதில் ஆரம்பிக்கும் வாத்தியார், முடிவில் 224வது பக்கத்தில் கல்யாணராமனை ரயிலேற்றி விடுவதற்கு வழியனுப்ப வரும் வரை வெள்ளியின் அழகை வர்ணித்திருப்பார். தலைவர் இன் ஃபுல் ஃபார்ம். வருடம் 1983.

இந்த வர்ணனையில் மயங்கி வாசகர்கள் வெள்ளியை ஒரு கருப்பு ஜெயமாலினி போன்றதொரு தோற்றத்தை மதியில் நினைத்துவைத்திருப்பர்.  திரைக்கதை சறுக்கிய இடம் இங்குதான். வெள்ளியின் கதாபாத்திரமாக தேர்ந்தெடுக்கபட்டு ?!! நடித்த நடிகை ஸ்ரீப்ரியா. அந்த காலத்து 14.2 KG சமையல் சிலிண்டர். முகம், கழுத்து, இடுப்பு என்று எல்லா விட்டமும் 40 இன்ச். இது இவ்வாறிருக்க, கதாநாயகன் தேர்வில் collateral டேமேஜ். நாய்கன் (எழுத்து பிழையில்லை) பிரதாப் போத்தன். “சார், உங்களுக்கு ஆம்பள குழந்தை பிறந்திருக்கிறது” என்று சொன்னாலும் சரி, “சார், நீங்க ஆம்பளையே இல்லை” என்று சொன்னாலும் சரி, மனுஷனிடம் ஒரே ரியாக்ஷன் தான். Such a முட்ட கலக்கி face. இவர்களுக்கு துணையாக!!! தங்கவேலு, மனோரமா, பீலி சிவம் போன்றோர் தங்களால் முடிந்த பங்களிப்பை !!! படத்திற்கு செய்துள்ளனர். கூடவே ஸ்நேகலதா என்றொரு மாடெர்ன் பொண்ணு கதாபாத்திரம். கிராமத்து வெள்ளியையே பலமாக வர்ணித்தவர், ஸ்னேகலதாவை எவ்வாறு சித்திரபடுத்தியிருப்பார் என்பதை வாத்தியாரின் விசிறிகள் புரிந்துகொள்ள முடியும். இந்த ஸ்னேகலதாவாக சுமலதா. இது இன்னொரு பஞ்சகவ்வியம்.

நாவலில் ஒன் லைனருக்கு பஞ்சமிருக்காது.
(உதாரணத்திற்கு ஜமீந்தாரிணி டைரி கண்டுபிடிக்கப்படும் இடத்தில்,
ஸ்நேகலதா, “நான் ஒரு திறந்த புத்தகம், படிக்கிறீங்களா?
கல்யாணராமன், “டைரியை மட்டும் படிக்கிறேன்”)

ஜமீன் பங்களா, புழுதி படிந்த கிராமம், வில்லுபாட்டு, ஆலமரப்பஞ்சாயத்து, ஈர மார்பு, என வர்ணனையில்  ஹெலிகாப்டர் ஷாட் ஆடியிருப்பார் சுஜாதா. அதை அப்படியே தரையில் போட்டு தேய் தேய் என்று தேய்த்து டரியிலாக்கியிருக்கின்றனர் நம்மவர்கள்.

நாவலின் ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் திகிலாக முடிந்து அடுத்த அத்தியாயத்தில் விடை, என்று ஒரு ரேஸ் குதிரை போல் அடுத்தடுத்து நகரும். அதை அவ்வாறு விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கதையை போஸ்ட் மார்டம் செய்தே தீருவது என்று வைத்து செய்திருக்கும் பெருமை மரியாதைக்குரிய இயக்குனரையே சாரும்.

இந்த திரைபடத்தை பார்த்தபின்புதான் சுஜாதா அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக ஒரு கேள்வி !!!

கருத்துகள் இல்லை: