செவ்வாய், மே 09, 2023

விடுதலை


தோராயமாக மூன்று நான்கு வருடங்களுக்கு ஒரு படம் என்ற விகிதத்தில் கடந்த பதினாறு வருடங்களில் மொத்தம் ஆறு படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். அதில் மூன்று படங்கள் தேசிய விருதை கொண்டு வந்திருக்கின்றன. பாலு மஹேந்திராவின் பட்டறையில் பயின்றவர் என்ற சொல்லைத்தாண்டி வெற்றிமாறன் தனக்கென ஒரு பட்டறையை, பயிற்சி களத்தை நிர்மாணித்திருக்கிறார்.



'உதயம் NH4' என்ற ஸ்க்ரிப்டை தூக்கிக்கொண்டு அலைந்தவர் தான், பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக களம் இறங்குகிறார். இவர் தீட்டிய பட்டையில் ஜொலித்த வைரம் தான் தனுஷ். 'பொல்லாதவன்' கழிந்து மூன்று வருடங்களுக்கு மேல் சலிக்காமல் உட்கார்ந்து எழுதிய 'ஆடுகளம்' தனுஷிற்கு முதல் தேசிய விருதை பெற்றுத் தந்திருக்கிறது. 'வடசென்னை' ஹேங்கோவரில் இருந்து வெளிவருவதற்காக எடுக்கப்பட்ட படம் 'அசுரன்'. ஒரு சேஞ்க்கு என்கிற சொலவடைக்கேற்ப எடுக்கப்பட்ட படம் அது. அதன் மூலம் மீண்டும் ஒரு தேசிய விருது தனுஷிற்கு.

இவரின் ஆறாவது படமாக விடுதலை. காமெடி நாயகன் சூரி இதில் முதன்மை கதாபாத்திரம். அதாவது சூரியின் பார்வையில் கதை விரிவடைகிறது. கனிம வளங்களை சுரண்ட நிர்மாணிக்கப்படும் சுரங்கத்தை எதிர்த்து நிற்கிறது மக்கள் படை இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவரை கைது செய்ய முனைந்து நிற்கும் போலீஸ். இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடுவது மலைவாழ் கிராம மக்கள். கடை நிலை ஊழியராக வந்து சேருகிறார் சூரி. இயல்பான மனிதத்தன்மையுடன் இருக்கும் சூரி அதன் காரணமாக தனது உயரதிகாரியை பகைக்க நேரிடுகிறது. இயக்கத்தின் தலைவரை பிடித்தார்களா என்பதைத்தாண்டி பதிவு செய்ய விளைகிறது இந்தப் படம்.

வெள்ளேந்தியான பாத்திரத்துக்கு சூரி கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். எத்தனை வித விதமான கதாப்பாத்திரம் கிடைத்தாலும் அந்த பாத்திரத்தின் சுவடைத்தாண்டியும் தெரிவது விஜய் சேதுபதிதான். இங்கேயும் வாத்தியார் என்கிற பாத்திரத்தில் விஜய் சேதுபதியாகவேத் தெரிகிறார். கறாரான போலீஸ் உயரதிகாரி வேடத்தில் சேத்தன். எவ்வளவு தான் மிடுக்காக நடந்துகொண்டால் ஒரு மென்மையான உணர்வை அதனைத் தாண்டியும் அவரிடம் வெளிப்படுகிறது. தமிழை சேத்தன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம். தமிழ் யாரென்று கேட்கிறீர்களா?. 'டாணாக்காரன்' இயக்குனர். தெரியவில்லையா? 'ஜெய் பீம்' இன்ஸ்பெக்டர். கடுமையான காட்டுமிராண்டி போலீஸ் கதாபாத்திரத்துக்கு இவர் அளவெடுத்து தைக்கப்பட்டவர். போலீஸ் வேலையை உத்தரவிட்டு சினிமா உலகிற்கு வந்தவர் என்பது கூடுதல் தகவல்.

சரி, பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் என்று க்ராப் ஏறிக்கொண்டிருந்த வெற்றிமாறனுக்கு விடுதலை எப்படி அமைந்திருக்கிறது. என்னை பொறுத்தமட்டில் கிராப் சற்றே இறங்கியிருக்கிறது. ஏனெனில் வெற்றிமாறன் இதில் மிஸ்ஸிங். ட்ரெயின் வெடிகுண்டு காட்சிகள், விசாரணை என்கிற பேரில் ஆண்களை அடித்து துன்புறுத்துவது, பெண்களை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்வது போன்றவற்றில் போதிய உணர்ச்சி கடத்தல் இல்லை. இதனையும் தாண்டி 'ஜெய் பீம்' கொடுமைகளை காட்சிப்படுத்திவிட்டது. மனம் மரத்துப்போய் விட்டதா என்றும் ஒரு ஐயம் இருக்கிறது. ஆயினும் இலங்கையில் IPKF மற்றும் தர்மபுரியின் வாச்சாத்தி போன்ற கொடூர சம்பவங்களை ஆவணப்படுத்துவதில் விடுதலை வெற்றி பெற்றிருக்கிறது. ட்ரெயினிங் போலீசாரின் இன்னல்களை ஆரம்பகட்டத்தில் பதிவு செய்வது போல் விரிந்த திரைக்கதை இறுதியில் அவர்களுக்கு எதிராக ஆங்காரம் கொண்டு அச்சறுத்துகிறது. ஒருவகையில் நிகழ்த்துக்கலையின் ஆச்சர்யமும் அதுதான். இளையராஜா என்பதற்காக பாடல்கள் அருமை என்று சொல்லிவிட முடியவில்லை. பின்னிசை மட்டும் சிறப்பு.

இரண்டாம் பாகத்திலாவது கதையின் முழுச்சாரமும் விரிந்து தென்படுவாரா வெற்றிமாறன் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

 

 

கருத்துகள் இல்லை: